1

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நிவின் பாலி, நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், லட்சுமிப்ரியா, ஜி.கே. ரெட்டி
இயக்கம் - கௌதம் ராமச்சந்திரன்
இசை - அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு - எஸ் சினிமா கம்பெனி, காஸ்ட் அன் க்ரூ

தமிழ்த் திரையுலகத்தில் மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளை எந்தவித பாகுபாடும் இல்லாமல் தமிழ்த் திரையுலகமும், தமிழ் ரசிகர்களும் வரவேற்பது வழக்கம்.

முன்பெல்லாம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் நேரடிப் படங்களையே ஒரு வருடத்திற்கும் மேலாக ஓட வைத்தவர்கள் தமிழ் ரசிகர்கள். நிவின் பாலி நடித்து வெளிவந்த பிரேமம் படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்புடன் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது. அப்படி ஒரு வரவேற்பைப் பெற்ற நிவின் பாலி நேரம் படத்திற்குப் பிறகு தமிழில் நடித்து வெளிவந்துள்ள படம் ரிச்சி.

சில படங்களை ரசிகர்களுக்காக எடுப்பார்கள், சில படங்களை தங்களுக்கும் அசாத்திய திறமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக எடுப்பார்கள். இந்த ரிச்சி படம் இரண்டாவது வகை. படத்தை எடுத்து முடித்த பின் அதைத் தயாரித்தவர்களுக்கும், இயக்கியவர்களுக்கும், நடித்தவர்களுக்குமே முதலில் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஒரு படத்திற்கு கதை சொல்லல் என்ற ஒரு முறை இருக்கிறது. அது திரைக்கதையில் தான் அழகாக வெளிப்படும். இப்படி ஒரு மோசமான திரைக்கதையை தமிழ் சினிமா சமீபத்தில் கண்டிருக்காது என்றுதான் ரிச்சி படத்தைப் பார்க்கும் போது தோன்றுகிறது. எத்தனையோ தாதா கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா இப்படிப்பட்ட ஒரு சாதா கதையையும் பார்க்க வேண்டியதாகிவிட்டதே.

சிறு வயதில் செய்யாத ஒரு கொலைக்காகக் கைது செய்யப்படுகிறான் சர்ச் பாதர் மகனான ரிச்சி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறைதண்டனை அனுபவித்த பிறகு ஊருக்கே தாதாவாக இருக்கும் ஐசக் அண்ணாச்சியுடம் ரவுடியாகச் சேர்கிறான். ஐசக்கிற்குக் எதிராகச் செயல்படுபவர்களை அடிப்பதும், கொலை செய்வதும் தான் அவனது வேலை. சிறு வயதில் ரிச்சி செய்யாத கொலையை உண்மையிலேயே செய்து ஊரை விட்டு ஓடிப் போன ரகு, திரும்ப ஊருக்கு வருகிறான். பழி வாங்கும் உணர்வுடன் ரகுவைத் தேடிப் போகிறான் ரிச்சி. அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கதை.

ரிச்சி ஆக நிவின் பாலி, ஐசக் அண்ணாச்சியாக நடிகர் விஷாலின் அப்பா ஜி.கே. ரெட்டி. ரகுவாக ராஜ்பரத்.

அரை மணி நேரத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை 1 மணி நேரம் 50 நிமிடத்திற்கு என்ன சொல்வது என்று தெரியாமலேயே இ....ழுத்து, நீ.....ட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்.

ரவுடி ரிச்சியாக நிவின் பாலி, நம்புங்கள். நிவின் பாலியை எப்படி ஒரு ரவுடியாகக் கற்பனை செய்து பார்த்திருப்பார் இயக்குனர். அவரும் என்னவெல்லாமோ செய்கிறார், ஆனால், நமக்குத்தான் நிவின் பாலியைப் பார்த்தால் கல்லூரி மாணவனைப் போலவே தெரிகிறது.

சதுரங்க வேட்டை நட்ராஜ், எதற்காக இந்தப் படத்தில் நடித்தார் என்றே தெரியவில்லை. முக்கியத்துவமே இல்லாத ஒரு கதாபாத்திரம். பிரகாஷ்ராஜும் அப்படித்தான் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்-ஐ படத்தின் கதாநாயகி என்று சொல்லிக் கொள்ளலாம். லட்சுமி குறும்படப் புகழ் லட்சுமிப்ரியா சந்திரமௌலியும் படத்தில் இருக்கிறார்.

ஜி.கே. ரெட்டியை உட்கார்ந்த இடத்திலேயே நான்கு வரி டயலாக்கை பேச வைத்திருக்கிறார்கள். நிவின் பாலி சொல்வது போலவே, ராஜ் பரத் ஸ்டைலாக இருக்கிறார். சில இயக்குனர்களின் பார்வை அவர் மீது விழலாம்.

அஜனீஷ் லோகத்நாத்தின் பின்னணி இசை மட்டும் ஆங்காங்கே வித்தியாசமாக ஒலிக்கிறது. பாண்டிகுமாரி கடலையும், கடல் சார்ந்த இடங்களையும் இயல்பாய் பதிவு செய்திருக்கிறார்.

இயக்குனரை அழைத்து வந்து உட்கார வைத்து ஒரு பத்து தாதா படங்களைத் திரும்பத் திரும்ப போட்டுக் காட்ட வேண்டும் போலிருக்கிறது.

ரிச்சி - ச்சி...ச்சீ...சீச்சி...!

 

பட குழுவினர்

ரிச்சி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓