1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஜூனியர் பாலி பிக்சர்ஸ்
இயக்கம் : ரதீஷ் பாலகிருஷ்ணன்
இசை : யக்ஷன் கேரி பெரேரா
நடிப்பு : நிவின்பாலி, கிரேஸ் ஆண்டனி வினய் போர்ட், ஜாய் மேத்யூ, ஜாபர் இடுக்கி மற்றும் பலர்.
வெளியான தேதி : 12.11.21 (ஓடிடி வெளியீடு)
நேரம் : 2 மணி 1 நிமிடம்
ரேட்டிங் : 1.5/5

மினி ரோபோட் ஒன்றை மையப்படுத்தி கடந்த வருடம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை எடுத்து ஆச்சரியப்படுத்திய ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் இது. அதே ஆச்சரியத்தை இந்தப்படத்திலும் கொடுத்து இருக்கிறாரா பார்க்கலாம்.

ஜூனியர் ஆர்டிஸ்ட்டான நிவின்பாலி சீரியல் நடிகையான ரோஸ் ஆண்டனியை திருமணம் செய்து கொள்கிறார். தனது மாமனார் வைத்துக் கொடுத்த சிறிய ஹோட்டலை நடத்திக் கொண்டே அதன் மாடியில் நடிப்பு பயிற்சி வகுப்பும் எடுத்து வருகிறார். கூடவே பெரிய நடிகராகும் முயற்சியில் இருக்கும் நிவின்பாலி, தனது மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றாமல் நடிப்பே உலகம் என்பது போல திரிகிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்க்க மூணாறுக்கு சுற்றுலா அனுப்பி வைக்கிறார்.

சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு மனைவியை சந்தோஷப்படுத்தும் விதமாக தங்க கம்மல் வாங்கிக் கொடுத்து அழைத்துச் செல்கிறார் நிவின்பாலி. மூணாறில் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து வெளியே சுற்றிப்பார்க்க கிளம்புவதற்கு முன்பு, அந்த கம்மலை கழட்டி அறையில் உள்ள பேக்கிலேயே வைத்துவிட்டு செல்லலாம் என மனைவியிடம் கூறுகிறார். அதன்படி வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டு இரவில் வந்து பார்த்தபோது கம்மல்கள் திருடு போயிருப்பது தெரிய வருகிறது.

அதன்பிறகு ஹோட்டல் மேனேஜர் வினய் போர்ட் மூலமாக அந்த கம்மல்களை கண்டுபிடிக்க விசாரணை படலம் ஆரம்பிக்கிறது. ஆனால் அந்த கம்மல்களை நிவின்பாலி தான் எடுத்து வைத்திருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, அதை கண்டுபிடிக்கும் அந்த நாடகத்தை இறுதிவரை எப்படி நடத்துகிறார்கள், கடைசியில் நிவின்பாலியின் குட்டு உடைந்ததா இல்லையா என்பது மீதிக்கதை.

மேலே இயக்குனருக்கு கொடுத்த முன் அறிமுகத்தை படித்துவிட்டு இந்த கதை சுருக்கத்தை படிப்பவர்களுக்கு என்ன விதமான உணர்வு ஏற்படுகிறதோ படம் பார்த்தவர்களுக்கு அதைவிட இரண்டு மடங்கு மோசமான உணர்வே ஏற்படும். அந்த அளவுக்கு கதை விஷயத்தில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். இந்தக்கதையில் எந்த அம்சத்தை கண்டு நிவின்பாலி மயங்கினார் என தெரியவில்லை. நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தையும் அவரே தயாரித்து உள்ளார் என்பது தான் ஆச்சரியம். ஆனால் இரண்டு மணி நேர படத்தில் ஐந்து நிமிட காட்சிகளை தவிர மற்ற அனைத்து காட்சிகளையும் வெளிப்புற படப்பிடிப்பு இல்லாமலேயே நடத்தி மிகப்பெரிய அளவில் சிக்கனம் செய்துள்ளார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தங்கும் விடுதி ஒன்றிலேயே படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. குறைந்தபட்சம் அதையாவது சுவாரசியமாக செய்திருக்கலாம்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரிஸ்க் எடுத்து நடிக்கும் நிவின்பாலி இதில் ஏனோதானோ என்று நடித்து இருப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. இதற்கு முன்பு சீரியலில் நடித்து வந்த நடிகை கிரேஸ் ஆண்டனியை இந்தப் படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக மாற்றினாலும் அவருக்கு படத்திலும் சீரியல் நடிகை கதாபாத்திரமே கொடுத்து படம் பார்க்கும்போது சீரியல் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் கிரேஸ் ஆண்டனி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இவர்கள் இருவரையும் தாண்டி விடுதி மேனேஜராக வரும் வினய் போர்ட் ஓரளவுக்கு படத்தை கலகலப்பாக்க முயற்சித்திருக்கிறார். விடுதி ரிசப்ஷனிஸ்ட்டாக நடித்துள்ள வின்சி அலோசியஸ் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். இவர்கள் தவிர அந்த ஹோட்டலில் தங்கியுள்ள ஜாபர் இடுக்கி மற்றும் ஜாய் மேத்யூ இருவரும் இடைவேளைக்குப்பின் செய்யும் அலம்பல்கள் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. ஆனாலும் அதுகூட போகப்போக ஓவர்டோஸ் ஆகி விடுவது உண்மைதான்.

கிட்டத்தட்ட சீரியல் பாணியில் நகரும் இந்த கதைக்கு ஒளிப்பதிவும் இசையும் எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை என்பதால் அவற்றைப் பற்றி பேசுவதற்கும் சிறப்பாக ஒன்றுமில்லை.

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனரின் படமா என்கிற அதிர்ச்சி படம் முழுதும் விலகவே இல்லை. இரண்டு மணிநேர படத்தையும் பொறுமையாகப் பார்ப்பவர்கள் மிகப்பெரிய தைரியசாலிகள் என்றே சொல்லலாம்.

கனகம் காமினி கலகம் - அக்கப்போர்

 

பட குழுவினர்

கனகம் காமினி கலகம் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓