தினமலர் விமர்சனம்
புராதன கோவில் கலசங்களில் கொட்டிக்கிடக்கும் விலைமதிப்பில்லா இரிடியத்தை திருடி, கோடிக்கணக்கில் துட்டு பார்க்க ஆசைப்படும கும்பல்களின் பித்தலாட்ட கதைதான் இரிடியம் படத்தின் மொத்த கதையும்!....
இந்த கதையுடன் ஒரு காதல் கதையையும், நிறைய காமெடி காட்சிகளையும் கலந்து கட்டி இரிடியம் படத்தை சுவாரஸ்யமாய் தர முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குநர் ஷாய் முகுந்தன்! அதற்காக, அவரை பாராட்டலாம்.
கதைப்படி., தஞ்சை - திருவாரூர் பக்கத்து கிராமத்து கோவில் கலசங்களில் இரிடியம் நிறைந்திருப்பதாகவும், அதை வைத்திருந்தால் வீட்டில் சுபிட்சம் பெருகும்..விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...என ஆசை வார்த்தை கூறி., பரம்பரை சொத்து பத்துக்களை விற்று அதை வாங்க வருபவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர் சிலர். அதில் பிளாக் மேஜிக் எனும் வசிய சக்தி தெரிந்த ஒருவன்., அப்படி இரிடியம் வாங்க வரும் பெரும் செல்வந்தர்களின் பணத்தை பிடுங்கிகொண்டு அவர்களை தானாகவே தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகிறான். கூடவே இளம் காதல் ஜோடிகளையும் தன் பிளாக்மேஜிக் வசிய சக்தியால் வாசம் இழக்கச்செய்து காதலிகளின் வாயிலாக தன் விருப்பங்களை பூர்த்தி செய்துகொண்டு காதலர்களையும் தானாக தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறான்.
இவற்றை மோப்பம் பிடிக்கும் அந்த ஏரியா போலீஸ் அதிகாரி மோகன் குமார், அந்த கும்பலை கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த தி்ட்டம் தீட்டுகிறார். இச்சமயத்தில் போலீஸ் மோகன் குமாரின் உறவுப்பெண்ணான ஹீரோயின் ஆருஷியும், அவரது காதலருடன் இரிடியம் கும்பலின் பிளாக்மேஜிக் மெஸ்மரிஸத்திற்கு ஆட்படுகிறார். ஆருஷியையும், அவரது காதலர் விஜாய் ஆதிக்கையும் போலீஸ் அதிகாரி மோகன் குமார் தன் படை, பரிவாரங்களுடன் சென்று காபந்து செய்தாரா? அல்லது இரிடியம் கும்பலின் பிளாக் மேஜிக் வென்றதா...? என்பது திக் திக் திக் கிளைமாக்ஸ்!
இன்ஸ் மோகன்குமார், நாயகி ஆருஷி, விஜாய் ஆதிக், யோகிபாபு, மதுமிதா, சீனிவாசன், கும்கி அஸ்வின், பாவா லட்சுமணன், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களில் யோகிபாபுவின் (பன்னி மூஞ்சி வாயன்...) காமெடி கலாட்டா தான் ஹைலைட்! பாவா லட்சுமணனின் சிங்கப்பூர் - மலேசியாவின் ரோத்தா காமெடியும், அடி ஆத்தா என மூக்கின் மேல் விரல் வைத்து சிரிக்க வைக்கிறது! ஆனாலும் யோகிபாபு - மதுமிதா ஜோடியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை! ஹேட்ஸ் ஆப் டூ யூ பாபு - மதுமிதா! கோபிசபாபதியின் ஒளிப்பதிவு, கோபாலின் பின்னணி இசை உள்ளிட்டவைகளும் சிறப்பு!
கோர்வையாக ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது ஆங்காங்கே சில -பல குறைகள் சிறிதாகவும், பெரிதாகவும் தெரிந்தாலும் ஷாய் முகுந்தனின் எழுத்து, இயக்கத்தில் பேராசை, பெரும்நஷ்டம் எனும் கருத்தை நகைச்சுவை உணர்வுடன் சொல்லி இருக்கும் "இரிடியம்" நல்காமெடி "இடி"யாக்கும்!!
"இரிடியம்-காமெடி இடி!!"