
பிளாஷ்பேக்: மீண்டும்…மீண்டும்… மாற்றம்..: மிகையான வெற்றி கண்ட “மீண்டும் கோகிலா”
தமிழ் திரையுலகில், அடுத்த தலைமுறை நாயகர்களின் விடியலுக்கான காலமாகவும், அவர்களது விஸ்வரூப வளர்ச்சிக்கான காலமாகவும் பார்க்கப்பட்டு வந்த 1980களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இருபெரும் நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கிடையே கடும் போட்டி இருந்து வந்த போதிலும், அவரவர் பாணியில் தரமான திரைப்படங்களைத் தந்து, தத்தமது ரசிகர்களை மகிழ்வித்திருந்ததோடு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வசூல் ரீதியாக நல்ல லாபம் தரக்கூடிய திரைப்படங்களாகவே தந்து, அவர்களையும் திருப்தியடையச் செய்திருந்தனர்.
அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த திரைப்படங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பும், ஈர்ப்பும் இருந்து வந்த காலகட்டமாக பார்க்கப்பட்டதுதான் இந்த 1980களின் காலகட்டம். “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே”, “சிகப்பு ரோஜாக்கள்”, “கல்யாண ராமன்”, “நீல மலர்கள்”, “குரு”, “வறுமையின் நிறம் சிவப்பு”, “வாழ்வே மாயம்” என இவ்விருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களில் இவ்விருவரது நடிப்பு மற்றும் உடல்மொழி என்பது பார்ப்போரின் கண்களை கவர்ந்திழுப்பதாகவே அமைந்திருக்கும். அவ்வாறு இவ்விருவரும் இணைந்து நடித்து, வெளிவந்த ஒரு வெற்றித் திரைப்படம்தான் “மீண்டும் கோகிலா”.
தனது மனைவி மற்றும் குழந்தையோடு நிம்மதியாக வாழ்க்கையை நடத்தி வரும் சுப்ரமணியம் என்ற வழக்கறிஞர், விருந்து ஒன்றில் காமினி என்ற ஒரு நடிகையின் அறிமுகம் கிடைக்க, பின் அந்த நடிகையின்பால் ஈர்க்கப்பட்டு, அவளுக்காக தன் குடும்பத்தையே தியாகம் செய்யத் தயாராகும் நிலைக்குத் தள்ளப்படும் வழக்கறிஞர் சுப்ரமணியத்தை எவ்வாறு மீண்டும் மீட்டெடுத்து வருகின்றார் அவரது மனைவி கோகிலா என்பதே இப்படத்தின் கதைக்கரு.
வழக்கறிஞர் சுப்ரமணியாக நடிகர் கமல்ஹாசனும், மனைவி கோகிலாவாக நடிகை ஸ்ரீதேவியும், நடிகை காமினியாக தீபாவும் நடித்திருந்த இத்திரைப்படத்தை முதலில் இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். அதேபோல் நடிகை காமினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தேர்வாகி இருந்தவர் ஹிந்தி நடிகை ரேகா. இதுவே இவரது முதல் தமிழ் திரைப்பட அறிமுகமாகவும் இருந்திருந்த நிலையில், ஒரு முழுப்பாடல் உட்பட, ஏறக்குறைய 3000 அடி வரை படம் வளர்ந்திருந்த போது திடீரென இயக்குநர் மகேந்திரன் இத்திட்டத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டு விலகிக் கொள்ள, பின்னர் ஹிந்தி நடிகை ரேகாவும் எவ்வித காரணமுமின்றி இத்திட்டத்திலிருந்து தன்னையும் விலக்கிக் கொண்டார். இவரது தந்தையும் நடிகருமான நடிகர் ஜெமினிகணேசன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டாம் என அவரிடம் சொன்னதாக ஒரு செவிவழிச் செய்தியும் அப்போது கசிந்ததுண்டு.
மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போது, படத்தின் நாயகன் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குநர் ஜி என் ரங்கராஜன் படத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1979ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து, பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “கல்யாண ராமன்” என்ற திரைப்படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் ஜி என் ரங்கராஜன். பின்னர் படத்தில் வரும் நடிகை காமினி கதாபாத்திரத்திற்கு நடிகை தீபா தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு வேகமெடுத்தது.
1981ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி”, “ஹே ஓராயிரம்”, “பொன்னான மேனி”, “ராதா ராதா நீ எங்கே” போன்ற படத்தின் அத்தனைப் பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைய, படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் விருதினை நடிகை ஸ்ரீதேவிக்குப் பெற்றுத் தந்த திரைப்படமாகவும், தென்னிந்திய திரையுலகில் அதிக ஊதியம் பெறும் நடிகை ஸ்ரீதேவி என்பதை உறுதி செய்த திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “மீண்டும் கோகிலா”.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!