
பிளாஷ்பேக்: ஒரே இயக்குநரின் அதிகப்படியான திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா
தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தலைசிறந்த கதை வசனகர்த்தாவாக, எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் போன்ற அன்றைய முன்னணி நாயகர்களின் எண்ணற்ற திரைப்படங்களுக்கு தனது வசனங்கள் மூலம் உயிர்ப்பை வழங்கிய உன்னத வசனகர்த்தாவாக கலையுலகால் அடையாளம் காணப்பட்டவர்தான் ஆரூர்தாஸ்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு இவர் வசனம் எழுதிய முதல் படமான “பாசமலர்”, 1961ம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடி, தென்கோடி தமிழ் திரை ரசிகனும் அறியும் வண்ணம் பிரபலமானார் ஆரூர்தாஸ். கதாசிரியராக கலையுலகில் கால் பதித்த ஏ சி திருலோகசந்தர் என்ற இளைஞரை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து அழகு பார்த்த ஏ வி எம்மின் படைப்பான “வீரத்திருமகன்” திரைப்படத்தின் வசனங்களை எழுதும் வாய்ப்பினையும் பெற்றவரானார் ஆரூர்தாஸ். “வீரத்திருமகன்” திரைப்படத்தில் ஆரம்பமான ஏ சி திருலோகசந்தர் - ஆரூர்தாஸ் என்ற இந்த வெற்றிக் கூட்டணியில் பின்னாளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கலையுலகிற்கு பெருமை சேர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே.
“வீரத்திருமகன்” திரைப்படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதியது தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று படத்தின் இயக்குநர் ஏ சி திருலோகசந்தரே கூறும் அளவிற்கு அத்திரைப்படத்தின் வசனங்கள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. அதேபோல் ஆரூர்தாஸ் வசனம் எழுதிய திரைப்படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருந்ததும் இந்த “வீரத்திருமகன்” திரைப்படமே. “தேவையில்லாத கேள்விகளை நீ கேட்காமல் இருந்தால், அநாவசியமான பொய்களை நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது”, “ஊமையன் வளர்த்த கிளி, பேசத் தெரிந்தவனிடம் ஓடிவிட்டது” போன்ற மனதை வசீகரிக்கச் செய்யும் இவரது வசனங்கள் நிறைந்த படமாக அமைந்ததுதான் இந்த “வீரத்திருமகன்”.
இதனைத் தொடர்ந்து “நானும் ஒரு பெண்”, “காக்கும் கரங்கள்”, “அன்பே வா”, “தங்கை”, “இரு மலர்கள்”, “பைலட் பிரேம்நாத்”, மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணா தயாரித்து, சிவாஜிகணேசன் நடித்திருந்த “விஸ்வரூபம்”, “குடும்பம் ஒரு கோயில்”, “வசந்தத்தில் ஓர் நாள்”, “பத்ரகாளி”, “பெண் ஜென்மம்”, “வணக்கத்துக்குரிய காதலி” என ஏராளமான திரைப்படங்களில் இவ்விருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். இதன் மூலம் வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒரே இயக்குநருக்கு அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் என்றால் அது இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் ஒருவருக்கு மட்டுமே என்பதை நாம் இதன் மூலம் உறுதியாக கூற முடியும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!