வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரித்து, 1960ம் ஆண்டு இயக்குநர் டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு உதவி இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் இயக்குநர் ஏ ஜெகன்னாதன். பின்னர் எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குநரான ப நீலகண்டனிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தவர் இவர். அப்போதைய எம் ஜி ஆரின் பெரும்பாலான திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த பெருமையும் இவருக்குண்டு. அந்த வரிசையில், எம் ஜி ஆர் நடிப்பில் 1964ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “படகோட்டி” திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவருக்கு கிடைத்த ஒரு சுவாரஸ்ய அனுபவமே இந்தப் பதிவு.
பாட்டுக்கோர் “படகோட்டி” என சொல்லும் அளவிற்கு படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இத்திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றான “தொட்டால் பூ மலரும்” என்ற பாடலின் லொகேஷன் பார்ப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு, பின்னர் இறுதியாக கேரளாவில் ஆலப்புழை அருகில் பாதுரா மணல் என்ற இடத்தை தெரிவு செய்து, படப்பிடிப்பை நடத்தி வந்தார்.
அப்போது ஒரு நாள், எம் ஜி ஆர், சரோஜாதேவி சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படத்தின் இயக்குநரான டி பிரகாஷ்ராவ் இயக்கிவிட்டு, அதன் பின் துணை நடிகர்கள், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தபோது, படத்தின் இயக்குநர் டி பிரகாஷ் ராவ் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இயக்குநர் ஏ ஜெகன்னாதனை அழைத்து, அந்தக் காட்சிகளை எல்லாம் நீயே எடுத்துவிடு என்று கூறி அவர் சாப்பிட சென்றுவிட, அந்த குறுகிய நேரத்தில் இவரால் படமாக்கப்பட்ட ஒரு காட்சியும் “படகோட்டி” திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது என்பது, இயக்குநர் ஏ ஜெகன்னாதனுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என்றால் அது மிகையன்று.
படகில் செல்லும் நடிகை மனோரமாவை மற்றொரு படகின் மூலம் நடிகர் அசோகன் துரத்திச் செல்வது போன்ற ஒரு காட்சியை இயக்கும் பொறுப்பைத்தான் இயக்குநர் ஏ ஜெகன்னாதன் ஏற்றிருந்தார். அதற்கான ரிகர்சல் எல்லாம் பார்த்தாகிய பின், காட்சியைப் படமாக்க தயாராக இருந்த போது, தொலைவில் இயக்குநர் டி பிரகாஷ்ராவ் வருவதைக் கண்டு, அவரிடம் ஓடிச் சென்று, சார் ரிகர்சல் எல்லாம் பார்த்துவிட்டேன்.
நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டால், காட்சியைப் படமாக்கிவிடலாம் என்று இயக்குநர் ஏ ஜெகன்னாதன் கூற, அவரோ ரிகர்சல் நல்லாதான் வந்திருக்கிறது. நீயே அந்தக் காட்சியைப் படமாக்கிவிடு என பச்சைக் கொடி காட்ட, அந்தக் குறிப்பிட்ட காட்சியை உதவி இயக்குநராகப் அப்போது பணிபுரிந்துவந்த ஏ ஜெகன்னாதனே இயக்கியிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த படத்தின் இயக்குநர் டி பிரகாஷ்ராவ் 'வெரிகுட்' என ஏ ஜெகன்னாதனைப் பாராட்டியும் சென்றிருக்கின்றார்.
ஒரு படத்தின் உதவி இயக்குநருக்கு இவ்வாறு கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் அவர்களுக்கு இயக்குநர் என்ற இலக்கை எட்டிப் பிடிக்க உதவும் ஓர் உந்து சக்தியாகும். அப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பை “படகோட்டி” திரைப்படத்தில் இயக்குநர் டி பிரகாஷ்ராவ் ஏ ஜெகன்னாதனுக்கு வழங்கியதன் விளைவுதான், பின்னாளில் “இதயக்கனி” என்ற திரைப்படத்தில் எம் ஜி ஆரையே இயக்கும் அளவிற்கு உயர்ந்து, வெள்ளித்திரையின் உச்ச இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக நிலைத்து நின்றார் இயக்குநர் ஏ ஜெகன்னாதன்.




