அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் |
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, 'கலர்ஸ் டிவி'யில் ஒளிபரப்பாகும் 'அம்மன், எங்க வீட்டு மீனாட்சி, இதயத்தை திருடாதே, அபி டெய்லர்' ஆகிய மெகா தொடர் நாயகியர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
சமூக வலைதள பயன்பாடும் அதனால் ஏற்படும் கெடுதல்களும் அதிகரித்து வருவது குறித்து?
நடிகை நிலானி: சமூக வலைதளத்தில் இன்று அதிகளவு இளம் வயதினரே இருக்கின்றனர். 'ஆன்லைன்' வகுப்பு வாயிலாக இது மேலும் அதிகரித்து உள்ளது. கொரோனாவால் ஓராண்டு பாடமே போனாலும் பரவாயில்லை என விட்டிருக்க வேண்டும். ஆன்லைன் பாடத்திட்டத்தை அமல்படுத்தி இருக்கக் கூடாது. என் மகனால் ஏதாவது ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால், அவனை நானே கொன்று விடுவேன்.வீட்டு வேலைகளை செய்ய ஆண்களுக்கும் சொல்லித்தர வேண்டும். பெண்ணை வளர்ப்பது போலவே ஆணையும் வளர்க்க வேண்டும். மாற்றத்தை வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
சமூக வலைதளத்தில் எல்லை மீறும் பெண்கள் குறித்து?
நடிகை நிலானி: அந்த மாதிரி பெண்கள் நிச்சயம் கண்டிக்கத் தக்கவரே. பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் உரிமையை, தவறாக பயன்படுத்தினால் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்றோரை மன ரீதியாக சரிப்படுத்த வேண்டியதும் அவசியம். பொறுப்பில்லாத ஆண்களால் தான் பல பெண்கள் எல்லை மீறுகின்றனர்.
குடும்ப பொறுப்பை கவனிப்பதில் அதிக பங்கு யாருக்கு?
நடிகை ஷ்ரத்தா சிவதாஸ்: இரு பாலரும் ஏற்றத்தாழ்வு இன்றி, சமமாக இருக்க வேண்டும். பெண்ணுரிமை என்பது சம உரிமையே.
பெண்களின் திருமண வாழ்க்கை குறித்து உங்கள் கருத்து?
நடிகை தர்ஷினி கவுடா: பெண் பிள்ளை என்றாலே குறிப்பிட்ட வயது வந்து விட்டால், அவர்களுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என நினைக்கும் பெற்றோர் மாற வேண்டும்.
நடிகை ஜெயஸ்ரீ: பெண்களுக்கு திருமணமான பின், அவரது தனிப்பட்ட விருப்பம், சாதனை ஏதாவது இருந்து அதை தெரிவித்தால், திருமணமாகி விட்டது அதெல்லாம் எதற்கு; குடும்பத்தை கவனியுங்கள் என்பர். திருமணமானால் பல பெண்கள் வேலையை விட்டு விடுகின்றனர். பெண்களால் வீட்டிலும், அலுவலகத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். பெண் என்பவள் பன்முக திறமை கொண்டவள்.
நடிகை ஹீமா பிந்து: யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஆசை, கனவு உள்ளது. இவ்வுலகில் குடும்பத்தை நேசிப்போரும் உண்டு. தனிப்பட்ட முறையில் சாதிக்க நினைப்போரும் உண்டு. தனியே வாழும் பெண்களை, இந்த சமூகத்தில் பலர் வாழ விட மறுக்கின்றனர். இவ்விஷயத்தில் பெண்கள் தெளிவாக இருந்து தைரியமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஒருத்தரை மன்னிக்கலாம் என்றால் யாரை மன்னிப்பீர்; தண்டிக்கலாம் என்றால் யாரை தண்டிப்பீர்?
நடிகை நிலானி: இரண்டுமே என் தந்தையை தான். எனக்கு விபரம் தெரிந்து, நாங்கள் பாதிக்கப்பட காரணமாக இருந்த நபர் என் தந்தை. சின்ன வயதிலேயே என் அம்மாவை பிரிந்து விட்டார். அதனால் நான் அவரை தண்டிப்பேன். மன்னிக்கணும் என்றால் என் தந்தையை தான். என்னிடம் அவர் மன்னிப்பு கேட்டால்மன்னிப்பேன்.
பெண்களுக்கான சிறந்த ஆயுதம் எது?
நடிகை ஹீமா பிந்து: எந்த ஒரு இக்கட்டான நிலையிலும், சரியான முடிவு எடுக்கும் அந்த மனம் தான் பெண்களின் சிறந்த ஆயுதம்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கணக்கெடுப்பின்படி, வட மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து உங்கள் கருத்து?
நடிகை நிலானி: வட மாநிலங்களில் பெண்களுக்கான கல்வி, சம உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. இதனாலேயே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அதிகரிக்கிறது என்பது என் கருத்து. பெண்கள் சப்பாத்தி போடத் தான் லாயக்கு என நினைக்கின்றனர். அங்கு 30 சதவீதம் பெண்களால் தான் கேள்வி கேட்க முடிகிறது.
'மீ டூ' பெண்களின் குரலை ஒலிக்கச் செய்தது. அதுபோல் ஒரு விஷயம் வர வேண்டும் என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்?
நடிகை ஜெயஸ்ரீ: ஆண், பெண் சமத்துவத்திற்கான குரல் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
பெண்கள் அணியும் உடை தான் வன்முறைக்கு துாண்டுகோலாக இருக்கிறது என்பது சிலரின் கருத்தாக உள்ளது. இதற்கு உங்கள் பதில்?
நடிகை பவித்ரா கவுடா: வன்முறைக்கு பெண்களின் உடை மட்டுமே காரணமல்ல. அந்த உடையை ஆணின் அம்மாவோ, தங்கையோ அணியும் போது தவறான எண்ணம் தோன்றுவதில்லையே. அதுபோல் மற்ற பெண்களையும் பார்க்கலாமே!
பெண்களுக்கு எதிரான குற்றம் குறைய செய்ய வேண்டியது என்ன?
நடிகை தர்ஷினி கவுடா: பெண்ணை சீரழித்து விட்டு சிறை செல்வோருக்கு, எல்லா வசதியும் கிடைக்கிறது. நேரத்திற்கு சாப்பாடு, துாக்கம் கிடைக்கிறது. குற்றம் இழைத்தவர்களை சவுதி அரேபியா பாணியில் தண்டிக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை ஆணாதிக்கம் அதிகம்; சட்டத்தின் கடுமையும் குறைவு. இதை மாற்ற வேண்டும். பெண்களை போகப்பொருளாக பார்ப்பதை மாற்ற வேண்டும். ஆணுக்காகவே பெண்கள் படைக்கப்பட்டதாக நினைக்கின்றனர். இந்த நினைப்பை ஒவ்வொருவரின் மனதில் இருந்தும் மாற்ற வேண்டும்.
இளவயது திருமணத்திற்கு காரணம் அறியாமையா, வறுமையா, சமூகமா?
நடிகை நிலானி: கண்டிப்பாக வறுமை தான் காரணம். இன்று பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. மேல் வர்க்கம் மேலேயும், கீழ் வர்க்கம் கீழேயும் தான் செல்கின்றனர். இது மாற வேண்டும்.
ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
நடிகை நிலானி: விபசாரி, விதவை, சக்களத்தி, சின்ன வீடு போன்ற வார்த்தைக்கு எதிர்பதம் உண்டா? இதை பெண்களுக்கு கொடுத்தது யார்? இந்த மனநிலை ஆண்களிடம் மாற வேண்டும். மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் தான், இன்னொரு பெண்ணுக்கு 'சின்ன வீடு' என, பெயர் வைக்கின்றனர்.ஆனால், அந்த ஆணுக்கு என்ன பெயர் வைக்கிறீர்கள். பெண்கள் மனதளவில் தைரியமானவர்கள் என்றாலும், உடலளவில் பலம் குறைந்தவர்களே. பலம் குறைந்தவர்களை ஜெயிப்பது ஆண்களுக்கு ஆண்மை ஆகாது. எல்லா ஆண்களையும் தவறாக கூற மாட்டேன்.
- நமது நிருபர் -