காட்டாளன்,Kattalan

காட்டாளன் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : கியூப் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : பால்ஜார்ஜ்
நடிப்பு : ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், கபீர் துகான் சிங், ராஜ்
ஒளிப்பதிவு : ரெனடைவ்
இசை : ரவி பஸ்ரூர்
வெளியான தேதி : மே 29, 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2 / 5

கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி பெரியளவில் வியாபாரம் செய்கிறார் வில்லன் 'புஷ்பா' சுனில். அதற்காக ஒரு கூட்டத்தை அடிமையாக வைத்து இருக்கிறார். சுனிலுக்கும், இதேபோல் தந்தம் வியாபாரம் செய்யும் கபீர் துகான் சிங்கிற்கும் தொழில் போட்டி. அப்போது சுனில் டீமில் சேருகிறார் ஹீரோ ஆண்டனி வர்கீஸ். அடிமையாக இருக்கும் அந்த கூட்டத்தை மீட்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் இரண்டு வில்லன்களும் இணைந்து ஹீரோ டீமை துரத்த, என்ன நடக்கிறது. அந்த காடும், தந்தம் பிஸினசும் யார் கண்ட்ரோலுக்கு வருகிறது என்பது காட்டாளன் கதை

மலையாளத்தில் வந்த இந்த படத்தை தமிழில் டப் செய்து கொடுத்து இருக்கிறார்கள். படம் ஆரம்பித்த சில நிமிடத்தில் இது வழக்கமான படம் அல்ல, பக்கா ஆக் ஷன் கதை. அதிலும் ராவான இரண்டு தரப்பும் கொடூரமாக சண்டைபோட்டு, கொன்று கொண்டே இருக்கும் ரத்தக் கதை என புரிந்துவிடுகிறது. அந்த காட்டுக்குள் தனது சாம்ராஜ்யத்தை சுனில் எப்படி உருவாக்குகிறார். தன்னை எதிர்ப்பவர்களை, போட்டியாளர்களை எப்படி கொன்று குவிக்கிறார். போலீஸ், வில்லன் டீம் கண்ணில் மண்ணை துாவி எப்படி தந்தங்களை கடத்துகிறார் என்பது முதற்பாதியில் செல்கிறது. அந்த டீமுக்கு தந்தம் கடத்துவதில் சிக்கல் ஏற்பட, ஹீரோ ஆண்டனி வர்கீஸ் என்ட்ரி ஆகி, தனது புத்திசாலிதனத்தால் பிணத்தில் கூட தந்தங்களை கடத்துகிறார். அவருக்கும் சுனிலுக்கு மோதல் ஏற்பட, அடிமைகளாக இருக்கும் அந்த கூட்டத்தை காப்பாற்ற, இவரும் தந்தம் கடத்த ஆரம்பிக்க, கதை சூடுபிடிக்கிறது. அப்புறமென்ன, மீண்டும் சண்டை, சாவு, கொலை. இப்படி போகிறத கதை

புஷ்பா, கேஜிஎப் படத்தை பார்த்து அதே பாணியில், அதேடோனில் காட்டாளன் கதையை இயக்குனர் பால் ஜார்ஜ் எடுத்திருக்கிறார் என தெரிகிறது. அங்கே செம்மரக்கட்டை, இங்கே தந்தம் கடத்தல் அவ்வளவுதான். ஏதோ காக்கா, குருவியை சுட்டு கொல்வது போல யானைகளை கொன்று ஏகப்பட்ட தந்தங்களை ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கே இருந்து இலங்கைக்கு கடத்துவதாக கதை நகர்கிறது. இந்த பயணம்தான் படத்தின் பலம். கடத்தல், அதில் நடக்கும் சுவாரஸ்யம், ஹீரோ புத்திசாலிதனம், சண்டை சீன்கள் ஓகே. வில்லனாக நன்றாக நடித்து இருக்கிறார் சுனில்.

ஹீரோ எப்போதும் உர்ரென இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மட்டும் ஸ்கோர் செய்து இருக்கிறார். இடைவேளைக்குபின் ஹீரோவுக்கு உதவுபவராக, பக்கா சண்டைக்காரியாக வருகிறார் துஷாரா விஜயன். அவரின் கெட்அப், சண்டைக்காட்சிகள் பிரமாதம். மலையாளத்தில் துஷாரா என்ட்ரி அட்டகாசமாக அமைந்து இருக்கிறது. வில்லன் கூட்டத்தில் நல்லவராக இருக்கும் ஜெகதீஷ் நடிப்பும் ஓகே. ஒரு அதிரடி ஆக் ஷன் படத்தை , அதற்கான பீலில் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரெனடைவ். கேஜிஎப் மாதிரியே பின்னணி இசை அமைத்து இருக்கிறார் ரவி பஸ்ரூர். சிலசமயம் ஓவர் சத்தம், ஓவர் ரத்தம், ஓவர் பில்டப் படத்தை பின்னோக்கி இருக்கிறது

படம் முழுக்க சண்டை, கொலை, ரத்தம், பழிவாங்கல், பில்டப்தான் இருக்கிறது. கதை என்பது பல படங்களில் பார்த்து புளித்தது. தவிர, படத்தில் நடித்த எல்லாரும் ஒருவித சோகத்துடன் அல்லது ஒருவித கோபத்துடன் இருக்கிறார்கள். இவ்வளவு கொலைகள் ஏன், இவ்வளவு வக்கிரம் ஏன் என்ற கேள்வி பல இடங்களில் வருகிறது. இவ்வளவு நடிகர்கள் இருந்தும் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் முகம் பதியவில்லை.

காட்டாளன் படத்தின் இன்னொரு ஹீரோ பைட்மாஸ்டர் கேச்சா, யானை காட்சிகள், கடத்தல் காட்சிகள், அதிரடி, கொடூர சண்டைகாட்சியில் மிரட்டியிருக்கிறார். மற்றபடி பிரமாண்ட படத்தில் உருப்படியாக எதுவும் இல்லை. தலைவலிதான் மிச்சம். குடும்பத்தினர், பெண்களுடன் பார்க்கவே முடியாது. மலையாள டப்பிங் என்பதால் தமிழ் டச் எதுவும் இல்லை. அப்புறம், கிளைமாக்சில் கெஸ்ட் ரோலில் இன்னொரு பிரபல தாதாவாக வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் வரும் சில நிமிட காட்சிகளில் அவ்வளவு பில்டப். ஆனா, விஷயம் இல்லை. அடுத்த பாகத்தில் அவர் மெயின் வில்லன் போல. ஆனால், எடுப்பார்களா என தெரியவில்லை.

காட்டாளன் - யானை சம்பந்தப்பட்ட பிரமாண்ட ஆக் ஷன் கதை, பூனை அளவுக்கு கூட சுவாரஸ்யம் இல்லை

 

காட்டாளன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காட்டாளன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓