
பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்”
பிப் 09, 2026
Advertisement
பேசும் படம் தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை, நம் தென்னிந்திய திரைப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்து, எண்ணிலடங்கா பாடல்களை படங்களில் இடம்பெறச் செய்து, அந்தப் பாடல்களுக்காகவே பல படங்கள் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்த்து, ரசிக்கப்பட்டு, அவை எல்லாம் வெற்றித் திரைப்படங்களாக மாறிய ஒரு தனிச்சிறப்பு மிக்க வரலாறு நம் தமிழ் திரையிசைக்கு எப்போதும் இருப்பதுண்டு.
கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை என இசையின் அத்தனை வடிவங்களிலும் பல்லாயிரக் கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கிய நம் தமிழ் திரையிசை ஜாம்பவான்கள் அரிதாக சில வட்டார இசை வடிவங்களிலும் ஓரிரு பாடல்களைத் தந்ததுண்டு. குறிப்பாக இசையமைப்பாளர் "தேனிசை தென்றல்" தேவாவின் வருகைக்குப் பின் "கானா" பாடல்களின் ஆதிக்கம் என்பது நம் தமிழ் திரையிசையில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது என்றால் அது மிகையன்று.
அந்த வரிசையில் இசையமைப்பாளர் தேவாவின் வருகைக்கு முன்பே, இந்த "கானா" வகைப் பாடலை தமிழ் திரையிசைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய ஒரு திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பொம்மலாட்டம்”. ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில், 1969ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் "முக்தா" வி சீனிவாசன். படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதி, "ஜாம்பஜார் ஜக்கு" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சோ.
“மயக்கத்தை தந்தவர் யாரடி”, “நீ ஆட ஆட அழகு”, “நல்ல நாள் பார்க்கவோ” என இசையமைப்பாளர் வி குமாரின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நடிகை மனோரமாவும், நடிகர் சோவும் பங்கு பெறுவது போல் வரும் ஒரு பாடல் காட்சிக்கு மெட்ராஸ் பாஷையை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதினால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குநர் "முக்தா" வி சீனிவாசன் அபிப்ராயப்பட, பாடலாசிரியர் வாலியோ, அது தனக்கு சிரமமாக இருப்பதாக உணர்ந்ததால், எம் எல் கோவிந்த் என்பவரை மெட்ராஸ் பாஷையில், பாடலுக்கான பொருத்தமான வார்த்தைகளை எடுத்து வழங்க பணியமர்த்தப்பட்டு, பின் பாடலை எழுதி முடித்தார் கவிஞர் வாலி.
“வா வாத்தியாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா வுடமாட்டேன், ஜாம்பஜார் ஜக்கு, நா சைதா பேட்ட கொக்கு” என்ற கவிஞர் வாலியின் பாடலுக்கு பின்னணி பாடி சிறப்பித்திருப்பார் நடிகை மனோரமா. 1969ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் "கானா" பாடல்களின் வருகைக்கு அடித்தளமிட்ட முதல் பாடலாக அமைந்திருந்தது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!