
பிளாஷ்பேக்: “மணமகள்” திரைப்படம் தந்த மதிப்பிற்குரிய அறிமுகங்களும், மகத்தான மாற்றங்களும்
தமிழ் திரையுலகில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனது நகைச்சுவையின் மூலமாக எடுத்துரைத்து, பார்க்கும் பார்வையாளர்களை சிரிக்கச் செய்வதோடு விட்டுவிடாமல், அவர்களை சிந்திக்கவும் வைத்தவர்தான் "கலைவாணர்" என் எஸ் கிருஷ்ணன். நாடக மேடையிலிருந்து சினிமா உலகிற்கு வந்த இவர், நகைச்சுவை என்ற கருவி கொண்டு, நற்பண்புகளை விதைக்கும் பல சீர்திருத்தக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்தியம்ப சினிமா என்ற இந்த சீர்மிகு ஊடகத்தை மிகச் சரியாக பயன்படுத்தியவர் என்றால் அது மிகையன்று.
நடிப்பென்ற ஒற்றைப் புள்ளியிலேயே நின்றுவிடாமல், பல தரமான திரைப்படங்களத் தயாரித்து, தமிழ் திரையுலகிற்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்த இவர் தயாரித்து, இவரே இயக்கியிருந்த ஒரு மகத்தான திரைப்படம்தான் “மணமகள்”. மலையாள நாடக ஆசிரியரான முன்ஷி பரமுபிள்ளை அவர்கள் எழுதிய மலையாள நாடகமான “சுப்ரபா” என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் மு கருணாநிதி.
தமிழ் திரைப்படங்களில் அதுவரை வெறும் நடன மங்கைகளாகவே தங்களது பங்களிப்பைச் செய்து வந்த "திருவாங்கூர்" சகோதரிகள் என அழைக்கப்பட்டு வந்த லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகியோரில் பத்மினி ஒரு பிரதான கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படமும் இந்த “மணமகள்” திரைப்படமே. மேலும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் அறிமுகத் திரைப்படம் என்றால், அது 1952ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனை நாயகனாக அறிமுகம் செய்து வைத்த “பராசக்தி” திரைப்படம்தான் இவருக்கும் அறிமுக திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு முன்பே நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் ஒரு பிச்சைக்காரனாக நடித்து, 1951ல் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “மணமகள்” திரைப்படம்.
இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில், நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மிக நீண்ட வசனம் ஒன்றை, அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியபோது, அருகிலிருந்த என் எஸ் கிருஷ்ணனின் மனைவியும், நடிகையுமான டி ஏ மதுரம் கண்களில் நீர் கசிய காட்சியைப் பார்த்து ரசித்திருக்கின்றார். அப்படி ஒரு சிறப்பான நடிப்பை நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் வழங்கியும், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம் பெறாத வண்ணம் தணிக்கைக் குழுவினரால் வெட்டப்பட்டுவிட்டது. படத்தின் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தும், இவரது காட்சிகள் இடம் பெறாமல் போன ஒரு திரைப்படமாக வந்ததுதான் இந்த “மணமகள்” திரைப்படம்.
1960ல் வெளிவந்த “பொம்மை” திரைப்படத்தில்தான் திரைக்குப் பின்னால் பணியாற்றிய திரைக்கலைஞர்களை, அவர்களே ஒவ்வொருவராக நேரில் திரையில் தோன்றி தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது போன்ற ஒரு புதுமையை படத்தின் இயக்குநரான வீணை எஸ் பாலசந்தர் செய்து காட்டியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே 1951ல் வெளிவந்த இந்த “மணமகள்” திரைப்படத்தில் படத்தின் இயக்குநரான "கலைவாணர்" என் எஸ் கிருஷ்ணன் இதை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்கள், நடனம், கலை இயக்குநர், ஒப்பனையாளர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு நிர்வாகி, ஒலிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், உதவி இயக்குநர் என படத்தில் பங்காற்றிய தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரையும் நேரில் திரையில் காட்டச் செய்து, புதுமை படைத்த ஒரு கலைப்படைப்பாகவும் வந்த திரைப்படம்தான் இந்த “மணமகள்”.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!