ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் | ‛பராசக்தி'க்கு யுஏ சான்று : நாளை படம் ரிலீஸ் | எதையும் யோசிக்காதீங்க, நல்லதே நடக்கும் : திருச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு | ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு : மேல்முறையீடு செய்கிறது தணிக்கை வாரியம் | 'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ | தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் |

சில மாதங்களுக்கு முன் ஹாலிவுட்டில் வெளியான 'பேட்பாய்ஸ்' படம் படு ஹிட் ஆனது. நடிப்பு, ஒளிப்பதிவுடன் படத்தின் மியூசிக்கும் பரவலாக பேசப்பட்டது. அந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் லோர்ன்பால்ப் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞரும் இருக்கிறார் என்பது பெருமையளிக்கும் விஷயமில்லையா.
கோலிவுட், டோலிவுட்டை அடுத்து பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்பது இந்திய சினிமா கலைஞர்களின் தீராத ஆசையாக இருக்கிறது. தமிழகத்தை பூர்வீமாக கொண்டு அமெரிக்கா பென்சில்வேனியாவில் பிறந்து வளர்ந்த இந்திய வாலிபர் 'பேட் பாய்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தவர்களின் குழுவில் இடம் பெற்று சத்தமின்றி சாதித்து வருகிறார். அவர் தான் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே வைகை கரையில் அமைந்த அருளானந்தபுரத்தைச் சேர்ந்த ஜெர்மிஎர்னஸ்ட்.
மூன்று வயதில் பியானோ, வயலின் இசைக் கலைஞராக வாழ்க்கையை துவக்கினார். மியூசிக் தான் வாழ்க்கை என சிறு வயதிலேயே முடிவு செய்து விட்ட ஜெர்மியின் ஆசைக்கு பெற்றோரும் தடை போடவில்லை. பால்டிமோர், கலிபோர்னியாவில் மியூசிக்கில் இளங்கலை, முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். படிக்கும் காலத்திலேயே பகுதி நேரமாகவும், தன்னார்வத்தாலும் ஆர்க்கெஸ்ட்ராக்களில் இணைந்து அமெரிக்கா முழுதும் சென்று இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்றிருக்கிறார். பள்ளி, கல்லுாரி இசைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் இவரது திறமையை கண்டு வியப்புற்ற கல்லுாரி பேராசிரியர் ஒருவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் லார்ன் பால்ப்பிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் ஜெர்மியை 'ஆர்கில்' என்ற ஹாலிவுட் படத்தில் கூடுதல் மியூசிக் கம்போஸராக அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே மிஷன் இம்பாசிபிள் பாலென்ட் என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கொண்டாடப்பட்டவர் லார்ன் பால்ப். அவரது ஆர்கில் படம் ஜெர்மிக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. அதையடுத்து தி வார் பிட்வின் தி லேண்ட் அண்ட் தி சீ, மேன் வெர்சஸ் பேபி, தி கேம் அவார்ட்ஸ் 2025, தி நாக்ட் கன், மிஸின் இம்பாசிபிள், நோவேகெயின், வி ஆர் ஸ்டோரர், ஹில், ஸகேமைக்கேல், கேரிஆன், டிகோடட், பேவெர்லி ஹில்ஸ் கூப் என 15 க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தவர்களின் இசைக்குழுக்களில் மியூசிக் கம்போஸராக பணிபுரிந்தார்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பூர்விக கிராமமான அருளானந்தபுரத்திற்கு வந்தவருடன் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்...
அப்பா ஜோசப் மென்பொறியாளர். அவர் வேலைக்காக அமெரிக்கா பென்சில்வேனியாவில் முப்பதாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தார். நான் பிறந்தது பென்சில்வேனியாவில் தான். அப்பா இசைஞானம் கொண்டவர். அடிக்கடி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை வீட்டில் பாடிக் கொண்டிருப்பார். குடும்ப, நண்பர் விழாக்களிலும் அவர் பாடுவதுண்டு. இதனால் இயற்கையாகவே இசை மீது ஆர்வம் பிறந்தது.
மூன்று வயதிலேயே என்னை அம்மா ராஜி பியானோ, வயலின் வகுப்பில் சேர்த்து விட்டார். கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்ந்து 150க்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் இசைக்குழுவினருடன் இணைந்து பியோனோ, வயலின், கிடார், சாக்ஸ்போன் வாசித்தேன். பாடகர்கள் ஜேசுதாஸ், சித்ரா போன்றோர் கச்சேரிகளில் இசைக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
கடந்த ஐந்தாண்டுகளில் 15க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.
ஹாலிவுட் இசையமைப்பாளர்கள் ஹான்ஸ்சிம்மர், லாட்விக் கோரரான்ஜோம் ரொம்ப பிடிக்கும். மியூசிக்காகவே ஹாரிபாட்டர் படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.
இந்திய இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும். அவர்கள் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை கேட்பேன். ஸ்ரேயாகோஷல் பாட்டும் ரொம்ப பிடிக்கும். ஹாலிவுட் பாடகர் ஸ்டீவ்வுண்டர் பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பூர்விக கிராமத்திற்கு பெற்றோருடன் வருவதுண்டு. எந்த சத்தமுமின்றி தென்றல் தீண்டும் அமைதியான அருளானந்தபுரத்திற்கு வருவது ஒரு உற்சாக டானிக் எடுத்து கொண்ட பலன் தரும்.
என்னை பொறுத்தவரையில் மியூசிக் என்பது எமோஷன், கனெக் ஷன். எல்லோரும் ஒன்றாக இணைந்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வைப்பதில் இசைக்கு முக்கியத்துவம் உண்டு.
எதிர்காலத்தில் சிறந்த ஹாலிவுட் மியூசிக் கம்போஸராக வேண்டும். மற்ற கலைஞர்களை போல ஆஸ்கர் விருது மீது ஒரு கண் உள்ளது. அந்த விருதை பெற வேண்டும் அல்லது இசைக்காக அந்த விருது பெறும் பட இசைக் குழுவிலாவது இடம் பெற்று விட வேண்டும். இது தான் என் ஆசை என்றார் உற்சாகமாக.