Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பிரகாமியம்

பிரகாமியம்,Prakamiyam
 • பிரகாமியம்
புதியவர் பிரதாப் இயக்கியிருக்கும் படம் தான் பிரகாமியம்.
11 பிப், 2017 - 14:15 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிரகாமியம்

ஸ்டீல் டோ புரடக்ஷன்ஸ் கே.சுமித்ரா தயாரித்து வழங்க, ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் டி.மதுராஜ் வெளியிட, புதியவர் பிரதாப் கிறுக்கலும், செதுக்கலும் (அதாங்க, எழுத்து, இயக்கம்) செய்து கதாநாயகராக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் "பிரகாமியம் ".

ஜோதிடமா? ஹிப்னாடிசமா..? ஆருடமா? உளவியலா....? என டாக்குமெண்ட்ரி ஸ்டைலில், சற்றே நீண்ட நெடிய விவாதம் செய்திருக்கும் இப்படத்தின் வாயிலாக சுபா, பார்வதி என இரு அழகிய புதுமுக கதாநாயகியர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது மட்டுமே பெரும் ஆறுதல்!

கதைப்படி, அகோர முகமுடைய மாற்றுத்திறனாளி உளவியலாளர் ஒருவரை சந்தித்து, அவரது ஹிப்னாடிசம் வாயிலாக தனக்கு சாதகமாக ஒரு விஷயத்தை செய்து தர சொல்கிறார் ஜோதிடர் ஒருவர். அதற்கு மறுக்கிறார் உளவியலாளர். இதில் வெகுண்டெழும் ஜோதிடர் உடனே உளவியலாளரின் கையைப் பிடித்து அவரது கைரேகைகளைப் பார்த்து விட்டு, அகோர முகமுடைய மாற்றுத்திறனாளியான உனக்கு திருமணமே நடக்காது. அப்படியே மணம் நடந்தாலும், உன் மனைவிக்கு உடல் நலம் இருக்காது. குழந்தை பாக்கியமே இருக்காது, அப்படியே குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் அது நிலைக்காது... என்று ஏகப்பட்ட சாபங்களை விட்டு இது எல்லாம்... என் சாபமல்ல ... உன் கைரேகை சொல்லும் பலாபலன்... என்று எச்சரித்து செல்கிறார். அதில் உஷாராகும் அந்த மாற்றுத்திறனாளி உளவியலாளர், ஒரு அபலை பெண்ணை மணம் முடித்து, தன் கருவை சுமக்கும் அவர் குழந்தை பிரசவிக்கும் அளவிற்கு உடல் நலம் இல்லாதவர் என்பதை அறிந்து, மருத்துவமனையில்., பக்கத்து பெட்டில் பிரசவ வலியில் துடிக்கும் பெண்மணியின் கருவை தன் மனைவியின் வயிற்றுக்கு மாற்றி, தன் மனைவி வயிற்று கருவை அப்பெண்மணியின் வயிற்றுக்கு மாற்றி தன் ஹிப்னாடிசசெப்படி வித்தைகள் மூலம் தனக்கென ஒரு மகனை பெற்றெடுக்கிறார்.

அம்மகன் அம்மா பாசம் முதல் அடுத்தப் பெண்ணின் பாசம் வரை எதையும் அறிந்து கொள்ளக் கூடாது.. அது, அவனது உயிருக்கும் உறவான தனக்கும் ஆபத்து... என பொத்தி, பொத்தி வளர்க்கிறார். ஆனாலும், அப்பாவின் ஹிப்னாடிச வித்தைகளை அறிந்தும் அறியாமலும் அவரது அடக்கு முறையில் வளரும் மகன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் போதை வஸ்துகளால் தன் கடந்த காலத்திற்குப் போய் தன்னை பிரசவித்த தாயைத் தேடுகிறான். தங்கை மட்டும் உயிரோடு இருப்பதை உணர்கிறான். தங்கையின் தோழியோடு காதலிலும் விழுகிறான். கூடவே தனது கடவுளாக தன்னைக் காட்டிக் கொள்ளும் தந்தையையும் எதிர்க்கிறான். அவன், தந்தை எதிர்ப்பிலும், தன் காதலிலும் ஜெயித்தானா? அல்லது அவனது ஹிப்னாடிச தந்தை ஜெயித்தாரா...? என்பது தான் பிரகாமியம் படத்தின் கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம். அதை அகோர முகங்கள், கோர காட்சிகள்... என அடுத்தடுத்து படம் பிடித்து அயர்ச்சி ஏற்படுத்தி, ரசிகன் முகம் சுளிக்கும் வகையில் படம் பிடித்திருப்பது படுத்தல்.

கொடூர முகம் , கோணங்கி தனங்கள் நிரம்பிய ஹிப்னாடிச வித்தைக் கார அப்பாவாகவும், வெளியுலகம் தெரியாத கூட்டை விட்டு வந்த குஞ்சு போன்ற மகனாகவும் இப்பட இயக்குனர் கம் புதுமுகம் பிரதாப், அப்பா கேரக்டரில் முகமே காட்டாமலும், மகன் கேரக்டரில் கொஞ்சம் அதிகபடியாக நடிப்பையும் காட்டி பிய்த்து பெடலெடுக்க முயற்சித்து., நிறைய தோல்வியும் கொஞ்சம் வெற்றியும் பெற்றிக்கிறார்.

புதுமுகம் சுபா, கிராமத்து கதாநாயகியாக, நாயகரின் தங்கையின் தோழியாக., செம கச்சிதம். "உன் அண்ணன் என்கிற ஒரு குவாலிபிகேஷனுக்காக உன் அண்ணன் யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும் நான், அவனை கல்யாணம் கட்டிப்பேன்..." என பன்ச் எல்லாம் பேசி நகரத்தோர கிராமத்துப் பெண்ணாக பளிச்சிட்டிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் நாயகரை ஒன் சைடாக காதலிக்கும் காதலியாக மற்றொரு நாயகி பார்வதியும், கல்லூரி நண்பராக வரும் ரகு எனும் ரகுமானும் கூட நச் சென்று நடித்திருக்கின்றனர். ஆனால், கல்லூரி காட்சிகள் டபுள், ட்ரிபிள் மீனிங்கில் படமாக்கப்பட்டிருப்பது நாரசம்.

குறித்த பட்ஜெட்டுக்கு கிடைத்தலொகேஷன்களில் சிவனே... என்று செயல்பட்டிருக்கிறது முத்துப்பாண்டியின் கேமிரா. அது செவ்வனே செயல்பட்டிருக்கிறதா? என்றால் அது தான் இல்லை பாவம். ராஜ்ஜின் இசையும், கார்த்திக் மனோகராவின் படத்தொகுப்பும் கூட படத்தில் பங்கெடுத்திருக்கிறதா? என்பது கேள்விக்குறியே!

இப்படத்தின் டைட்டில் கார்டிலும், பப்ளிசிட்டியிலும் தான் எழுத்து இயக்கம் செய்திருப்பதை இயக்குனர். பிரதாப், கிறுக்கலும், செதுக்கலும்.. என குறிப்பிட்டு தன் பெயரை மிளிர செய்திருக்கிறார். அவர் கூற்றுப்படியே, நல்ல கருவையும் கதையையும்.... 2ம் உலகப்போரில் ஹிட்லர் மனித எந்திரங்கள் போல் வீரர்களை உருமாற்றி போர் புரிந்ததையும், ஸ்டாலினின் தன்னார்வ படை வீரர்கள் தங்களது ஆழ்மனது சக்தி எனும் ஹிப்னாடிசம் உதவியுடன் வெற்றி பெற்றதையும் எல்லாம் இப்படத்தினுடைய கருவோடு சம்பந்தப்படுத்தி கதையாக்கி அழகாக கிறுக்கியவர், அதை திரைக்கதையாகவும், இயக்கமாகவும் சரியாக செதுக்காதது... பெரும் பலவீனம்!

மொத்தத்தில் , "பிரகாமியம் படத்தை - அதன் கருக்காகவும், கதைக்காகவும் பிரமாதம் என்று சொல்லத்தான் ஆசை. ஆனால், திரைக்கதை, இயக்கத்தில் சாதாரணமாகக் கூட பிரகாமியம் இல்லாதது... பெரும்பயம் கூடவே வருத்தம்!"வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in