'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் |
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. எஸ்.எஸ்.ஆரின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைதுறையை சேர்ந்த பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீ ஆண்டாள், பராசக்தி, பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், எஸ்.எஸ்.ராஜேந்தின் நடித்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரையுலகில் பரபரப்பாக இருந்து வந்தார். பின், குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், சிலம்பரசனுடன், தம் படத்தில் நடித்த பின், நடிப்பதையும் தவிர்த்துவிட்டார். பட விழாக்கள், முக்கிய விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். கடந்த ஓராண்டாக, விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்து விட்டார்.
சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, ஆழ்வார்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சு திணறல் அதிகமானதால், நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(அக்., 24ம் தேதி) காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
1928-ம் ஆண்டு மதுரையை அடுத்த சேடப்பட்டியில், சேடப்பட்டி சூர்யநாராயண தேவர் ராஜேந்திரனாக பிறந்தவர் எஸ்.எஸ்.ஆர். நடிப்பின் மீது ஆசை கொண்டு சினிமாவுக்கு வந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்திலேயே தானும் அறிமுகமானார். தொடர்ந்து
மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி, தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம், தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் பின்னர் குணச்சித்திர நடிகராகவும் மாறினார். நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் எஸ்.எஸ்.ஆர்., கடைசியாக சிம்பு நடித்த தம் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அவ்வப்போது சினிமா விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார்.
லட்சிய நடிகர் பட்டம்
பெரியார் மற்றும் அண்ணாதுரையின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். மேலும் தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,-ஆன முதல் இந்திய நடிகர்
நடிகராக மட்டுமல்லாது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அரசியல் ஈடுபாட்டை பார்த்து எஸ்.எஸ்.ஆரும் அரசியலுக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் திமுக., வில் இருந்த ராஜேந்திரன், 1962-ம் ஆண்டு, திமுக., சார்பில் தேனி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவில் எம்.எல்.ஏ.ஆன முதல் இந்திய நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. தொடர்ந்து திமுக சார்பில் எம்.பி.யாகவும் இருந்தவர், பின்னர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக., கட்சியில் இணைந்தார். 1981-ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி, தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ், பாக்யலட்சுமி, ரவிக்குமார், கண்ணன் 7 பிள்ளைகள் உள்ளனர். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல், சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அவரது மறைவு செய்தியை கேட்டு ஏராளமான திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் கருணாநிதி, ஸ்டாலின், ராசா, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், பா.ஜ., சார்பில் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், பிரபு, பாக்யராஜ், கேயார், விஜயகாந்த், முக்தா சீனிவாசன், சச்சு, ஒய்.ஜி.மகேந்திரன், சிவக்குமார், ராஜசேகர், வைரமுத்து, சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட திரைநட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
பின்னர் எஸ்.எஸ்.ஆரின் உடல், எல்டாம்ஸில் இருந்து பெசண்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது 6 மகன்களும் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா இரங்கல்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைவுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர்., உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பதை அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் லட்சிய நடிகர் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆரான, தலைமுறைகளை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். சினிமா மட்டுமன்றி அரசியலிலும் தடம் பதித்து எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யாக சிறப்பாக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி இரங்கல்
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கை வீரராகவும், குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் விளங்கிய எஸ்.எஸ். ஆர்., மறைவு தனது நெஞ்சை உலுக்கியதுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துணை நின்றவரை இழந்துவிட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், எஸ்.எஸ்.ஆரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு கலையுலகின் சார்பிலும், தி.மு.க., சார்பிலும் தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நடிகை சச்சு இரங்கல்
சொர்க்கவாசல் படத்தில் தான் முதலில் பார்த்தேன். ராஜாஜி படத்தில் தங்கையாக நடித்தேன். மூத்த நடிகர்கள் ஒவ்வொருவாராக இறந்து வருவதாக வருத்தமாக இருக்கிறது. அவரது நடிப்பில் சோகம் , சிரிப்பு எல்லாமே இருக்கும். யாருக்கும் பயந்தவர் கிடையாது. அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை, இன்றைக்கு அவர் நம்மிடம் இல்லாதபோது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என நடிகை சச்சு கூறியுள்ளார்.
பாக்யராஜ் இரங்கல்
லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நிறைய படங்களை பார்த்துள்ளேன். பெண்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். அவரது படங்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும். அவருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பாக்யராஜ் கூறியுள்ளார்.
வைரமுத்து இரங்கல்
சரித்திரத்தின், தங்க தூண் ஒன்று சாய்ந்துவிட்டது. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு பிறகு எஸ்.எஸ்.ஆர்., தான். லட்சிய நடிகர் என்ற அடைமொழி போற போக்கில் வந்த பட்டம் அல்ல, பகுத்தறிவு கோட்பாட்டுக்கு உட்பட்டு வாழ்ந்தவர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அரைநாள் படப்பிடிப்பு ரத்து
எஸ்.எஸ்.ஆரின் மறைவையொட்டி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் இன்று அரைநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.