பெண்குயின்,Penguin

பெண்குயின் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்
தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 19 ஜுன் 2020
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2/5

பெண்குயின் என தலைப்பைப் பார்த்ததும் ஒரு பெண் பெரும் மன தைரியத்துடன் போராடி ஏதோ ஒன்றை சாதிக்கும் கதையாகத்தான் இருக்கும். அதனால், பெண்களுக்கும், பெண்மைக்கும் ஒரு பெயர் வரும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

ஓடிடி தளத்தில் இதற்கு முன் நேரடியாக வெளியான பொன்மகள் வந்தாள் படமே பரவாயில்லை என நம்மை முடிவெடுக்க வைத்துவிட்டது இந்த பெண்குயின்.

மலையாளத்தில் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மம்தா மோகன்தாஸ், டொவினோ தாமஸ், ரெபா மோனிக்கா ஜான் நடித்து வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பாரன்சிக். அந்தப் படத்தின் கதைதான் இந்த பெண்குயின் படத்தின் கதையும் கூட. ஆனால், டொவினோ, ரெபா ஆகியோரது கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் இல்லை. ஒருவேளை இரண்டு இயக்குனர்களும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து எடுத்துவிட்டார்களோ ?.

படத்தோட டீசரைப் பார்க்கும் போது பெரிய எதிர்பார்ப்பு வரலை, ஆனால், டிரைலரைப் பார்க்கும் போது பரவாயில்லை, ஏதோ பெரிதாக சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், படத்தைப் பார்த்தபின் டிரைலர் மட்டுமே பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியது.

இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் எந்த ஒரு இடத்திலும் ஈர்ப்பை ஏற்படுத்தாது ஒரு படத்தைக் கொடுத்துள்ளார். படத்தைத் தயாரிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜை ஈர்த்ததில் மட்டும் சரியாகச் செய்துவிட்டார் போலும்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு ஆறு வருடங்களக்கு முன்பு காணாமல் போன அவருடைய முதல் ஆண் குழந்தையைப் பற்றிய கனவு அடிக்கடி வருகிறது. குழந்தை காணாமல் போனதால் ஏற்பட்ட சண்டையில் கீர்த்தியும், அவர் கணவரும் பிரிந்து விடுகிறார்கள். அப்புறம் எப்படி மீண்டும் தாய்மை அடைந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது இரண்டாவது கணவரால் வந்த தாய்மை. ஒரு சந்தர்ப்பத்தில் காணாமல் போன குழந்தை கிடைக்கிறது. ஆனால், அந்த சிறுவன் பேசாத அளவிற்கு ஏதோ ஒரு அதிர்ச்சியில் இருக்கிறான். இதனிடையே தான் வளர்க்கும் நாய் சைரஸ் மூலமாக கொலைகாரனை நெருங்குகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு த்ரில்லர் படத்திற்கு வேண்டிய சிறப்பம்சமே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்புதான். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லை. இடைவேளை வரை படம் ஏதோ போய்க் கொண்டிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு சிலரை சந்தேகப்பட வைக்கும் வழக்கமான டெம்ப்ளேட் திரைக்கதை. கடைசியில் சைக்கோதனமான எண்ணங்கள்தான் காரணம் என அதையும் வழக்கம் போலவே முடித்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் குழந்தை காணாமல் போன வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஒரே காவல் நிலையத்தில் ஆறு வருடங்களாகத் தொடர்ந்து எப்படி வேலை பார்க்கிறார் உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

நமக்கு ஒரே கேள்விதான் இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க சம்மதித்தார், அதே போல் கீர்த்தி சுரேஷ் எதற்கு நடிக்க சம்மதித்தார் ?.

மகாநடி என்ற ஒரு சிறந்த படத்தின் மூலம் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் இது போன்ற படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை குறைத்துக் கொள்ள வேண்டுமா ?. எப்போதும் சிரித்த முகத்துடன், இதழோரத்தில் ஒரு புன்னகையுடன் இருக்கும் கீர்த்தி சுரேஷைப் பார்த்துப் பழகிய நமக்கு இப்படி உம் என்றே இருக்கும் கீர்த்தியைப் பார்க்கவே முடியவில்லை. ஹிந்திப் படத்திற்காக உடலை வேறு இளைத்த சமயத்தில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. முதல் கணவருக்குப் பிறந்த குழந்தை காணவில்லை, இரண்டாவது கணவருடைய குழந்தை வயிற்றில், என இரண்டு திருமணம் செய்து கொண்ட பெண் கதாபாத்திரம் என்பதும் அந்த கதாபாத்திரம் மீது பரிதாபத்தை வரவழைக்கவில்லை. சில காட்சிகளில் கீர்த்தியைப் பார்ப்பதற்கே பாவமாக உள்ளது. மீண்டும் பழைய நிலைக்கே வாருங்கள் கீர்த்தி.

படத்தில் தெரிந்த முகம் என்று பார்த்தால் கீர்த்தி சுரேஷ் மட்டுமே. சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த லிங்கா, கீர்த்தியின் முதல் கணவராகவும், மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது கணவராகவும் நடித்திருக்கிறார்கள்.

சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த ஒருவர் தான் படத்தின் வில்லன். எத்தனை வருடங்கள் ஆனாலும் தன் நடிப்பால் குழந்தைகளைக் கவரும் நடிகர் சார்லி சாப்ளின். அந்த முகமூடி அணிந்த ஒருவர், குழந்தைகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்பவர் என அப்படி ஒரு விஷயத்தை எதற்கு யோசித்தார் இயக்குனர் ?.

த்ரில்லர் படத்தில் ஊட்டியின் அழகு எவ்வளவு அழகாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஊட்டியின் காட்டை, இருட்டை ஓரளவிற்கு மிரட்சியாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி. படத்தின் ஆரம்பத்தில் ஆறு வருடங்களுக்கு முன்பு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு வருடத்திற்கு முன்பு, இப்போது என குழப்பி அடித்திருக்க வேண்டாம். மொத்தமாக ஒரு பிளாஷ்பேக்கை போட்டு முடித்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசை என டைட்டில் கார்டில் வருகிறது. ஆனால், படத்தில் எந்த இடத்தில் இசை நம்மை மிரள வைத்தது என்பதை யோசித்துப் பார்த்தால் கூட ஞாபகம் வரவில்லை. த்ரில்லர் படத்தின் பெரிய பிளஸ் ஆக அதன் இசைதான் இருக்க வேண்டும்.

தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் பிடிக்கிறதோ இல்லையோ கடைசி வரை இருப்போம். ஆனால், ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம். கொஞ்ச நேரம் கழித்து பிடிக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ரிமோட்.

பெண்குயின் - பெண் மட்டுமே குயின் அல்ல...

 

பட குழுவினர்

பெண்குயின்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓