ஏ.ஆர்.எஸ். மூவிஸ் பிரைவேட் லிட்., பட நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகும் படம் - காதலுக்கு மரணமில்லை. வசந்தகாலப்பறவைகள் தொடங்கி, சூரியன், ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன், சிந்து நதி பூ, சக்தி என பல பிரம்மாண்டமான வெற்றிப்படங்களை தந்த கே.டி.குஞ்சுமோன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தைத் தயாரிப்பதோடு, கதை, வசனத்தையும் எழுதியிருக்கிறார் கே.டி.குஞ்சுமோன். காதலுக்கு மரணமில்லை என்ற படத்தை சி.பாலாஜி என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார். படத்தில் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான தேஜா என்ற புதுமுக நடிகர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தேஜாவுக்கு ஜோடியாக மீராநந்தன், மடாலிஸா ஷர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களில் மடாலிஸா ஷர்மா மும்பையைச் சேர்ந்தவர். கருணாஸ், சுஹாசினி, சரண்ராஜ், வையாபுரி, அலக்ஸ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், மயில்சாமி, சாம்ஸ், வீரசமர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த மேனாலிஸா என்ற நடிகை எக்கச்சக்கம் எக்கச்சக்கம் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். காதலுக்கு மரணமில்லை படத்தின் கலை இயக்குநரான வீரசமர், இப்படத்தில் கதாநாயகனின் நண்பராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன் பூ படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். காமெடி நடிகர் கருணாஸ் இந்தப்படத்தில் காமெடியனாக மட்டுமல்ல, கனமான கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகராகவும் தன் அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். காதலுக்கு மரணமில்லை படத்தின் கதைக்களம் சென்னை. ஆனால் உலகம் முழுக்க நடக்கிற கதை என்கிறார் இயக்குநர்.காதலுக்கு மரணமில்லை - ஃபேமிலி செண்ட்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சகமான முக்கோணக் காதல்கதை!. இந்தப்படத்தை பிரேமிக்கு சாவுலேது என்ற பெயரில் தெலுங்கிலும், பியார் நஹி மர்த்தா என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியிடுகிறார். இப்படத்தில் பல லட்சம் செலவில் டிஜிட்டல் இண்டர்மீடியட் செய்யப்பட்டு, கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இசையமைப்பாளர் பரத்வாஜ். சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், பென்னி தயால், கார்த்திக், சித்ரா, சுசித்ரா போன்ற முன்னணி பாடகர், பாடகிகள் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வித்தியாசமான லொகேஷன்களில் நடைபெற்றிருக்கிறது. தவிர ஏவிஎம் ஸ்டூடியோவில் 55 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டிலும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. காதலுக்கு மரணமில்லை படத்தை தீபாவளி அன்று திரையிடத் திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.