விமர்சனம்
36 வயதினிலே
வாங்க ராசாத்தி!
ஜோதிகாவைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு! அத்தனைக்கும் சேர்த்து காட்சிக்குக் காட்சி அப்ளாஸ் வாங்குகிறார் திருமதி சூர்யா.
பஞ்ச் டயலாக், குத்தாட்டம், அரைகுறை ஆடை, இரட்டை அர்த்த வசனம், ஒரே பாடலில் கோடீஸ்வரனாவது, அரிவாள், துப்பாக்கி, ரத்தம் என்று எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு பெண்களை மையப்படுத்தி துணிச்சலாய் யதார்த்தமாய், தன்னம்பிக்கையாய் ஒரு படம் கொடுத்ததற்காகவே தாராளமாய்ப் பாராட்டலாம்.
36 வார்த்தைகளில் கதையைச் சொல்லிவிடலாம். கல்லூரிக் காலத்தில் துடிப்புடனும், தைரியத்துடனும் இருக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு அத்தனையையும் தொலைத்து சோர்ந்து போகிறார்களே ஏன்? என்ற கதைக்களத்தை சமூகப் பிரக்ஞையோடு தந்ததற்காகவே இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஒரு கைகுலுக்கல். (ஹவ் ஓல்ட் ஆர் யு மலையாளப் படத்தை தமிழிலும், இவரே ரீமேக் செய்திருக்கிறார்.)
கணவனாலும் மகளாலும் ஒன்றும் தெரியாதவள் என்று புறக்கணிக்கப்படுவதால் புழுங்குகிறார் ஜோதிகா. அவர் தோழியின் தூண்டுதலால் குடியரசுத் தலைவரே கூப்பிட்டுப் பாராட்டும் அளவுக்கு உயர்வதுதான் கதை.
வீட்டாரால் புறக்கணிக்கப்படும்போது காட்டும் கோபம், தன் மேல் என்ன தவறு என்று துடிக்கும் ஆதங்கம், ஆன்ட்டி என்று ஒருவன் கூப்பிடும்போது உண்டாகும் அதிர்ச்சி, பிரசிடெண்ட் முன்பு மயங்கி விழுவதால் ஏற்படும் கேலிகளால் கூனிக்குறுகி வெம்புதல், தோழியின் தன்னம்பிக்கை வார்த்தைகளால் மெல்லத் தலை நிமிர்தல், ஃபேஸ்புக் மனிதர்களுக்கு தடாலடியாய்த் தயக்கமே இல்லாமல் பதில் சொல்லும் துணிச்சல் என்று காட்சிக்குக் காட்சி மனதைக் கொள்ளைக் கொள்கிறார் ஜோதிகா. இத்தனை திறமை வாய்ந்த நடிகையை இவ்வளவு ஆண்டுகள் மறைத்து வைத்திருந்ததற்காக சூர்யா மேல செல்லமாய்க் கோபம் வருகிறது!
ரஹ்மானும், சிறுமி அமிர்தாவும் ஓகே. ஜோதிகா புயலில் இவர்கள் கரை ஒதுங்குவதே அதிசயம்தான்! அபிராமி, மிடுக்கு.
பிரசிடெண்ட்டிடம் ஜோதிகாவின் மகள் என்ன சொன்னாள்? என்பது சுவாரஸ்யம்தான். ஆனால் அதை இத்தனை இழு இழுத்திருக்க வேண்டாம்!
அஞ்சு சந்தோஷங்களை அடைஞ்சு, அம்பது விருப்பங்களைக் குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்திருக்கேன். விஜியின் வசனங்கள் சோர்ந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை டானிக்!
சந்தோஷ் நாராயணின் பாடல்களோடு ரீரெக்கார்டிங்கும் பக்கா ரியலிஸம்!
36வயதினிலே - திருமணமான ஆண்கள் பார்க்க வேண்டிய படம்!
குமுதம் ரேட்டிங் - நன்று
ஆஹா - ஜோதிகா ஜோதிகா ஜோதிகா
ஹிஹி - இங்கிலீஷ் விக்கிலீஷ் படம் நினைவுக்கு வருகிறது. பிரசிடெண்ட் கேள்வி சஸ்பென்ஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!