ரெட் கார்பெட் புரொடெக்ஷன்ஸ் எம்.நடராஜன் தயாரித்து வழங்க, மார்க்ஸின் எழுத்து, இயக்கத்தில், பாலாஜி - தீக்ஷிதா மணிகண்டன் ஜோடி நடிக்க வந்திருக்கும் படம் தான் "நகர்வலம்".
சென்னையில், தண்ணீர் லாரி ஓட்டும் குமார் எனும் பாலாஜி க்கும், மான்போர்ட் ஸ்கூலில் படிக்கும் ஜனணி - தீக்ஷிதா மணிகண்டனுக்கு மிடையில் ஊடலில் ஆரம்பிக்கும் காதல், பூத்து, காய்த்து, கனியாக காத்திருக்கிறது. அவர்களது காதலுக்கு ஜாதியும், தகுதியும், கூடவே ஆள், அதிகார பலமும் வழக்கம் போலவே எப்படி? தடையாக இருக்கிறது...? என்பது தான் நகர் வலம் படத்தின் கதையும் களமும்.
தண்ணீர் லாரி ஓட்டும் குமாராக பாலாஜி தனது முந்தைய படங்களைக் காட்டிலும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம். தண்ணீர் லாரியை நேராக பார்த்து ஓட்டாமல் ஒவ்வொரு சீனிலும் அவர் நாயகியை பார்த்தபடியே ஓட்டும்போதே ஏதோ நடக்க போகிறது... எனும் எண்ணம் ரசிகனுக்கும் ஏற்படுகிறது. அதே மாதிரியே குழந்தையை அடித்துப் போட்டு நாயகியின் கண் எதிரே அடி வாங்குவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம், எதிர்பாராத விதமாக இவர்களது காதல் தெரிந்து நாயகியின் தாதா அண்ணன் கருணா நையப் புடைத்ததும், அவர் முன் போய் நின்று, அடிச்சுப் போட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சா? நான் உயிரோடு இருந்தா உன் தங்கச்சி உனக்கு கிடையாது... என்னை தீர்த்துடு என எச்சரிக்கை செய்யும் இடத்தில் தியேட்டரில் மிரட்டலான நடிப்பை வழங்கவும் தவறவில்லை இந்த தம்பி.
மான்போர்ட் பள்ளியில் படிக்கும் மார்டன் பெண் ஜனணியாக தீக்ஷிதா மணிகண்டன், கண்ணாலயே பேசுகிறார் உதடுகளாலேயே வசீகரிக்கிறார். ரவுடியின் தங்கையாக, அடாவடி அப்பா, சித்தப்பாக்களின் மகளாக, நாயகரின் காதலியாக, பள்ளி மாணவியாக பளிச் என வாழ்ந்திருக்கிறார் அம்மணி. வாவ்!
பாலசரவணன் வழக்கம் போலவே நாயகரின் காதலுக்கு உதவி அடி உதை வாங்கும் நண்பராக சக டிரைவராக வந்து போகிறார். ஆனாலும், அவர் சொல்லும், "காதலர்களுக்கு எல்லாம் கல்யாணம் வரைக்கும் தான்... கருவாட்டுக்கு ஆசைப்பட்ட எலிக்கதை, ஒரு தினுசு என்றாலும் ரொம்ப புதுசு! "
குமாரு நீயும் டிரைவரு நானும் டிரைவரு.. என்பதுக்கு பதில், தேவரு... தேவரு... என்றபடி, "ட்ர்" வராமல் தவிக்கும் "நாக்கு வழுக்கை" யோகி பாபு, பாலசரவணனையும் சில சீன்களில் ஓவர்டேக் செய்து விடுகிறார். மற்றபடி, கருணாவாக வரும் முத்துக்குமார், நமோ நாராயணன், டி.ரவி, மாரிமுத்து, அறந்தை ஸ்ரீதர், அட்டகத்தி வேலு, சூப்பர் குட் சுப்பிரமணி, கலையரசன், ரிந்து ரவி, பேபி உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
ஜெ.வி.மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, செம ஷார்ப்பு. தமிழ் தென்றலின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கலை பதிவு.
பவன் கார்த்திக்கின் இசையில், "கண்ணாடி கண்ணாலே....", "ஒரு தினுசா தான் சொல்லி புட்டாளே...", "அந்தாங்கறேன், இந்தாங்கறேன்..." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பெரிய குறை இல்லா ரசனை.
மார்க்ஸின் எழுத்து, இயக்கத்தில் தாதா கருணா தன் தங்கை விஷயத்தில் திடீர் நல்லவனாக மாறுவது உள்ளிட்ட நம்ப முடியாத ஹம்பக்குகளையும், க்ளைமாக்ஸில் வலிய திணிக்கப்பட்டுள்ள சோகமயமான திருப்பத்தையும் எண்ணத்தில் ஏற்றிக் கொள்ளாது பார்த்தோமென்றால், "நகர் வலம்" வழக்கமான என்றாலும், வண்ணமயமான "காதல் வலம்!"