நடிகர் விஜய் தற்போது முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு என்கிற படத்தில் நடித்துள்ளார், இந்தப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். அதேபோல நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் டைரக்ஷனில் துணிவு என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வரும் பொங்கல் பண்டிகையில் ஒரே சமயத்தில் ரிலீசாக இருக்கின்றன.
வீரம், ஜில்லா படங்களைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மீண்டும் மோதுவதால் இரு தரப்பு ரசிகர்களிடமும் மட்டுமல்லாது படத்தை வெளியிடும் தியேட்டர்கள் தரப்பிலும் இப்போதுவரை பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் வாரிசு, துணிவு இரண்டு படங்களுமே நன்றாக ஓடட்டும் என நடிகர் விஜய் கூறியதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து அவரது சகோதரராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாம். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது குறித்து கேட்டபோது, “நாங்கள் படப்பிடிப்பில் இருந்த சமயத்திலேயே இந்த தகவல் விஜய்யின் காதுக்கும் வந்தது. அப்போது 'ஹே ஜாலி'.. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகிறது.. அஜித் என்னுடைய அன்பு நண்பர். துணிவு, வாரிசு இரண்டு படங்களும் நன்றாக ஓடட்டும்” என்று தனது மகிழ்ச்சியை விஜய் வெளிப்படுத்தியதாக ஷாம் கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சில ரசிகர்கள் இவர்கள் இருவரின் படங்களும் ஒன்றாக இடம்பெற்றுள்ள பிளக்ஸ் பேனர்களை சில தியேட்டர்களின் முன் கட்டி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.