ரிப்பீட் ஷு,Repeat shoe

ரிப்பீட் ஷு - சினி விழா ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நெட்கோ ஸ்டுடியோஸ்
இயக்கம் - கல்யாண்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - பேபி பிரியா கல்யாண், யோகி பாபு, திலீபன்
வெளியான தேதி - 14 அக்டோபர் 2022
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி படங்களைக் கொடுத்தால் ரசிகர்களைக் கவர முடியும் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அதிலும் கடந்த சில வருடங்களில் குழந்தைகள் கடத்தல் என்பதைய மையப்படுத்திய படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் வந்துள்ள மற்றுமொரு படம் இது.

'குலேபகாவலி, ஜாக்பாட்' படங்களை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். முந்தைய படங்களில் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்தவர் இந்தப் படத்தில் ஒரு சிறுமியை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இப்படத்தைக் கொடுத்திருக்கிறார். 'டைம் டிராவல்' என சயின்ஸ் பிக்ஷன் ஆக ஆரம்பிக்கும் படத்தை குழந்தைக் கடத்தலுடன் சேர்த்து கொண்டு போய் முடித்திருக்கிறார்.

பேபி பிரியா கல்யாண் செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் ஒரே மகள். அம்மா இல்லாமல் வளர்ந்த பிரியா, குடிகார அப்பாவையும் சேர்த்து ஒரு அம்மா போல பார்த்துக் கொள்கிறார். பள்ளிக்குச் செல்லும் நேரம் போக, கடையில் செருப்பு தைக்கும் வேலைகளைச் செய்கிறார். எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கும் அந்தோணி குடிப்பதற்காக தனது மகள் பிரியாவை பணத்திற்காக விற்றுவிடுகிறார். புரோக்கர்கள் மூலம் கை மாறும் பிரியா சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் கும்பலிடம் போய் சேர்கிறார். பிரியா தைத்து கொடுத்த ஒரு ஷு-தான் தனக்கு ராசியாக அமைந்தது என நினைக்கும் யோகி பாபு, பிரியா கடத்தல் பற்றி அறிந்து அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆரம்பக் காட்சிகள் டைம் மிஷின் என ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாகவும், பேபி பிரியா, அந்தோணி வரும் காட்சிகள் சென்டிமென்ட் படமாகவும், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகளாகவும், டேங்கர் லாரிகளில் குழந்தைக் கடத்தல் என ஒரு த்ரில்லர் படமாகவும் கலந்த ஒரு படம் இது. நேற்று வெளியான 'ஆற்றல்' படம் கூட இப்படிப்பட்ட கலவையான ஒரு படம்தான். எங்கேயோ இடிக்குதே…

படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அவருக்குத் துணையாக ரெடின் கிங்ஸ்லி, பாலா இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமாகவே இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதெல்லாம் எப்படி நகைச்சுவையில் சேரும்.

'ரிப்பீட் ஷு' என படத்திற்குப் பெயர் வைத்துவிட்டு, அந்த டைம் டிராவல் ஷுவைக் கண்டுபிடிக்கும் திலீபனை படத்தின் ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் மட்டுமே கொண்டு வருகிறார்கள். அந்த ஷு ஏதோ சாதனை செய்யப் போகிறது என்று பார்த்தால் கிளைமாக்சில் மட்டுமே அதற்கனெ ஒரே ஒரு காட்சியை வைத்து படத்தை முடித்துவிட்டார்கள்.

படத்தை மொத்தமாகத் தாங்கியிருப்பவர் பேபி பிரியா கல்யாண். பள்ளியில் ஆர்வத்துடன் படிக்கும் ஒரு சிறுமி. அம்மா இல்லாமல் வளர்ந்த சோகம், எப்போது குடித்துவிட்டு உருண்டு கிடக்கும் அப்பா அந்தோணி, பள்ளி நேரம் போக கடையில் செருப்பு தைப்பது, தங்கள் கடையை பெரிய கடையாக மாற்ற வேண்டும் என்ற கனவு என ஒவ்வொரு காட்சியிலும் எக்ஸ்பிரஷன்களை அள்ளிக் கொடுக்கிறார். விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக் கொண்ட பின் தன்னைப் போலவே அங்கு பல சிறுமிகள் இருக்கிறார்கள், ஆனால், எதற்காக இருக்கிறார்கள், தன்னை எதற்காகக் கடத்தினார்கள் என்று கூடத் தெரியாமல் அங்கிருந்து தப்பிக்க அவர்களுக்கு ஊக்கம் தருகிறார்.

படத்தின் மேக்கிங் ரொம்ப சுமாராகவே இருக்கிறது. இரண்டு படங்களை இதற்கு முன் இயக்கிய ஒரு இயக்குனரின் படம் போல இல்லை.

பெண் குழந்தைகள் கடத்தலைப் பற்றிக் காட்டினால் அது பரபரப்பை ஏற்படுத்தி சென்டிமென்ட்டை அதிகரித்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அவற்றை அவ்வளவு டீடெயிலாகக் காட்டுகிறார் இயக்குனர். குழந்தைகள் மீது நடக்கும் கொடுமைகளும் பதற வைக்கிறது. ஒரு எச்சரிக்கை வாசகத்தையாவது அந்தக் காட்சிகளில் காட்டியிருக்கலாம்.

டிவி சேனல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பற்றி புகைப்படங்களோ வீடியோக்களோ முக அடையாளம் தெரியும்படி காட்டக் கூடாது என்ற சட்டம் உண்டு. சினிமாவாக இருந்தாலும் அதில் பத்துப் பதினைந்து வயது சிறுமிகளை இப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக் கடத்துகிறார்கள் என்பதை அவர்கள் முகம் தெரியும் அளவிற்குக் காட்ட சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்பது தெரியவில்லை. பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்த போது இயக்குனரை கடுமையாகத் திட்டியதைக் கேட்க முடிந்தது. சில கதைகளுக்கும், கதாபாத்திர சித்தரிப்புகளுக்கும் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

ரிப்பீட் ஷு - தவறான அளவில்…

 

பட குழுவினர்

ரிப்பீட் ஷு

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓