ஜூலி 2,Julie 2

ஜூலி 2 - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ராய் லட்சுமி, ஆதித்ய ஸ்ரீவத்சவா, ரவி கிஷன், ரதி அக்னிஹோத்ரி, பங்கஜ் திரிபாதி
இயக்கம் - தீபக் ஷிவ்தாசனி
இசை - விஜு ஷா, ரூ பேன்ட், அதிப் அலி, ஜாவேத் - மோஷின்

சினிமா என்பது ஒரு கனவுலகம். மற்ற துறைகளில் கடுமையாக உழைத்தால் நிச்சயம் முன்னேறி விடலாம். ஆனால், சினிமாத் துறையில் மட்டும் சரியான வாய்ப்பும், நேரமும் அமைய வேண்டும். வெறும் திறமை மட்டும் இங்கு வெற்றியைத் தந்துவிடாது.

வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பெற்ற வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் எவ்வளவோ 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டியிருக்கும். சமீப காலங்களில் 'கேஸ்டிங் கௌச்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, 'நடிப்பதற்காக படுக்கையைப் பகிர்ந்து கொள்வது' என்று சொல்லலாம்.

திரையுலகத்தில் பல நடிகைகளுக்கு அந்த கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம் என ஹிந்தியில் பல நடிகைகளே வெளிப்படையாகச் சொல்லி வரும் இந்த சமயத்தில் 'ஜுலி 2' படம் ஒரு நடிகையின் அந்தரங்க வாழ்க்கையை மிகவும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது.

அப்பா யார் என்றே தெரியாத ராய் லட்சுமி, 13 வயதிலேயே வளர்ப்பு அப்பாவால் கற்பழிக்கப்படுகிறார். அதன் பின் ராய் லட்சுமியை பணம் சம்பாதித்து வா என்று அவருடைய வளர்ப்பு அப்பா வீட்டை விட்டு விரட்டுகிறார். அவர்களது குடும்பத் தோழியான ரதி அக்னிஹோத்ரியிடம் அடைக்கலமாகிறார் ராய் லட்சுமி. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு படத்தில் நாயகியாக நடித்து முடிக்கிறார். அதன் பின் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் பல எதிர்பாராத சம்பவங்கள், காதல்கள், படுக்கையறை விவகாரங்கள் என படம் நகர்ந்து முடிவில் ஒரு த்ரில்லர் கதையாகவும் மாறுகிறது.

ராய் லட்சுமி, ஒரு நடிகையாக எவ்வளவு தாராளமாக நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். டிரைலரில் பார்த்ததைப் போல மிகவும் ஆபாசமான காட்சிகள் என்று அதிகமில்லை. ஆனால், இரண்டு, மூன்று முத்தக் காட்சிகள் இருக்கின்றன. கவர்ச்சி காட்டி நடிப்பதிலும் ஒரு எல்லையை வைத்து நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. முன்னணி நடிகையாக வளர அவர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், போராட்டங்கள் என பல இருந்தாலும் அவை நம்மை நெகிழ வைக்கும் காட்சிகளாக அமையாதது படத்தின் பெரிய குறை. சில காட்சிகள் அப்படியே 'ஜம்ப்' ஆகிப் போய்விடுகின்றன.

ராய் லட்சுமிக்கு அடுத்து ஏ.சி.பி-யாக நடித்திருக்கும் ஆதித்ய ஸ்ரீவத்சவா தான் படத்தில் அதிக நேரம் வருகிறார். காக்கிச் சட்டை அணியாமலேயே அவருடைய நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.

தமிழ்த் திரையுலகத்தில் 80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ரதி அக்னிஹோத்ரி, ராய் லட்சுமியின் 'கார்டியன்' ஆக நடித்திருக்கிறார். 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு, ஜெர்மனியின் செந்தேன் மலரே...' என்று இளமைத் துள்ளலுடன் பாடித் திரிந்தவரை, இப்படி முதுமையாகப் பார்ப்பது வருடங்கள் எப்படி ஓடுகிறது என்பதை நினைவூட்டுகிறது.

பிறந்த வீட்டிலேயே பிரச்சனை, முதல் பட இயக்குனருடன் காதல், அடுத்து தமிழ் நடிகருடன் காதல், கிரிக்கெட் வீரருடன் காதல், துபாய் தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிப்பது என ஒரு நடிகையின் பல காலகட்டங்களைத் தொட்டுச் செல்கிறது கதை. ஆனால், எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்பது அழுத்தமாகப் பதியவில்லை, அவை போகிற போக்கில் கடந்து போகின்றன.

இம்மாதிரியான படங்களுக்கு வசனத்தின் தாக்கம் மிக முக்கியம். ஒரு வேளை ஒரிஜனல் ஹிந்திப் படத்தில் வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தமிழில் எழுதியிருப்பவர் உதட்டசைவு ஓரளவிற்கு சரியாக இருக்க வேண்டும் என்று கவனித்துவிட்டு, வசனங்களின் தாக்கத்தை மறந்து போயிருப்பார் போலிருக்கிறது.

ஒரு பரபரப்பு இல்லாமல் காட்சிகள் மெதுவாக நகர்வதும், படத்தின் நீளமும் படத்திற்கு மைனஸ் பாயின்டாக அமைந்துவிட்டன.

ஜுலி 2 - ஜாலியாக ரசிக்கலாம் என்று சொல்ல முடியவில்லை.

 

பட குழுவினர்

ஜூலி 2

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓