விமர்சனம்
-----------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஹீரோ போலீஸ் அதிகாரி மகனைத் தண்டிக்கும் ஹீரோவின் கடும்பத்தைச் சிதைக்கிறார் வில்லன். பதிலுக்கு ஹீரோ வில்லனைப் பழிவாங்குகிறார். அப்பப்பா... எந்தக் காலத்து கதை? பாட்ஷா, ரமணா, சத்ரியன் என்று கொஞ்சம் கொஞ்சம் உருவி தெறி ரெசிபியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.
கேரளாவில் மகள் நைனிகாவுடன் தானுண்டு தன் பேக்கரி உண்டு என்று இருக்கும் விஜய்க்கு, சாதுவான ஒரு முகம். நைனிகாவின் பள்ளி டீச்சர் எமிஜாக்சன் பிரச்னையில் பாட்ஷா மாதிரி ஆக்ரோஷமான இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டிய சூழல்.
படத்தைத் தாங்கிப் பிடிப்பது விஜய் மட்டும்தான். சாது அப்பா, ஆக்ஷன் அதிகாரி, பிரியமான காதலன் என்று ஜமாய்க்கிறார். அவர் வரும் அத்தனை ஆக்ஷன் காட்சிகளும் தெறி என்றே சொல்லலாம். சிக்னலில் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகளை துவம்சம் செய்யுமு் காட்சியில் உண்மையில் தெறிதான்.
சிக்லெட்டை வாயில் போடுவது, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்த கைக்கு மாற்றுவது - பழசுங்கண்ணா...
மகனைக் கொன்ற அதிகாரிகளைப் பழிவாங்கும் வில்லன் பாத்திரம் இயக்குநர் மகேந்திரனுக்கு. ஆள் புதுசு, வில்லத்தனம் பழசு. கிளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்காரவைத்து விடுகிறார் இயக்குநர்.
விஜய்யின் மனைவி சமந்தா நடிப்பும் சரி, டூயட்டில் கவர்ச்சியும் சரி. தரம்! எமிஜாக்சனுக்குத்தான் பொருந்தாத் கேரக்டர். அந்த லிப்ஸ்டிக், ரோஸ் நிற உடை அம்மணிக்கு என்ன கேரக்டர்?
படத்திற்கு கைகொடுத்திருக்கிறது பேபி நைஜிகாவின் பேச்சும் துறுதுறு நடிப்பும் (மீனா மகளாச்சே)
மொட்டை ராஜேந்திரன் காமெடியும் கேரக்டரும் கலந்து அப்ளாஸ் வாங்குகிறார்.
பிரபு, ராதிகா, அழகம் பெருமாள், காளிவெங்கட் கச்சிதமான தேர்வு.
ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் ரொம்ப உழைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் பாடல்களில் காட்டிய அக்கறை பின்னணி இசையில் இல்லை.
பழைய கதைகள்தான் என்றாலும் திரைக்கதையில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். திடீரென இறந்து போன விஜய் வந்து பழவாங்குவதாக பேய்க் காட்சிகள். ரமணா பாணி கருத்துக் கேட்புகள், சென்டிமென்ட என்ற பெயரில் டி.வி. சீரியல்களை நினைவுபடுத்தும் காட்சிகள் என்று குறைகள் நிறைய என்றாலும், விஜய்யின் நடிப்பும் ஆக்ஷனும் ரசிகர்களை தெறிக்க வெளியே வரவிடாமல் கட்டிப்போட்டிருப்பது இயக்குநருக்கு லக்குதான்.
தெறி - பொறி!
குமுதம் ரேட்டிங் - நன்று
-------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
கற்போல் உறுதிக் காவலன் தனக்கு
பற்பல இன்னல் பதைக்க விளைக்கும்
சிற்சில வில்லன் செயலை விளக்கும்
படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று!
பம்பாய் தாதா பம்மிக் கொண்டு
ஆட்டோ ஓட்டும் அந்நாள் கதையை
பாட்சா படத்தில் பார்த்திருக்கிறோம்
சட்டெனப் பார்க்கையில் சாயல் இதிலும்!
சாக்லெட் சிற்பம் சமந்தா டாப்பு
எமிஜாக் சனோ எகிடு தகிடு!
மாமா கிட்ட விஜய் பேச்சு
மறுபடி பார்க்கத் தூண்டும் மாப்பூ!
மீனா மகள்தான் மிடுக்காய் நடக்கும்
நைனிகா நடிப்போ அசத்தல் போங்கோ!
ஆரம்ப சீனில் அசத்தும் குட்டி
பூராப் படத்திலும் நடிப்பில் கெட்டி!
உதிரிப் பூக்கள் மகேந் திரனின்
உக்கிர நடிப்பு ஓஹோ ஓஹோ!
உதிரம் கொட்ட வெட்டிய பின்னும்
அதிரடி விஜயின் அக்ஷன் ஆஹா!
ஜித்து ஜில்லாடி இசையோ கில்லாடி!
செல்லக்குட்டி சிங்கார பாட்டு
வெல்லக் கட்டி வெகுஜன ரசனை!
ஜில்லுனு வீசும் தென்றலின் குளுமை!
இதுக்கு மேலே என்றோர் வசனம்
இப்போது தானே ஐயில் பார்த்தோம்!
சாவுக்கு மேலே என்றே உல்டா
தங்கம் பார்த்துப் பூசிய கில்டா?
குத்தாட் டத்தின் பாடல் காட்சியில்
பட்டாஸ் வெடிபோல் பாய்ந்தே ஆடுவர்
மெட்ராஸ் ஐ தான் வந்து விட்டதோ?
கூலிங் கிளாஸ்தான் அனைவர் முகத்திலும்
சண்டையின் போது கேரள இசையை
சாமர்த்தி யமாய்ச் சேர்த்தது நன்று!
குண்டர் தமக்குக் கொடுக்கும் தண்டனை
சிரிக்கச் செய்யும் தேவா மிருதம்!
மொட்டைத் தலையர் ராஜேந் திரனோ
கட்டைக் குரலில் கலகலப் பாக்கி
படத்தின் போக்கில் வேகம் கூட்டி
இடத்தைப் பிடிக்கிறார் நமது நெஞ்சில்!
சொந்தம் கொண்டு சோகம் விளைக்கும்
நொந்த டெக்னிக் இந்தப் படமும்
பந்தம் வாடும் படத்தின் கதையை
எத்தனை முறைதான் இன்னும் பார்ப்பது?
படத்தின் தொய்வுக்கு காரணம் எடிட்டிங்
பாடாய்ப் படுத்துது பாடல் செட்டிங்
இருக்குது இங்கே சமந்தா கிஸ்ஸிங்
இருந்தும் எதுவோ இதிலே மிஸ்ஸிங்!
திரையரஙகில் பல்லாவரம் ராஜ்மோகன், சரண்யா தம்பதியினர் கருத்து: நாங்க ரெண்டு பேருமே தளபதி ரசிகருங்க. என்னா ஃபைட்டு! என்னா டேன்ஸு! அப்பாவி மாதிரி முகமும், ஆக்ரோஷமான முகமும்... ஊஹூம் சான்ஸே இல்லை. விஜய்னா விஜய்தான்...!
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!