Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நண்பன்

நண்பன்,nanban
24 ஜன, 2012 - 09:42 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நண்பன்

 

தினமலர் - விமர்சனம்



த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!

பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!

சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!

கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா! அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!

இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!
ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!

நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!

ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!

ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்




-------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்



விஜய்யின் அடிதடி இல்லை, ஷங்கரின் சூப்பர் ஹீரோ சாகசம் இல்லை. இருவருமே "3 இடியட்ஸை மட்டும் மனதில் வைத்து நண்பனுக்காக கைகோர்த்திருக்கிறார்கள்.

மதிப்பெண்களுக்கும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்கும் இடையே மாணவர்கள் ரன் எடுக்க ஓடும் இன்ஜினீயரிங் கல்லூரிதான் கதைக்களம். இயந்திர வாழ்க்கை வாழும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் "ஆல் இஸ் வெல் என்று தட்டிக்கொடுக்க ஒருவன் வருகிறான். அவனால் இரண்டு நண்பர்களுக்கு நிகழும் இயல்பான அற்புதங்கள்தான் கதை.

சைலண்ட்டான சாதனை மாணவன் பாரிவேந்தனாக விஜய் ரசிக்க வைக்கிறார். ஆசிரியர்களிடம் சின்னச் சின்ன புத்திசாலித்தனங்களை வைத்தே விஜய் பண்ணும் கலாட்டாக்கள் வெகு சுவாரஸ்யம். தெனாவெட்டுப் பேராசிரியர் விருமாண்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய்யின் வெறித்தனமான நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும்! ஈகோ பார்க்காமல் சக ஹீரோ ஒருவருக்கு சலாம் போட்டு நடித்துள்ள இருவருக்கும் அழுத்தமான ஒரு சபாஷ்!

பெல்லி இடுப்பும் பளீர் சிரிப்புமாக வரும் இலியானா கொள்ளை அழகு.

விஜய்யோடு மோதிக்கொண்டே இருக்கும் சத்யனின் ரவுசு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழ் தெரியாத சத்யனின் சொற்பொழிவில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு விஜய் குழப்புவது தமிழ் ரசிகனுக்கு அறிஞர் அண்ணா காலத்து ஐடியா. ஜீவாவின் கறுப்பு நிற அக்காவை மையமாகக் கொண்ட தமாஷில் "அங்கவை சங்கவை மேட்டர்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டில் டூயட், கிராபிக்ஸ் டெக்னிக்குகள் உள்ளிட்ட தனது ஏரியாவை நக்கலடித்துக்கொண்டே பயன்படுத்தவும் செய்திருப்பது இயக்குநர் ஷங்கரின் சாமர்த்தியம்தான்.

"அஸ்க்கு லஸ்க்கா ஈமோ பாடலில் இசையமைப்பாளர் ஹாரீஸ் வசீகரிக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ரம்மியம்.

தூக்கலான பிரச்சாரம், நாடகத்தனம் என்று அங்கங்கே உறுத்தினாலும் "நண்பன் கடைசியில் நெருக்கமான தோழனாகி விடுகிறான்.

நண்பன் - ஆல் இஸ் வெல்!

குமுதம் ரேட்டிங் - ஓகே.



------------------------------------------------------------




கல்கி விமர்சனம்



ஷங்கரின் க்ளிஷே க்ளிசரின் கலக்காத ஷங்கர் படம் - நண்பன். த்ரி இடியட்ஸின் ரீமேக். எனினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இயக்கத்தில், நிதானம் தவறாத ட்ராவிட் பேட்டிங்கின் ஆர்ப்பாட்டமில்லா அழகு. கல்வியின் பயனே திறமையை ஒளிரச் செய்வதுதான்; மங்கச் செய்வதல்ல என்ற உயிரிழையில் படம் முழுக்க ஆங்காங்கே ஹாஸ்யம் பொதிந்த சுவாரஸ்ய முடிச்சுகள்.

பத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தி, எட்டுப் பக்கங்களில் வசனம் பேசி, ஆறு பாடல்களில் துள்ளிக்குதித்து, நான்கு சண்டைக் காட்சிகளில் ரத்தம் கொதித்து, காதலி - தங்கை அல்லது அம்மா என இரண்டு பெண்களின் பாச மழையில் திணறி... ஃபார்முலாவுக்குள் வட்டமடித்த விஜய், நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நண்பன் படத்தில் சிக்கெனப் பற்றிக் கொண்டிருக்கிறார். நக்கல், நையாண்டி, குசும்பு, கும்மாளம்... என விஜய்யின் நடிப்பில் பரவச பல்ப்; உற்சாகத் தாண்டவம். நண்பர்கள் முதல் காதலியின் அக்கா வரை அனைவரிடமும் விஜய் அறை வாங்குவதை அவரது ரசிகர்கள் ரசிக்கா விட்டாலும், நடிகனாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்த நிறைய வாய்ப்பை நண்பன் தந்திருக்கிறது. கேமராவைப் பார்க்காமல் நடிக்கச் சிரமப்படுவது மட்டும் திருஷ்டிப் பொட்டு.

இயல்பு மாறாத நடிப்பில் எடுத்த எடுப்பிலேயே, சேவாக் பேட் போல சிக்ஸர் அடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதில்லை. நண்பனிலும் அந்த டச் செம நச். நெற்றியில் திருநீறு, நெஞ்சுக்குள் பயம், இளமைக் குறும்பு, எதிர்கால கனவு... எல்லாமும் மாறி மாறிப் பளிச்சிடுகிற பாத்திரத்தை நடிப்பால் துலக்கித் துலக்கிப் பளிச்சிட வைக்கிறார்.

கேரக்டரின் உக்கிரம் தாங்கமுடியாமல் தவிப்பது ஸ்ரீகாந்துக்கு மைனஸ்தான். இன்ஜினீயரிங் வேண்டாம்; ஃபோட்டோ கிராபி போதும் என அவர் அப்பாவிடம் கலங்குவது சென்டிமெண்டுக்கு ஓகே. சத்யன் சிரிப்புக்கு உத்தரவாதம். நடிப்பின் பக்கமும் வந்து போகிறார்.

இலியானா - கவர்ச்சி காரமிளகாய். தம் இடுப்பைப் போல தக்குனூண்டு கேரக்டர். அதில் விஜய்யைக் கூடுமானவரை காதலிக்கிறார். அப்புறம் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுகிறார்... இது போதுமென ஷங்கர் சொல்லி இருப்பார் போல... அதனால் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யைக் கட்டிப்பிடித்துக் கரம் சேர்கிறார். போதும் போதுமென இதிலேயே ரசிகன் கிறங்கிப் போய் ஜென்மசாபல்யம் அடைகிறான்.

அஸ்கு லஸ்கு பாடல் யூத்களின் நேஷனல் ஆன்தம். பாடல்களில் ஹாரீஸ் ஜெயரான் காதுகளை வருடினாலும் பின்னணியில் மனம் கொள்ளைப் போகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமராவில் யார் சிக்கினாலும் அழகாகத் தெரிவார்கள் போல. உயிரற்ற காலேஜ் கட்டடங்கள்கூட உயிர்ப்பாகப் பதிவாகி இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரியில் ஆளுமை... ஆளுமை... கார்க்கியின் வசனம் படத்தின் சென்டர் பில்லர்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி விஜய்யைப் பற்றி ஒருத்தருக்குக் கூடவா தெரியாது? அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார்? என்றாலும் சுதந்திரமான கல்வி, மனோதிடம், நம்பிக்கை இரண்டையும் வளர்த்தெடுக்கும் என்ற கசப்பான அறிவுரையை இனிப்புத் தடவி மாத்திரையாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

நண்பன் - ஆல் ஈஸ் நாட் பேட்!



வாசகர் கருத்து (309)

M S IBRAHIM - TIVA,இந்தியா
23 மார், 2012 - 02:34 Report Abuse
 M  S  IBRAHIM I லவ் YOU
Rate this:
billa - chennai,இந்தியா
01 மார், 2012 - 14:34 Report Abuse
 billa எப்ப பாத்தாலும் எரும சானிய பூசுன மாதிரியே இருக்கான் vijay
Rate this:
aasdik - mayiladuthurai,இந்தியா
24 பிப், 2012 - 15:53 Report Abuse
 aasdik விஜய் அண்ணன் நான் உங்க ரசிகன் உங்க குட பேசுனும் உங்க படம் இல்ல நம்ம படம் சோ சூப்பர் நான் உங்கள யப்பா பாக்க போறேன் நு தெரியல ................ எபடிக்கு
Rate this:
Karthik - Maraimalai Nagar,இந்தியா
22 பிப், 2012 - 19:42 Report Abuse
 Karthik Film is okay. sathyaraj and sathyan acting is superb. All other are normal. But shankar direction is not necessary for this film. There is no minute different from 3 idiots. Acting dialogue is okay for our (tamil) fans. But location, atmosphere, marriage methods or formalities is not to our (t. nadu) our people nad culture.
Rate this:
prabhu - kancheepuram,இந்தியா
21 பிப், 2012 - 10:17 Report Abuse
 prabhu Very nice Film .... just entertainment movie i like this.
Rate this:
மேலும் 304 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நண்பன் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in