மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.