
நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ?
2026ம் ஆண்டின் முக்கியமான ஒரு வெளியீட்டு நாளாக நவம்பர் 20ம் தேதி அமைய உள்ளது. முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்துள்ள "ஓம்" படம் அன்று வெளியாகிறது. அப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்துள்ளதால் ஒரு பான் இந்தியா கவனத்தையும் இப்படம் பெற்றுள்ளது.
"ஓம்" படத்துடன் சேர்ந்து தமிழில், விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பாகுட்டி", கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்துள்ள "சத்தியவான் சாவித்திரி" ஆகிய படங்களும் வெளியாகின்றன. இந்த மூன்று படங்களுக்குள்தான் முக்கியமான போட்டி.
ஆன்லைன் முன்பதிவு இப்படங்களுக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், காலை 6 மணி காட்சிகளுக்கான முன்பதிவு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தமிழக அரசு காலை 6 மணி சிறப்புக் காட்சிகளை ஒரு வாரம் நடத்திக் கொள்ளலாம் என்ற நிரந்தர அரசாணையைப் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த "சீன்" படம் அந்த சிறப்புக் காட்சியைப் பெற்ற முதல் படமாக அமைந்தது. படம் வெளியான அன்று அப்படத்திற்கான முன்பதிவு நன்றாகவே இருந்தது.
"சீன்" படத்தைத் தொடர்ந்து தற்போது "ஓம்" படத்திற்கான 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு விறுவிறுப்பான முன்பதிவு நடந்து வருகிறது. பெரும்பாலான தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
அதே சமயம், "அப்பா குட்டி" படத்திற்கு காலை 6 மணி சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது. ஆன்லைன் தளங்களில் அதற்கான முன்பதிவு இடம் பெறவில்லை. காலை 9 மணிக்கு மேல் தான் காட்சிகள் ஆரம்பமாகின்றன. அதே போன்ற நிலைதான் "சத்தியவான் சாவித்திரி" படத்திற்கும் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமான முன்பதிவு மிக மிகச் சுமாராகவே இருக்கிறது.
"ஓம்" படத்திற்கு படம் வெளியாகும் நாளான வெள்ளிக் கிழமை மட்டும் காலை 6 மணி காட்சிகளுக்கு முன்பதிவு சிறப்பாக உள்ளது. ஆனால், சனி மற்றும் ஞாயிறு காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு குறிப்பிடும்படியான முன்பதிவு நடக்கவில்லை. ஒரு வாரம் அனுமதி என்றாலும் படம் வெளியாகும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும்தான் காலை 6 மணி காட்சிகள் நடைபெறுகின்றன. திங்கள் முதல் காலை 9 மணிக்குத்தான் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை "சீன்" படத்திற்கும் பார்க்க முடிந்தது.
அரசு தரப்பிலிருந்து ஒரு வாரத்திற்கு காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் இப்படியான சிறப்புக் காட்சிகளுக்கு போதிய வரவேற்பை அளிக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…