Advertisement

AVM saravanan

Advertisement

1980களுக்கு பின்னும் வெற்றிப்பாதையில் ஏ.வி.எம்.,

இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். விதையாக இருந்து ஏ.வி.எம்., எனும் விருட்சமாய் வளர்ந்தது இவரால் தான். 1972க்குப் பிறகு தமிழ் திரைப்படங்களை தயாரிக்காமல் இருந்த ஏ.வி.எம் நிறுவனம், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவிற்குப் பின் அவரது புதல்வர்களான எம்.குமரன், எம்.பாலசுப்ரமணியம், எம்.சரவணன் தங்களது தந்தையின் சீறிய பணியை செவ்வனே எடுத்து சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு, தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி, தங்களது தந்தையின் கனவை நிறைவேற்றினர். 1980க்கு பின் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த, கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற சில முக்கியமான படங்களை இப்போது பார்க்கலம்.

 

முரட்டுக்காளை
ஏவிஎம்முடன் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த திரைப்படம். 70களின் பிற்பகுதியில் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் ஒரு ஹீரோவாக இருக்கிறார் என்பதை அறிந்த ஏவி மெய்யப்பன் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என விருப்பப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட அதன் பின் அவரது மகன்கள் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினர். படமும் வெற்றி பெற்று ரஜினியை ஒரு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தியது. ஜெய்சங்கர் முதன் முறையாக வில்லனாக நடித்த திரைப்படம்.

 

சிவப்பு மல்லி
தெலுங்கில் வெளிவந்த ‘எர்ர மல்லேலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக். இராம நாராயணன் ஆரம்ப காலங்களில் இயக்கிய சமூகப் படங்களில் இந்தப் படமும் ஒன்று. விஜயகாந்த், சந்திரசேகர், சாந்தி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்த படம். ‘எரிமலை எப்படி பொறுக்கும்…, ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்…’ ஆகிய பாடல்கள் அப்போது ரேடியோக்களில் அடிக்கடி ஒலிக்கும். விஜயகாந்தின் ஆரம்ப காலப் படங்களில் முக்கியமான படம் இது.

 

போக்கிரி ராஜா
தெலுங்கில் வெளிவந்த ‘சூட்டலன்னாரு ஜாக்ரதா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இப்படம். இரு வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீதேவி, ராதிகா. ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா முதன் முதலில் நடித்த படம் இது. இப்படத்தில் நடித்து முடித்த பின்தான் நடிகர் முத்துராமன் மறைந்து போனார். வெற்றிகரமாக ஓடிய கமர்ஷியல் படம்.

 

சகலகலா வல்லவன்
தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை 1989ம் ஆண்டு வரை வைத்திருந்த படம். கமல்ஹாசன் கிராமத்து இளைஞனாக நடித்த பக்கா கமர்ஷியல் படம். இன்று வரையிலும் புத்தாண்டு தினத்தன்று இப்படப் பாடலான ‘இளமை இதோ இதோ’ பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்த படம்.

 

முந்தானை முடிச்சு
80களில் பெண்களை அதிகம் கவர்ந்த இயக்குனர், நடிகர் பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளிவந்த படம். நடிகை ஊர்வசி இப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். 25 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய சில்வர் ஜுப்ளி திரைப்படம். பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தூங்காதே தம்பி தூங்காதே
கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த கமர்ஷியல் படம். படத்தில் ஒரு கமல் பெண்பித்தனாக இருப்பதால் அந்தக் காலத்தில் இந்தப் படத்தை பெண்கள் அதிகம் பார்க்கவில்லை. இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்ற படம். அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக ‘நானாக நானில்லை தாயே…’ அம்மா பாடல்களில் சிறந்த ஒரு பாடலாக அமைந்தது.

 

புதுமைப் பெண்
80களில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் அடிக்கடி வந்தன. அப்படி வந்த படங்களில் இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் வெளியீட்டில் தோல்வியைத் தழுவினாலும், தமிழக அரசால் வரி விலக்கு கொடுக்கப்பட்டு பின் வெளியாகி வெற்றியைப் பெற்றது. ‘ஒரு தென்றல் புயலாகி வருதே…’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தெலுங்குத் திரையுலகில் முக்கிய நாயகனகா தடம் பதித்த டாக்டர் ராஜசேகர் இப்படத்தில்தான் அறிமுகமானார்.

 

நல்லவனுக்கு நல்லவன்
‘தர்மாத்முடு’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் இப்படம். ரஜினிகாந்த் நடித்த குடும்பப் பாங்கான படங்களில் முக்கியமான ஒரு படம். இளம் ரஜினி, வயதான ரஜினி என சென்டிமென்ட் நடிப்பில் பெண்களைக் கண்ணீர் விட வைத்தார் ரஜினிகாந்த். ரஜினியில் பெரிய வெற்றிப் படங்களில் இந்தப் படமும் ஒன்று.

 

மிஸ்டர்பாரத்
‘த்ரிஷுல்’ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் இப்படம். ரஜினிகாந்த், சத்யராஜ் இரண்டு பேரும் இப்படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். சென்டிமென்ட், கமர்ஷியல் என இரண்டு டிராக்குகளிலும் படம் நகர்ந்து ரஜினிக்கும் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

 

AVM saravanan

 

சம்சாரம் அது மின்சாரம்
இன்று வரை இந்தப் படத்தை அந்தக் கால ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். விசு என்றாலே இந்தப் படம்தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். 16 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு படத்தை வாங்கியவர்களுக்கு பலத்த லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த படம். முழுமையான என்டர்டெயின்மென்ட் படம் என்ற தேசிய விருதை வாங்கிய ஒரு படம்.

 

சங்கர் குரு
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்த ஏவிஎம் வளர்ந்து வரும் நடிகர்களையும் வைத்து படங்களைத் தயாரித்தது. அதன்படி அப்போது வளர்ந்து வரும் ஹீரோவான அர்ஜுன் நாயகனாக நடித்த படம் இது. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஒரு படம். கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம்.

 

மனிதன்
ரஜினிகாந்த் நடிப்பில் ஏவிஎம் தயாரித்த மற்றுமொரு வெற்றிப் படம். கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்துடன் போட்டி போட்டு இப்படம் வெற்றி பெற்று 25 வாரங்களுக்கு ஓடியது. வழக்கம் போல ஒரு பக்கா கமர்ஷியல் படத்தைக் கொடுத்தது எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணி.

 

பாட்டி சொல்லைத் தட்டாதே
குழந்தைகளைக் கவரும் விதத்திலும் படங்களைக் கொடுக்க வேண்டும் என தயாரிக்கப்பட்ட ஒரு படம். இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காரை பல ஊர்களுக்கு அனுப்பி படத்திற்காக விளம்பரப்படுத்தினார்கள். மிகவும் ஜாலியான படமாக இருந்ததால் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து படத்தை மாபெரும் வெற்றி பெற வைத்தார்கள்.

 

ராஜா சின்ன ரோஜா
தமிழ் சினிமாவில் முதன் முதலில் அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம். ஒரு பாடல் முழுவதிலும் அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்று படம் பார்த்த ரசிகர்களை வியக்க வைத்தது. எவிஎம், ரஜினி, எஸ்பிஎம் கூட்டணிக்கு மீண்டும் ஒரு வெள்ளிவிழாப் படம் இது.

 

மாநகரகாவல்
ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த இந்த 150வது படம், பல ஊர்களில் 150 நாட்களைக் கடந்து ஓடிய ஒரு வெற்றிப் படம் இது. பின்னர் இப்படம் ‘சிட்டி போலீஸ்’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. போலீஸ் கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

 

எஜமான்
ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருடனேயே ஜோடியாக நடித்த படம். பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரஜினிகாந்த், மீனா ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ரஜினி நடித்த சிறந்த குடும்பப் பாங்கான படங்களில் இந்தப் படமும் ஒன்று என்ற பெயரைப் பெற்ற படம் இது.

 

சேதுபதி ஐபிஎஸ்
விஜயகாந்த் நடித்த போலீஸ் கதாபாத்திரப் படங்களில் மற்றுமொரு கமர்ஷியல் ரீதியிலான வெற்றிப் படம். தீவிரவாதத்தை மையப்படுத்தி அப்போதே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருந்தார்கள்.

 

மின்சார கனவு
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம். ஹிந்தி நடிகை காஜல் அகர்வாலை இப்படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். ஏஆர் ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்டாகி அந்தக்காலத்து இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஒரு படமாக அமைந்தது.

 

ஜெமினி
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம். ‘சேது’ படம் மூலம் பேசப்பட்ட விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்திய படம் ‘ஜெமினி’. இந்தப் படம் இந்த அளவிற்கு ஒரு பெரிய வசூலைக் குவிக்கும் என யாருமே நம்பவில்லை என்ற ஒரு பேச்சு அப்போது இருந்தது.

 

பேரழகன்
மலையாளத்தில் வெளிவந்த ‘குஞ்சிகூனன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது. சூர்யா இரண்டு வேடங்களிலும், ஜோதிகா இரண்டு வேடங்களிலும் நடித்த படம். வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும் சூர்யாவின் அந்த ‘கூனன்’ நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

 

திருப்பதி
ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் அஜித் நடித்த முதல் படம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். இருப்பினும் பெரிய வெற்றியைப் பெறாமல் போனது.

 

AVM saravanan

 

சிவாஜி
ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் முதன்முதலில் இயக்கிய படம். கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிப் படம். வெளிநாட்டு வியாபாரத்திலும், வசூலிலும் சாதனை படைத்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

 

அயன்
ஏவிஎம் நிறுவனத் தயாரிப்பில் இதற்கு முன் சூர்யா நடித்து வெளிவந்த ‘பேரழகன்’ படம் பெரிய அளவில் வசூலைத் தரவில்லை. ஆனால், இந்தப் படம் சூர்யாவுக்கு பெரிய கமர்ஷியல் படம் என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. சாதாரண கமர்ஷியல் படமாக இல்லாமல் தரமான ஒரு கமர்ஷியல் படம் என்ற பெயரைப் பெற்ற ஒரு படம்.

 

வேட்டைக்காரன்
ஏவிஎம் நிறுவனத்தில் விஜய் முதன் முதலில் நடித்த படம். அந்த சமயத்தில் அடுத்தடுத்து மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய்க்கு இந்தப் படத்தின் வெற்றி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக முன்னணி ஹீரோக்களுடன் ஏவிஎம் படங்களைத் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

 

ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் தயாரிப்பு நிறுவனம், பின் அவரது புதல்வர்களாலும் நிர்வகிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஏராளமான படங்களை தயாரித்து, தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் இப்போது சற்று ஓய்வெடுப்பதாகவே ரசிகர்கள் உணர்கின்றனர்.

முதல் பக்கம் »

Advertisement