கதைச் சுருக்கம்
ஹேப்பி நியூ இயர் படத்தின் கதைப்படி, சார்லியான ஷாருக்கானைச் சுற்றியே கதை நகர்கிறது. சார்லி, தனது தந்தையான அனுபம் கர், குரோவர் என்ற வைர வியாபாரியான ஜாக்கி ஷரப்பை பழி வாங்குவதற்காக வேறுபட்ட குணாதிசியங்களைக் கொண்ட 6 பேரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒரு டீம்மை அமைக்கிறார். இந்த டீம்மில் சார்லி, நந்து (அபிஷேக்), ஜாக் (சோனு சூட்), டம்மி (போமன் இரானி), ரோஹன் (விவான் ஷா) மற்றும் மோகினி( தீபிகா படுகோனே) ஆகியோர் உள்ளனர். நியூ இயரை முன்னிட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள குரோவரின் வைரத்தை கொள்ளையடிக்க சார்லி திட்டமிடுகிறார். இதற்காக நடன நிகழ்ச்சி நடத்துவது போல் கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் செல்ல முடிவு செய்கிறார். இதில் ஏற்படும் தடைகளை சமாளித்து தனது டீம்முடன் சார்லி எவ்வாறு கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் நுழைகிறார்? அவர் அந்த வைரத்தை கொள்ளையடித்தாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது ஹேப்பி நியூ இயர் படத்தின் மீதி கதை.
டீஸ் மார் கான் படத்தின் தோல்விக்கு பிறகு, ஃபரக் கான் மீதான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக எழுந்த விமர்சனங்களை தாண்டி ஃபரக் கான் தனது இயக்கத்தில் சாதித்திருக்கிறார். ஓஹோ என புகழும் அளவிற்கு இல்லாவிட்டாலும், மொத்தத்தில் பார்க்கையில் அவரது இயக்கம் சிறப்பாகவே உள்ளது. ஒரு நொடி கூட கண்ணை இமைக்க விடாதபடி பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனங்களை பற்றி கூற வேண்டுமானால், மிகவும் பவர்புல்லாகவும், மனதில் பதியும் படியாகவும் உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் நேர்மறையாக சிந்திக்க வைப்பதாகவும், அதே சமயம் வயிறு குலுங்க சிரிகக வைப்பதாகவும் அமைந்துள்ளது. விஷால்-ஷேகரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சில பாடல்கள் நம்மையும் படத்தின் களத்திற்குள் இழுத்துச் சென்று ஆட வைக்கிறது.
ஷாருக்கானின் நடிப்பு கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த படத்திலும் பாராட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. உடன் நடித்துள்ள சோனு சூத், அபிஷேக், பொமம், தீபிகா மட்டுமல்ல புதுமுகமான விவான்ஷாவிற்கும் ஈடுகொடுத்து, அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஷாருக்கான் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அபிஷேக், பெரிதாக மெனக்கெடாமல், சற்றே மந்தமான நடிப்பை அளித்துள்ளார். ஆனால், மீண்டும் படமுள்ள வரும் கேரக்டர் இந்த படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. போமன் இரானி நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை மிக நேர்த்தியாக செய்துள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தென்னிந்திய பெண்ணாக வந்து தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோனே, இந்த படத்தில் மராத்தி பெண்ணாக வந்து மீண்டும் தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். தனது கேரக்டரை அனைவரும் பேசும் வகையில் அற்புதமான நடிப்பை அளித்துள்ளார். சூனு சூட், கதைக்கு தேவையேயில்லை என்று சொல்லும் அளவிற்கு சொதப்பி இருக்கிறார். விவான் ஷா, அந்த கேரக்டருக்கு பொருத்தமில்லை என்றே நினைக்க வைக்கிறார். மற்றபடி தனது நடிப்பையும், பங்களிப்பையும் தன்னால் இயன்ற அளவு அளித்துள்ளார்.
மற்ற சாதாரண படங்களைப் போல் கதைக்கு மீறிய காட்சிகளையும், வசனங்களையும் வைத்து படத்தை நீளமாக இழுத்து சென்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஹேப்பி நியூ இயர் நல்ல படம் என்றாலும், ஒரு முறை பார்க்கலாம்.
மொத்தத்தில், ஹேப்பி நியூ இயர் - ரசிகர்களை சரியான முறையில் பொழுதுபோக்க தவறிய டல் இயர்.
ரேட்டிங் - 2/5














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!