
பிளாஷ்பேக்: எம்ஜிஆர் இறந்ததால் தோல்வி அடைந்த படம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நிஜத்தில் இறந்த பின்னரும்கூட பல ஆண்டுகள் அதை ஏற்றுக் கொள்ளாமல் உயிரோடு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தவர்கள் நிறைய உண்டு. அப்படியான நிலையில் அவர் சினிமாவில் இறந்து விடுவது போல் காட்சி வைத்தால் அதை எப்படியான விழைவை ஏற்படுத்தும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக இருந்த படம் "பாசம்".
எம்ஜிஆர் காமினேஷனில் பல வெற்றிப் படங்களை கொடுத்த டி.ஆர்.ராமண்ணாதான் இந்த படத்தை இயக்கினார். எம்ஜிஆருடன் கல்யாண குமார், சரோஜாதேவி, டி.ஆர்.ராஜகுமாரி, எம்-.ஆர்.ராதா, அசேகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கதைப்படி எம்ஜிஆர் தனது தாயின் மீது தீராத அன்பு கொண்டவர். சிறுவயதில் தற்செயலாக ஒரு கொலை வழக்கில் சிக்கி சீர்திருத்த சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து விடுதலையாகும் அவர் தனது தாயையும், தம்பியையும் தேடி அலைகிறார். கடைசியாக கண்டுபிடிக்கிறார். ஆனால் தம்பி அரசு உயர் பதவியில் இருக்கிறார். அவனோடு தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதனால் கொலைகார பட்டம் கொண்ட எம்ஜிஆர் தூரத்தில் இருந்தே அன்பை பொழிகிறார். சில பல பிரச்னைகளுக்கு பிறகு தாய் இறந்து விட அவருடனேயே எம்ஜிஆரும் இறந்து விடுவார் என்பதுதான் படத்தின் கதை.
எம்ஜிஆர் இறந்து விழும் காட்சியை ரசிகர்கள் ஏற்கவில்லை. பலர் கிளைமாக்சிற்கு முன்பாகவே தியேட்டரை விட்டு வெளியேறினர். இதனால் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு எம்ஜிஆர் தான் இறப்பது போன்று நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்.
எம்ஜிஆர் இறந்து போகும் இன்னொரு படம் "மதுரை வீரன்". ஆனால் அந்தப் படம் வெற்றி பெற்றது. காரணம் மதுரை வீரன் & பொம்மி என்கிற நாட்டுப்புற கதை தமிழகம் அறிந்த கதை. அதில் மதுரை வீரன் மாறுகால் மாறுகை துண்டிக்கப்பட்டு இறந்து போவான் என்பது அனைவருக்கும் தெரிந்ததால் அதில் அவர்கள் எம்ஜிஆரை, மதுரை வீரனாக மட்டும் பார்த்தார்கள். மதுரை வீரன் இறப்பதை ஏற்றுக் கொண்டார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!