
சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ்
மார் 02, 2026
Advertisement
ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் தயாரிப்பில், விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள படம் "ஓ பட்டர்பிளை". இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வரும் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதை முன்னிட்டு படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நிவேதிதா சதீஷ் பேசியதாவது: நான் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. பத்து படங்களில்தான் நடித்திருக்கிறேன். கதையை தேர்வு செய்து நடிப்பதால்தான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன்.
"கேப்டன் மில்லர்" படத்திற்கு பிறகு உடல் ரீதியாக மன ரீதிகாக பின்னடைவை சந்தித்தேன். சினிமாவை விட்டுவிட்டு வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசித்தேன். ஒரு பெரிய ஆபரேஷன் நடந்து மருத்துவமனையில் இருந்தேன். அப்போதுதான் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது. நான் அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் இந்த படத்தின் கதையும் எனக்கு பொருத்தமாக இருந்தது. என்றாலும் மருத்துவமனையில் இருந்து திரும்ப 2 மாதங்கள் ஆகும் என்றேன். அதுவரை காத்திருக்கிறோம் என்றார்கள். அவர்கள் தந்த உற்சாகத்தில் 10 நாளில் மருத்துவமனையில் இருந்து திரும்பினேன்.
சினிமாவில் உருவக் கேலி, நிறக்கேலி நிறைய இருந்தாலும் அப்படியான எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள வைக்காமல் என்னை ரொம்பவே கவனித்துக் கொண்ட டீம் இந்த படத்தினுடையது. இந்த படம் எந்த படத்தின் ரெபெரன்சும் அல்ல. இந்த படம் இனி வரப்போகும் படங்களுக்கு ரெபெரன்சாக இருக்கும். ஒவ்வொரும் கடந்து போகும் உணர்வுகளை பேசுகிற படமாக இருக்கும். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!