பைரி,Byri

பைரி - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிகே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஜான் கிளாடி
இசை - அருண் ராஜ்
நடிப்பு - சையத் மஜீத், மேக்னா எலன், விஜி சேகர்
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 3/5

நாகர்கோவில் மாவட்ட ஊர் ஒன்றில் நடக்கும் புறா பந்தயத்தைப் பற்றிய 'டீடெயில்' ஆன ஒரு படமாக இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி கொடுத்திருக்கிறார். கதைக்களம், வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, படமாக்கிய விதம் 'நேட்டிவிட்டி' ஆக அமைந்து ரசிக்க வைக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கதை. நாகர்கோவில் அருகே உள்ள ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பதும், புறா பந்தயம் விடுவதும் வழக்கத்தில் உள்ளது. புறா வளர்த்து பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கதையின் நாயகன் சையத் மஜீத்துக்கு பேரார்வம். ஆனால், மகன் படிக்க வேண்டும், புறா வளர்க்கக் கூடாது என்ற கண்டிப்பில் இருக்கிறார் அம்மா விஜி சேகர். அம்மா எதிர்ப்பையும் மீறி புறா பந்தயத்தில் கலந்து கொள்ள புறாக்களை தயார்ப்படுத்துகிறார் மஜீத். அந்த சமயத்தில் ஊரின் பிரபல ரவுடியான வினு லாரன்ஸ் மோசடி செய்து புறாவை அதிக நேரம் பறக்க விடுகிறார் என சண்டை போடுகிறார் சையத். பதிலுக்கு சையத் புறா, பந்தயத்தில் கலந்து கொள்ளும் போது அதைக் கலைத்துவிடுகிறார் வினு. இதனால் இருவருக்கும் இடையே கொலை வெறித் தாக்குதல் நடக்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

புறா வளர்ப்பு, புறா பந்தயம், அதன் வரலாறு என விவரமாக ஒரு ஆவணமாகவும் பதிவு செய்து அதில் நட்பு, காதல், குடும்பப் பாசம், பகை என விறுவிறுப்பான கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அந்த ஊரை பதிவு செய்த விதம், படத்தின் உருவாக்கம், கிராபிக்ஸ் காட்சிகள் என இயக்குனரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.

எதையும் எதிர்கொள்ளும் துடிப்பான இளைஞர் லிங்கம் கதாபாத்திரத்தில் சைத் மஜீத். புறா மீதும், பந்தயம் மீதும் வெறி கொண்டு திரிகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக அம்மா, அப்பாவையே எதிர்த்து சண்டை போடுகிறார். சில கொலை வழக்குகளை வைத்துள்ள ரவுடியான வினு லாரன்ஸை எதிர்த்து நேரடியாக மோதுகிறார். என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அந்த வேகம் நம் மனதில் நிற்கிறது.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன். மேக்னாவை நாயகன் சையத் காதலிக்க, சையத்தை சரண்யா காதலிக்கிறார். காதலும், கதாநாயகிகளும் வேண்டும் என்பதால் சில காட்சிகளுடன் மட்டுமே இவர்களது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகிகளை விடவும் மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் முழுவதும் இடம் பெற வைத்திருக்கிறார். நாயகனின் நெருங்கிய நண்பனாக படத்தின் இயக்குனர் ஜான் கிளாடி நடித்திருக்கிறார். கிளைமாக்சில் இவரது கதாபாத்திரம் கண்கலங்க வைத்துவிடுகிறது. இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்கும் பண்ணையார் கதாபாத்திரத்தில் ரமேஷ் ஆறுமுகம். கதாநாயகனின் அம்மாவாக விஜி சேகர். வில்லனாக வினு லாரன்ஸ் இவர்கள் அனுபவ நடிகர்களைப் போல அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

புறா பந்தயம் என்றாலே அந்த புறாக்களுடன் நாமும் பறக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவளார் வசந்தகுமார். நிறைய ஏரியல் ஷாட் காட்சிகள், பரபரப்பான காட்சிகள், கதையோடு வேகமாக பயணிக்கிறது கேமரா. அருண்ராஜ் பின்னணி இசை எமோஷலான காட்சிகளுக்கு இன்னும் உயிரோட்டத்தைத் தருகிறது. சதீஷ்குமார் படத்தொகுப்பும், சேகர் முருகனின் விஎப்எக்ஸ் நுட்பமும் படத்திற்கு பெரும் பலமாய் அமைந்துள்ளது.

வன்முறைக் காட்சிகளும், கெட்ட வார்த்தைகளும் படத்தின் மதிப்பைக் குறைத்துவிடுகிறது. தேவையான அளவில் வன்முறைக் காட்சிகளை காட்டியிருக்கலாம். அவற்றை ஓவராகக் காட்டியிருக்கக் கூடாது.

பைரி - இரையைத் தேடி…

 

பைரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பைரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓