3.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : ராபர்ட் டவுனி, கிறிஸ் இவன்ஸ், மார்க் ரப்பலா, கிறிஸ் ஹெம்ஸ்ஒர்த், ஸ்கார்லெட், டான் சேட்லே, பால் ரூட், பிரை லார்சன் உள்ளிட்ட பலர்...
இயக்கம் : ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ
இசை : ஆலன் சில்வெஸ்ட்ரி
தயாரிப்பு : மார்வெல் ஸ்டுடியோஸ்
நேரம் : 3 மணிநேரம் 01 நிமிடம்
வெளியான தேதி : 26 ஏப்ரல் 2019
ரேட்டிங் : 3.5/5

அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்கள் என்றாலே பல சூப்பர் ஹீரோக்களின் ஹீரோயிசம் ரசிகர்களைக் கவரும். இந்த அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தில் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வருவதால் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாகவே இருக்கிறது.

இதற்கு முன் வந்த அவெஞ்சர்ஸ் படங்களைக் காட்டிலும் இந்த எண்ட் கேம் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு தமிழ்நாட்டிலும் கிடைத்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

2018ல் வெளிவந்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் பிரபஞ்சத்தில் இருக்கும் பாதி மக்களை தானோஸ் அழித்துவிடுவான். அவற்றில் சில சூப்பர் ஹீரோக்களும் மறைந்து போய்விடுவார்கள். விண்வெளியில் அயர்ன்மேன், நெபியூலா மட்டும் இருக்கிறார்கள். அங்கிருந்து அவர்களை கேப்டன் மார்வெல் பூமிக்கு அழைத்து வருகிறார். இதிலிருந்து தான் இந்த எண்ட் கேம் படம் ஆரம்பமாமகிறது.

தானோசை அவன் மகள் நெபியூலா உதவியுடன் அவனுடைய இடத்திற்கே சென்று கொல்ல முடிவெடுக்கிறார்கள் அவெஞ்சர்ஸ். பின்னர், தானோசால் கைப்பற்றப்பட்ட கற்களை அவன் கைப்பற்றுவதற்கு முன்பு எங்கிருந்ததோ அங்கே சென்று அதை நாம் கைப்பற்றலாம் என அவெஞ்சர்ஸ் முடிவெடுக்கிறார்கள். அதற்காக குவான்டம் ரிலம் முறையைப் பயன்படுத்தி டைம் மிஷின் மூலமாக செல்லலாம் என ஹேன்ட் மேன் சொல்கிறார். அதன்படி அவஞ்சர்ஸ் மூன்று குழுக்களாகப் பிரிந்து 2012, 2014, 1970 ஆகிய வருடங்களுக்குப் பயணித்து ஆறு கற்களையும் மீட்டு வருகிறார்கள். 2014ல் இருக்கும் தானோசிடம் இருந்து கற்களைக் கைப்பற்றும் போது இந்த டைம் மிஷின் பற்றி தெரிந்து கொண்டு அது வழியாகவே வந்து அவஞ்சர்ஸைத் தாக்குகிறான் தானோஸ். இறுதிப் போராட்டத்தில் மறைந்து போன அனைத்து சூப்பர் ஹீரோக்களும் வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் கதை.

நிகழ்காலத்தில் அவெஞ்சர்ஸ் அனைவரும் பிரிந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குவான்டம் ரிலம் ஆராய்ச்சியில் இறங்கி அதில் சிக்கிக் கொண்ட ஹேன்ட் மேன், ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளியில் வந்து அவெஞ்சர்ஸ்களைத் தேடிச் செல்கிறார். ஒவ்வொருவரையும் சந்தித்து, டைம் மிஷின் பற்றி விவரித்து சொல்லி, அவர்களை இந்த திட்டத்திற்குள் அழைத்து வருவதற்குள்ளாகவே இடைவேளை வந்துவிடுகிறது. அதுவரையில் வசனக் காட்சிகள் மட்டும்தான் படத்தில் உள்ளது.

இடைவேளைக்குப் பிறகு அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தார், ஹல்க், ஹேன்ட் மேன், பிளாக் விடோ, ஹாக் ஐ, நெபியூலா, ராக்கெட் ரகுன், வார் மிஷின் ஆகியோர்தான் டைம் மிஷின் மூலமாக கற்களை எடுத்து வரப் பயணிக்கிறார்கள். டைம் மிஷினில் அவர்கள் பயணிக்கும் வருடங்களில் 2012ம் 2014ம் காட்சிகளாகப் பெரிய சுவாரசியத்தைத் தரவில்லை என்றாலும் 1970களில் அயர்ன் மேனும் அவனுடைய அப்பாவும் சந்தித்துப் பேசும் காட்சிகள் சுவாரசியமாக உள்ளன.

டைம் மிஷின் மூலமாக 2012ல் நியூயார்க் செல்லும் இப்போதைய கேப்டன் அமெரிக்கா, அப்போதைய கேப்டன் அமெரிக்காவுடன் சண்டை போடுகிறார். ஹல்க் பெண் சாமியார் ஒருவரைச் சந்தித்து எதிர்காலம் பற்றிச் சொல்லி, ஒரு கல்லை வாங்கி வருகிறார். அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா சேர்ந்து ஒரு கல்லை எடுக்கும் போது அதை லோக்கி எடுத்து தப்பித்துவிடுகிறான். பின்னர் அந்தக் கல்லை எடுக்கத்தான் 1970களுக்கு கேப்டன் அமெரிக்காவும், அயர்ன்மேனும் பயணிக்கிறார்கள்.

2014ல் டைம் மிஷின் மூலமாக ஹாக் ஐ, பிளாக் விடோ, வார் மிஷின், நெபியூலா ஆகியோர் மொராக் கிரகத்திற்குப் போகிறார்கள். அப்போது அங்கு இருக்கும் 2014 நெபியூலா எண்ணங்களின் வழியாக இப்போதைய நெபியூலா திட்டத்தை அறிந்து கொள்கிறான் தானோஸ்.

மொராக் கிரகத்திலிருந்து பின்னர் ஹாக் ஐ, பிளாக் விடோ வார்மிர் சென்று அங்கிருந்து ஒரு கல்லை எடுக்கிறார்கள். அப்போது பிளாக் விடோ உயிர்த் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

இப்படியாக அனைத்துக் கற்களையும் கைப்பற்றி அவற்றை அதன் தன் இருப்பிடத்தில் வைக்க அவெஞ்சர்ஸ் திட்டமிடுவதைத் தடுக்க தானோஸ் டைம் மிஷின் மூலமாக 2014ல் இருந்து 2019க்கு வந்து கிளைமாக்சில் சண்டையிடுவதுதான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதி தமிழில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அவர் குரலைக் கேட்டதுமே தியேட்டரில் கத்துகிறார்கள். விஜய் சேதுபதி உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருந்தாலும் அயர்ன் மேனுக்கு அவரது குரல் சுத்தமாக செட்டாகவில்லை என தியேட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பிளாக் விடோவிற்கு நடிகை ஆன்ட்ரியாக தமிழில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் குறைவுதான். கிளைமாக்சுக்கு முன்பாக ஒரு அரை மணி நேரம் மட்டுமே திரையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.

கிளைமாக்சில் மறைந்து போன ஒவ்வொரு சூப்பர் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் போது தியேட்டரில் ஆரவாரம் அதிகம் ஒலிக்கிறது. ரஜினி, அஜித், விஜய் படங்களில் அவர்களது என்ட்ரிக்குக் கிடைக்கும் ஆரவாரத்தைவிட இது அதிகமாக இருக்கிறது.

படம் முடிந்ததும் இனி அவெஞ்சர்ஸ் படங்கள் வருமா, வராதா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் செல்கிறார்கள்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் - எண்ட்லஸ் என்டர்டெயின்ட்மென்ட்

 

பட குழுவினர்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓