அவரது இயற்பெயர் டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன். 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். சொந்த ஊர் தேனி மாவட்டம், பண்ணைபுரம்.
மனைவி பெயர் ஜீவா ( சொந்த சகோதரியின் மகள்). பெற்றோர் பெயர் டேனியல் ராமசாமி - சின்ன தாயம்மாள். அவரது சகோதரர்கள் பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்). குழந்தைகள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி.
முதல் படம் அன்னக்கிளி. தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தால் அறிமுகம் செய்யப்பட்டார்.
இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். இளையராஜாவின் தந்தைக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது.
கிட்டத்தட்ட அவர் ஒரு குட்டி ராஜா என்கிறார் இளையராஜாவின் முதல் பேட்டியை 1975-ல் பிரசுரித்த எம்ஜி வல்லபன்.
அப்பாவை விட அம்மா தான் குடும்பத்திற்கு உழைத்திருந்தார் என்பதை பின்னாளில் இளையராஜாவே எழுதி, இசையமைத்து பாடிய "பொன்னப்போல ஆத்தா.' போன்ற பாடல்களில் வெளிப்பட்டது.
கொஞ்சம் சுரத்து குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் புத்துயிர் பெற்றன.
தான் பிறந்த பண்ணைப்புரத்தில் மாலை நேரங்களில் அதன் சாலைகளில் மனம் போன படி பாடிக்கொண்டே நடப்பேன், அது எனக்கு இன்பமான அனுபவம் என்று கூறியுள்ளார் இளையராஜா.
கம்யூனிஸ்ட் கட்சி பிராச்சார பாடகராக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் உருவாகியிருந்தார்.
1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் இளையராஜாவை வேண்டுமானால் அழைத்து கொண்டு போ இடையிடையே ஒரு பாடலை அவன் பாடினால் உனக்கு கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார் அம்மா சின்னத்தாய்.
என் அன்னையில் திருவாக்கில் தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் அவ்வளவு பெரிய கூட்டம் எனக்கும், என் பாட்டுக்கும் என்றே இளையராஜாவே கூறியிருக்கிறார்.
ஆர்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தொடர்ந்தவர் இளையராஜா.
"வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்.' என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இளையராஜா.
எந்த ஊருக்கு சென்றாலும் ஒரு கச்சேரிக்கு ரூ.40, அநேகமாக அதைக்கூட பெற முடியாத நிலை என்ற நிலை 1958-68 என்ற காலக்கட்டத்தில் தொடர்ந்திருக்கிறது.
பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்களுடன்(பாஸ்கர், கங்கை அமரன்) சென்னைக்கு ரயில் ஏறினார்.
அவர்களின் நண்பர்களாகிய சின்னச்சாமியின்(பாரதிராஜா) இருப்பிடத்திற்கு வந்தார்கள்.
தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்த சாய் லாட்ஜ் படிகள் தான் இளையராஜாவிற்கு ஏணியாக அமைந்தன.
வருமான இல்லாத இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களை கற்று தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.
பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தை பார்த்து அதை கற்றுக்கொள், இதை கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்று கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.
வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் அங்கே பயிற்சி பெறலானார்.
கிராமிய பாடல்களை வாய்விட்டு பாடி மகிழ்ந்து தன்னுடைய இசை ரசனைகளை வளர்த்து கொண்ட இளையராஜாவிற்கு ஒரு மேற்கத்திய இசை பரிமாணத்தை தன்ராஜ் அளித்து கொண்டிருந்தார்.