தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் |
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது கிழக்கு கடற்ரை சாலையில் அமைந்த பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர். இந்தியாவின் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர் இதுவாகும். தற்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. பிரார்த்தனா கடந்து வந்த பாதை பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்.
சென்னை மக்களின் பொழுதுபோக்கு பகுதியாக மாறியது கிழக்கு கடற்கரை சாலை. பொழுதுபோக்கு பூங்காக்கள், ரெஸ்ட்டாரெண்டுகள், பார்கள், பப்புகள் என நவீன இளைஞர்களின் கனவு ஏரியாவாக மாறிய பிறகு அங்கு டிரைவ் இன் தியேட்டர் அமைக்கும் யோசனை தொழிலதிபர் என்.தேவநாதனுக்கு உருவானது. அதன்படி 1990ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் உருவானது.
இந்த தியேட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கும் இந்த நவீன வசதி மக்களுக்கு பிடித்து விட்டது. இதனால் அதை தொடர்ந்து பிரார்த்தனா தியேட்டர் அருகிலேயே ஆராதனா என்ற உள்ளரங்க தியேட்டரும் கட்டப்பட்டது. இதில் 500 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. அருகிலேயே ரெஸ்ட்டாரெண்டும் கட்டப்பட்டது.
மக்கள் இந்த தியேட்டரில் டிக்கெட் எடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தார்கள். தினமும் 2 காட்சிகள் திரையிடப்பட்டது. அவை பெரும்பாலும் தமிழ் படங்களாக இருந்தது. புகழ்பெற்ற ஆங்கில படங்கள், இந்தி படங்களும் திரையிடப்பட்டது. திரைப்படத்தை தயாரித்தவர்கள் தங்கள் படம் பற்றி மக்கள் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த தியேட்டரை பயன்படுத்தினார்கள். பல படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்தது. குறிப்பாக சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
கொரோனா காலத்துக்கு முன்பு வரை பிரார்த்தனாவும், ஆராதனாவும் சிறப்பான முறையில் இயங்கி வந்தது. கொரோனா காலத்தில் தியேட்டர் மூடப்பட்டதால் அதற்கு பெரிய சரிவு ஏற்பட்டது. கொரோனா முடிவுக்கு வந்த பிறகு மற்ற தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பிரார்த்தனா, ஆராதனா திறக்கப்படவில்லை. மக்கள் கூட்டம் குறைந்ததே இதற்கு காரணம். அதோடு இன்றைய தேதியில் பிரார்த்தனா, ஆராதனா அமைந்துள்ள நிலத்தின் மதிப்பீட்டை கணக்கிடும்போது தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானம் மிக மிக குறைவு என்பதால் அதை நிரந்தரமாக மூடிவிட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது அங்கு பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு உருவாகிறது.
ஏற்கெனவே சென்னையின் சினிமா அடையாளமாக இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவின் பெரும்பகுதி அடுக்குமாடி குடியிருப்பாகி விட்டது. ஜெமினி ஸ்டூடியோ, விஜய வாஹினி ஸ்டூடியோ, கற்பகம் ஸ்டூடியோ போன்றவை குடியிருப்பாகவும், மருத்துவமனைகளாகவும், நட்சத்திர ஓட்டல்களாகவும் மாறிவிட்டது. சாந்தி, ஆனந்த், ஏவிஎம் ராஜேஸ்வரி, நேஷனல் உள்ளிட்ட பல ஐகான் தியேட்டர்களும் இடிக்கப்பட்டு விட்டது. சென்னை நகரின் சினிமா அடையாளங்கள் மறைந்து வருவது திரையுலகினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.