'கங்குவா' பட வழக்கு முடிவு : படம் திட்டமிட்டபடி வரும்... | தமிழில் அறிமுகமாகும் கயாடு லோஹர் | நவ.29ம் தேதி திரைக்கு வரும் சித்தார்த்தின் ‛மிஸ் யூ' | மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் புதிய கூட்டணி? | ''சினிமா தொழில் 'ரிஸ்க்'; 3 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்'': வருண் தேஜ் | பிரபாஸ், ஹோம்பாலே கூட்டணியில் மூன்று படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'அமரன்' இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ் | மணிரத்னம் படத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் | ஒரே நாளில் மோதிக் கொள்ளும் சூர்யா - தனுஷ் |
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 72 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். திரை உலகில் பின்னணி பாடகிகளில் இவரது குரல் வித்தியாசமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. இதற்காக இவருக்கு அதிகமான வாய்ப்புகளை இளையராஜா வழங்கினார்.
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே நேற்றிரவு (மே 1) காலமானார்.
இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இசை குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1978ல் கிருஷ்ணலீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.
பின்னர் நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடி உள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் சினிமா தவிர்த்து கணவர் ரமணன் உடன் இணைந்து 6 ஆயிரம் மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசை துறையை சார்ந்தவர் தான். அவரது இசையில் வெளியான ‛நீரோட்டம்' படத்திலும் கணவர் உடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். ரமணனும் பாடல்கள் பாடி உள்ளார். நிறைய படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா, தங்களது இசைக் குழு தவிர்த்து வேறு பொது வெளியில் உமா ரமணன் பெரியளவில் வர மாட்டார். எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் அவர் இல்லை. ஊடகம் உள்ளிட்ட எந்த ஒரு தளத்திலும் அவர் பேட்டி கொடுத்தது இல்லை.
உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று(மே 2) மாலை நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உமா ரமணன் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்...
01. பூங்கதவே தாழ் திறவாய்... - நிழல்கள்
02. ஆனந்த ராகம்... - பன்னீர் புஷ்பங்கள்
03. பூபாளம் இசைக்கும்... - தூரல் நின்னு போச்சு
04. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு... - மெல்ல பேசுங்கள்
05. கஸ்தூரி மானே... - புதுமைப் பெண்
06. நீ பாதி நான் பாதி... - கேளடி கண்மணி
07. ஆகாய வெண்ணிலாவே... - அரங்கேற்ற வேளை
08. பொன் மானே கோபம் ஏனோ... - ஒரு கைதியின் டைரி
09. கண்மணி நீ வர காத்திருந்தேன் - தென்றலே என்னை தொடு
10. ராக்கோழி கூவையில... ஒரு தாயின் சபதம்
11. ஏலேழம் குயிலே... - பாண்டி நாட்டு தங்கம்
12. பூத்து பூத்து குலுங்குதடி... கும்பக்கரை தங்கையா
13. பூங்காற்று இங்கே வந்து... வால்டர் வெற்றிவேல்
14. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே... - நந்தவன தேரு
15. கண்ணும் கண்ணும் தான்... - திருப்பாச்சி16. ஆசை ராஜா ஆரிராரோ... - மூடுபனி
17. கல்வியில் சரஸ்வதி... - குடும்பம் ஒரு கதம்பம்
18. மஞ்சள் வெயில் மாலை... - நண்டு
19. அமுதே தமிழே அழகிய மொழியே... - கோயில் புறா
20. செவ்வரளி தோட்டத்திலேயே.... - பகவதிபுரம் ரயில்வேகேட்
21. தாழம்பூவே கண்ணுறங்கு... - இன்று நீ நாளை நான்
22. காதில் கேட்டது ஒரு பாட்டு... - அன்பே ஓடி வா
23. தாகமே உண்டானதே... - கெட்டிமேளம்
24. ஸ்ரீரங்கநாதனின்... - மகாநதி
25. ஆறும் அது ஆழமில்ல... - முதல் வசந்தம்
26. இனிமேலும் நல்ல நேரம் தான்... - பொன்மனச் செல்வன்
27. உன்ன பாத்த நேரத்துல... - மல்லுவேட்டி மைனர்
28. குயிலே குயிலே சின்னசிறு குயிலே... - புலன் விசாரணை
29. ஓ உன்னாலே நான்... - என்னருகில் நீ இருந்தால்
30. முத்தம்மா முத்து... - தந்துவிட்டேன் என்னை
31. கண்மணிக்குள் சின்ன சின்ன.. - சின்ன மாப்பிள்ளை
32. இது மானோடு மயிலாடும் காடு - எங்க தம்பி
33. தண்ணீரிலே முகம் பார்க்கும்... - மணிக்குயில்
34. சந்தன கும்பா உடம்புல... - பொன்விலங்கு
35. சிங்காரம்மா நல்ல... - பெரிய மருது
36. ஊரடங்கும் சாமத்திலே... - புதுப்பட்டி பொன்னுத்தாய்
37. பூச்சூடும்... - ஆணழகன்
38. நில் நில் பதில் சொல் சொல்... - பாட்டு பாடுவா
39. வா சகி வா சகி... - அரசியல்
40. இது என்ன இது என்ன புது உறவா... - சிவகாசி
ஏவி ரமணன் வேண்டுகோள்
உமா ரமணனின் கணவர் ஏவி ரமணன் வெளியிட்ட வீடியோவில், ‛‛எனது மனைவி உமா ரமணன் இறைவனடி சேர்ந்தார். மே 1ம் தேதி மாலை அவர் இறப்பார் என நானும், எனது மகனும் கனவிலும் நினைக்கவில்லை. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். பிரைவசி காரணமாக இந்த வேண்டுகோளை உங்களுக்கு வைக்கிறேன். இது உமா ரமணனின் ஆசையும் கூட'' என தெரிவித்துள்ளார்.
உடல் தகனம்
உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு உமா ரமணின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.