"நூற்றாண்டில்" அ.மருதகாசி
பயோகிராபி

பயோடேட்டா
- இயற்பெயர்
- அய்யம்பெருமாள் மருதகாசி
- சினிமா பெயர்
- அ.மருதகாசி
- பிறப்பு
- 13 - பிப்ரவரி - 1920
- இறப்பு
- 29 - நவம்பர் - 1989

திரைக்கவித்திலகம்


1950களில் மிக வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர் அ மருதகாசி. ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இவர், மேலக்குடிகாடு என்ற சிற்றூரில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது கைவண்ணத்தில் உருவான விவசாயம் சார்ந்த திரைப்பாடல்கள் தமிழகத்தின் கடைக்கோடி சாமானியனும் இன்றளவும் முணுமுணுக்கக் கூடியது என்றால் அது மிகையன்று. "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி", "ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே", "மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா" என்று வேளாண் பெருமக்களின் பெருமையை கூறும் இந்தப் பட்டியல் நீளும். இன்டர்மீடியட் வரை படித்த இவர், ஆரம்பக் காலங்களில் நாடக நடிகராகவும் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும,; நாடகப்பாடல்கள் எழுதியும் பணிபுரிந்திருக்கின்றார்.
திருச்சி லோகனாதன் தான் அமைத்திருந்த மெட்டுகளுக்கு, இவர் எழுதியிருந்த பாடல்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காட்ட, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து அழைப்பு வந்தது அ.மருதகாசிக்கு. "பெண்ணெனும் மாயா பேயாம் பொய் மாதராய்" என்று ஆரம்பமாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "மாயாவதி" படப்பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல். இப்படம் வெளியான ஆண்டு 1949. இதனைத் தொடர்ந்து "தூக்கு தூக்கி", "பாசவலை", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "மங்கையர் திலகம்", "தாய்க்குப் பின் தாரம்", சதாராம், "அமரதீபம்", "மல்லிகா", "நீலமலைத்திருடன்", "சாரங்கதாரா", "உத்தமபுத்திரன்", "பாகப்பிரிவினை", "பாவை விளக்கு", "மன்னாதி மன்னன்", என 1950களில் ஏராளமான படங்களுக்கு எண்ணற்ற வெற்றிப் பாடல்களை தந்து பிஸியான பாடலாசிரியராக இருந்து வந்தார்.
60களில் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் பார்வை கவிஞர் கண்ணதாசனின் மீது விழ, இவருக்கு சற்று வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டம் அடைந்தார். 1967 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு மீண்டு வந்தபின் தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடிக்கவிருந்த "மறுபிறவி" என்ற திரைப்படத்திற்கு இவரை பாடல் எழுத தேவர் கேட்டுக் கொண்டார். ஒரு பாடல் எழுதிய நிலையில் படத்தை தொடர முடியாமல் போயிற்று. அதன் பின் தேவர் தயாரிதத "தேர்த்திருவிழா", "விவசாயி" வெள்ளிக்கிழமை விரதம் என்று தொடர்ந்து தேவர் தயாரித்து வந்த படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்று வந்தன. ஏறக்குறைய 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் விரும்பும் வண்ணம் காதல், பாசம், சோகம், தத்துவம், வீரம் என்று அத்தனை பரிமாணங்களிலும் காலத்தால் அழிக்க முடியா காவியப் பாடல்களைத் தந்த இந்த கவிஞரை அவரது நூற்றாண்டில் நினைவு கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.