இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிக்களி ஆடிய விஷால், பொங்கலுக்கு கதகளி ஆடுகிறார். தேர்தல் வெற்றி திரையிலும் தொடருமா.? என்ற ஆர்வத்தில் இருக்கிறார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...
கதகளியும் உங்களின் வழக்கமான ஆக்ஷன் படம் மாதிரி தெரியுதே?
டிரைலர் பார்த்தா அப்படித் தோணும். ஆனால் இந்த கதை களமே வேற. சும்மா ஜாலியா ஊர் சுத்திக்கிட்டிருக்கிற ஒருத்தனை ஒரு சின்ன விஷயம் ஒரு கொலைக்குள் இழுத்து விடுகிறது. அதிலிருந்து அவன் வெளியில் வரணும்னா கொலை செய்தவன் யாருன்னு கண்டுபிடிச்சாகணும். அதுக்காக ஓட ஆரம்பிக்கிறான், ஓடுற வழியில நடக்குற சம்பவங்களை விறுவிறுப்பாக சொல்ற கதை. ஒரு நாளில் நடக்கிற கதை. இடைவேளைக்கு பிறகு முழு கதையும் இரவில் தான் நடக்கும். பாடலும் கிடையாது.
பாண்டிராஜ் மென்மையான கதைகளை இயக்குபவர், அவர் எப்படி ஆக்ஷன் படம்?
அந்த இமேஜை மாத்தணுங்றதுக்காகவே இந்தப் படத்தை பண்ணியிருக்கார். அவரே குடும்ப செண்டிமெண்டோடு இருக்கிற ஒரு கதையைத்தான் முதலில் சொன்னார். இந்த கதையை அவர் விமலுக்காகத்தான் வச்சிருந்தார். கதையை கேட்டுவிட்டு நானே நடிக்கிறேன்னு சொல்லி நடிச்சேன். ரோப் கட்டி பறந்து பறந்து அடிக்கிற சண்டையெல்லாம் கிடையாது. யதார்த்தமான சண்டை காட்சிகள்தான் இருக்கும்.
ஒரே நேரத்தில் நடிகர் சங்க செயலாளர், நடிகர், தயாரிப்பாளர் எப்படி சமாளிக்றீங்க?
கொஞ்சம் சிரமம்தான். இதுவரைக்கும் கதகளி பற்றி கேள்வி கேட்டீங்க. இப்போ ரூட்டை மாற்றி நடிகர் சங்கம் பற்றி கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. இரண்டையும் நான் சமாளித்துதான் ஆகணும். ஒரு விஷயத்துல தெளிவாக இருக்கேன். சங்கம் வேற, வேலை வேற. ராதாரவியோட எப்படி நடிக்கிறீங்ன்னு கேட்குறாங்க. இதுல என்ன தப்பு தேர்தல் நேரத்துல, அவர் என்னை கடுமையாக விமர்சனம் பண்ணினவர்தான். அது தேர்தல், சங்கம் சம்பந்தப்பட்டது. ஆனால் நடிப்புன்னு வந்துட்டா அவர் சக கலைஞன். அவரை எப்படி விட்டுக் கொடுப்பது. நல்ல கதை அமைந்தால் சரத்குமார் சாரோடு நடிக்கவும் எனக்கு தயக்கம் இல்லை.
சரத்குமார் கணக்கை ஒப்படைத்துவிட்டாரா இல்லையா?
சங்கத்தின் இரண்டு வருட கணக்கை கொடுத்திருக்கிறார். அது ஆடிட்டிங் நடந்துகிட்டிருக்கு. அறக்கட்டளை கணக்கை இன்னும் முழுமையாக தரவில்லை. தருவார்னு நம்புறோம். வரவு செலவு கணக்கு முழுமையாக கையில் இருந்தால்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். எங்கள் பணிகளை தொடங்க முடியும். தராவிட்டால் ஏற்கெனவே சொன்ன மாதிரி நீதிமன்றத்தின் வழியாக பெறுவதை தவிர வேறு வழியில்லை.
உங்களின் முதல் திட்டமான குருதட்சணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே?
சங்கம் என்பதே உறுப்பினர்களுக்கு உதவுவதற்குத்தான். உறுப்பினர் யார் என்றே தெரியாவிட்டால் எப்படி உதவ முடியும். அதனால்தான் குருதட்சணை திட்டத்தை ஆரம்பித்தோம். தமிழ்நாடு முழுக்க உறுப்பினர்களின் முழு விபரத்தையும் கணக்கெடுக்கிறோம். அது முடிந்த பிறகு கல்வி, மருத்துவ உதவிகளை செய்வோம். நடிப்பு வாய்ப்புகளை பெற்றுத் தருவோம்.
கட்டிட நிதிக்காக படம் தயாரிக்கும் திட்டம் எப்படி இருக்கிறது?
ஆரம்ப நிலையில் இருக்கிறது. நான், ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, கார்த்தி எல்லாம் ஒரு பைசா சம்பளம் வாங்கமாக நடிக்க தயாராக இருக்கோம். அனைவரும் சேர்ந்தோ, அல்லது ஓரிருவர் சேர்ந்தோ நடிப்போம். நல்ல கதை அமைந்து எங்களை தாண்டி பெரிய ஹீரோ தேவைப்பட்டால் அதற்கும் முயற்சிப்போம். இப்போதைக்கு பக்காவான ஸ்கிரிப்டுடன் ஒரு இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறோம். ஏப்ரலுக்குள் ஆரம்பித்து விடுவோம். சங்க நிதிக்காக ஏதோ படம் எடுத்தோம் என்று இல்லாமல் பக்கா கமர்ஷியல் படமாக அது இருக்கும்.
திருட்டு விசிடிக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கினீர்களே இப்போ அமைதியாயிட்டீங்களே?
நான் ஒருவன் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியுமா? நான் போகிற இடத்தில் கேபிளில் புதுப் படம் போடுவதில்லை. மற்ற இடங்களில் போடத்தானே செய்கிறார்கள். திருட்டு விசிடிக்காரர்கள் தனி அரசாங்கமே நடத்துகிறார்கள். மலேசியாவிலிருந்து கரூர் வரைக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நெட் ஒர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்கணும்னா ஒட்டுமொத்த ஹீரோக்களும் களத்துல இறங்கணும். தயாரிப்பாளர் சங்கம் உறுதியா நிற்கணும்.
பாலா படத்துல நடிக்கிறீங்கன்னு தகவல் வந்திருக்கிறதே?
பேசிகிட்டிருக்கோம். பாலா சார் கதை சொன்னார். ரொம்ப பிடிச்சிருந்தது. எப்ப வேண்டுமானாலும் கூப்பிடுங்க வந்து நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். மற்றபடி படம் பற்றி விபரங்களை அவர் சொல்வது தான் முறை. விரைவில் சொல்வார்.
இவ்வாறு விஷால் கூறினார்.