"ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்" பேனரில் எஸ்.துரை, எஸ்.சண்முகம் இருவரது தயாரிப்பில் புதியவர் மணிஷர்மா இயக்கத்தில் பரத் ரெட்டி, விசாகா சிங், மீனாட்சி தீட்சித், ஊர்வசி, ஜான் விஜய், முனிஸ்காந்த் ராமதாஸ், சிங்கம் புலி, யோகிபாபு, லொள்ளு சபா மனோகர், கிங்காங், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்க, பயங்கரமாக மிரட்ட வந்திருக்கும் பேய் படம் தான் "பயம் ஒரு பயணம்".
டிஸ்கவரி டி.வி சேனல் ஒன்றிற்காக காட்டு விலங்குகளை படம் எடுக்கப் போகிறார் ராம் எனும் நாயகர் பரத் ரெட்டி. போன இடத்தில், விசாகா சிங் உள்ளிட்ட பேய்களின் கைங்கர்யத்தால், சில வருடங்களுக்கு முன் அங்கு நடந்த விபத்துக்கள் எல்லாம் இவர் கண் முன் தற்போது நடைபெறுவது போல், நடைபெற்று பரத் ரெட்டியின் ஹார்ட் பீட்டை மட்டுமின்றி ரசிகனின் ஹார்ட் பீட்டையும் எகிற வைக்கின்றன. இளம்பெண் பேயான விசாகா சிங்கின் ஆத்மா சாந்தியடையாமல் இவ்வாறெல்லாம் ஹீரோ பரத் ரெட்டியை துரத்தக் காரணம் என்ன? பரத், ஆவி மற்றும் அமானுஷ்ய சக்திகளிடமிருந்து தன்னை காத்துக் கொண்டு தன் உயிரினும் மேலான மகளுடனும், உயிருக்கு உயிரான மனைவி மீனாட்சி தீக்சித்துடனும் மீண்டும் வந்து சேர்ந்தாரா இல்லையா? என்னும் கேள்விகளுக்கு திக் திக் திகிலுடன் விடை சொல்கிறது பயம் ஒரு பயணம் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
ராமாக தனியார் சேனல் புகைப்படக் கலைஞராக, இதற்கு முன் ஒரு சில படங்களில் வில்லனாகவும் இரண்டாம் நாயகராகவும் நடித்த டாக்டர் பரத் ரெட்டி... கச்சிதமாக பயந்து காண்போரையும் பயமுறுத்தியிருக்கிறார் பலே.
விசாகா சிங், பேயாகவும், ப்ளாஷ்பேக்கில் சாப்ட்வேர் யுவதியாகவும்தன் முந்தைய கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களைக் காட்டிலும் அசத்தியிருக்கிறார்.
பரத்தின் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக மீனாட்சி தீக்சித், திருப்தி.
சாப்ட்வேர் கலாச்சாரம் பிடிக்காத ஹார்டுவேர் வில்லனாக ஜான் விஜய், பங்களாவில் பார்ட்டி கொண்டாடும் சாப்ட்வேர் ஆண்களையும் பெண்களையும் ஓடவிட்டு புரட்டி எடுக்கும் விதம் ஹாஸ்யம் என்றாலும், அவரிடம் சிக்கும் அப்பாவி விசாகா சிங்கிற்கு, அவரால் நிகழும் கொடூரம் மிகக் கொடூரம்.
ஊர்வசி, முனிஸ்காந்த் ராமதாஸ், சிங்கம் புலி, யோகிபாபு, லொள்ளு சபா மனோகர், கிங்காங், மதுமிதா, ஞானவேல் உள்ளிட்டோரின் நடிப்பில் குறையேதும் இல்லை சிங்கம் புலி மட்டும் வழக்கம் போலவே ஒவர் ஆக்டிங் செய்து கடிக்கிறார்.
"மாயாவி பெண்ணே....", "யாரது... யாரது...." உள்ளிட்ட பாடல்கள் ஒய்.ஆர்.பிரசாத்தின் இசையில் ஒய்யாரம், இவரது பின்னணி இசைபதிவும், ஐ.ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவும் பேய் படங்களுக்கே உரிய மிரட்டல் பதிவு. எடிட்டர் எல்விகே தாஸ் டேனியலின் கத்திரி, சிங்கம் புலி சம்பந்தப்பட்ட காட்சிகளில் இன்னும் ஷார்ப்பாய் செயல்பட்டிருக்கலாம்.
மணி ஷர்மாவின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில சின்ன சின்னக் குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் பேய் படம் பிடிக்கும் ரசிகர்களுக்கு பயம் ஒரு பயணம் நிச்சயம் பிடிக்கும்!
"பயம் ஒரு பயணம் - ஹாரர் த்ரில் விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிரட்டல் பயணம்!"