அயோக்யா,Ayogya

அயோக்யா - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர்
தயாரிப்பு - லைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - வெங்கட் மோகன்
இசை - சாம் சி.எஸ்
வெளியான தேதி - 11 மே 2019
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

அயோக்கியன் என பெயர் வைத்தால் ஒருமாதிரியாக இருக்கும், ஒரு டப்பிங் படத்திற்கான எபெக்ட் இருக்கும் என்பதற்காக அயோக்யா என வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. தெலுங்கு டெம்பர் ரீமேக்தான் இந்த அயோக்யா என்றாலும் அப்படியே ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்த எபெக்ட்தான் இருக்கிறது.

தெலுங்கிலிருந்து இப்படி நான்கு படங்களை ரீமேக் செய்தால் போதும் வரும் ஒன்றிரண்டு நல்ல படங்கள் கூட காணாமல் போய்விடும். அப்படி ஒரு கரம் மசாலா படம் இது. தெலுங்கு படத்தின் கிளைமாக்சை மட்டும் மாற்றிவிட்டு, தனக்கு ஒரு இமேஜ் வருவது போல மாற்றுங்கள் என விஷால் சொல்லியிருப்பாரோ, என்னவோ, நம்பவே முடியாத ஒரு கிளைமாக்சை வைத்து சினிமாத்தனத்தின் உச்சமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன்.

பணத்தாசை பிடித்த ஆதரவற்றவரான விஷால், போலீசாக இருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என நினைத்து சிறு வயதில் ஆசைப்பட்டதைப் போல போலீசாகிவிடுகிறார். சென்னை, நீலாங்கரை பக்கம் கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருக்கு அடிபணிகிற மாதிரி ஒரு இன்ஸ்பெக்டர் வேண்டும் என்று விஷாலை அந்தப் பதவிக்கு நியமிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பார்த்திபன் சொல்லும் அனைத்தையும் செய்யும் விஷால், ஒரு கட்டத்தில் ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார். அந்தக் கொலையைச் செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கித் தர விஷால் போராடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பத்தில் போலீஸ் துறையை இதைவிட மோசமாகக் காட்டியிருக்க முடியாது. எல்லா ரூபத்திலும் போலீசார் குறுக்கு வழியில் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை சினிமாவில் தான் போலீசை இப்படி காட்டுவார்களோ, கிளைமாக்சில் வக்கீல்களும் காசு வாங்கிக் கொண்டு தடயத்தை அழிப்பார்கள் என அவர்களையும் சேர்த்து மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் அபத்தத்தின் உச்சம். போலீசார் சொல்வதை நீதிமன்றத்தில் சாட்சியாக எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தில் அதையும் எடுத்துக் கொண்டு 24 மணி நேரத்தில் தண்டனையும் கொடுத்து விடுகிறார்கள். காதுல பூ என்பார்கள், காதுல மாலை என்பார்கள், இதில் காதுல பூந்தோட்டத்தையே வைத்துவிட்டார்கள்.

தெனாவெட்டு, நக்கல், எகத்தாளம் கலந்த ஒரு போலீஸ் கதாபாத்திரம் விஷாலுக்கு. அவையெல்லாம் வில்லன் பார்த்திபனிடம் மட்டும் அதிகமாக வெளிப்படுகிறது. மற்ற காட்சிகளில் அவர் அப்படி நடிப்பதைப் பார்க்கும் போது காமெடியாகத் தெரிகிறது. காட்சிக்குக் காட்சி விஷாலுக்கான பில்ட்அப்பை மட்டும் இயக்குனர் யோசித்திருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் விஷால் இன்னும் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கை என்பதை வால்க்கை என்றே பேசுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் வழக்கம் போல அதிரடி.

விஷால் ஜோடியாக ராஷி கண்ணா. விலங்குகள் மீது தனி பாசம் கொண்ட தமிழ் சினிமாவின் கதாநாயகி. இரண்டு காட்சிகளில் விஷாலைக் காதலிப்பதற்கும், இரண்டு பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.

பார்த்திபன்தான் படத்தின் வில்லன். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் 50 பேர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதைக் கூட அவரே கிண்டலடித்துக் கொள்கிறார். விஷாலை எதிர்க்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரமும் வலிமையாக உள்ளது. அதற்காக மந்திரியுடன் ஒன்றாக உட்கார்ந்து குடித்து அவரையே கிண்டலடிப்பதெல்லாம் ஓவர். தெலுங்கு ரீமேக் இல்லையா அப்படித்தான் இருக்கும்.

படத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் அதிகம் கவர்ந்த ஒரே நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமே. போலீஸ் ஏட்டாக மிகவும் நல்ல போலீசாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விஷாலுக்கு சல்யூட் அடிக்க மாட்டேன் என்று அவர் பேசும் போதே, படத்தில் பின்னாடி நிச்சயம் விஷாலுக்கு சல்யூட் அடித்துவிடுவார் என்று யூகிக்க முடிகிறது.

இரண்டே காட்சிகளில் யோகி பாபு எதற்கு ஜுனியர் ஆர்ட்டிஸ் போல படத்திற்குப் படம் வந்து போகிறார் என்றே தெரியவில்லை.

சாம் சிஎஸ் இசையில் கண்ணே கண்ணே பாடல் மட்டும் கவனம் பெறுகிறது. ஆரம்பத்திலும், கிளைமாக்சிலும் வரும் பாடல்கள் படத்திற்குத் தேவையே இல்லை. படத்தில் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களில் சண்டைப் பயிற்சியாளர்கள் ராம் லட்சுமண் ஆகியோருக்குத்தான் அதிக வேலை. ஒவ்வொரு அடியையும் இடியாக இறக்குகிறார்கள்.

பார்த்திபன் நடித்து 1993ல் வெளிவந்த உள்ளே வெளியே, விக்ரம் நடித்து வெளிவந்த சாமி ஆகிய படங்களிலிருந்து உல்டா செய்து ஒரு கதையை உருவாக்கி தெலுங்கில் அதையே டெம்பர் என எடுத்து வெற்றி பெற வைத்து, அதையே தமிழுக்கும் ரீமேக் செய்ய வாங்கியிருக்கிறார்கள்.

நம் தமிழ் இயக்குனர்கள் பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்தாலே அட்லீ போல பல சூப்பர் ஹிட் கதைகளை உருவாக்கலாம். அதற்காக எதற்கு தெலுங்கிலிருந்து ரீமேக் உரிமையை சிலபல கோடி கொடுத்து வாங்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு உடனுக்கு உடன் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது. மற்ற எல்லாமே டபுள் சினிமாத்தனம்.

அயோக்யா - கடமைத்தியாகி

 

பட குழுவினர்

அயோக்யா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓