வரலாறு
Advertisement
ஏவிஎம்.,ன் வேர் மெய்யப்ப செட்டியார்
இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் இலக்கியத்தை உள்ளடக்கியது தான் தமிழ் சினிமா. அதன் மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து ஏராளமான படங்களை இந்தியாவின் பல மொழிகளில் தயாரித்து பெரும் வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
தமிழ் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படுபவர் இவர். (மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன், எல்.வி.பிரசாத்). தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்றதோடு மட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை தனது "பராசக்தி" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய திரைமேதை ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
1932 ஆம் ஆண்டு "சரஸ்வதி ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தனது நண்பரோடு இணைந்து புராணக் கதைகளைக் கொண்ட ஒலிப்பதிவுகளை விற்பதோடு தயாரிக்கவும் செய்தார். பின்னர் பேசும் படங்களின் வருகையைத் தொடர்ந்து "சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்" என்ற கம்பெனியை தொடங்கினார்.
1935 ஆம் ஆண்டு தனது முதல் படைப்பாக "அல்லி அர்ஜுனா" என்ற திரைப்படத்தை தயாரித்தார். பின்னர் சொந்தமாக தங்களுக்கென ஒரு ஸ்டூடியோ ஒன்றை சென்னையில் ஆரம்பிக்க தனது பங்குதாரர்களோடு தீர்மானித்து, 1940ல் உருவானதே "பிரகதி ஸ்டூடியோ". நந்தகுமார், "போலி பாஞ்சாலி", "வாயாடி", முதல் தெலுங்கு தயாரிப்பான "பூ கைலாஸ்", "சபாபதி", முதல் கன்னட தயாரிப்பான வசந்த சேனா "என் மனைவி", "ஸ்ரீவள்ளி" என அனைத்துப் படங்களும் பிரகதி ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்டவை. "ஸ்ரீவள்ளி" திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பின் பங்குதாரர்கள் "பிரகதி ஸ்டூடியோவை" விற்க முற்பட, இனி யாருடனும் கூட்டு சேராமல் நாமே இதனை திறம்பட செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
காரைக்குடி நகரத்திற்கு வெளியே, தேவகோட்டை ரஸ்தாவில் அமைந்திருந்த ஒரு நாடக கொட்டகையையும், அதனை சுற்றியுள்ள காலி இடத்தையும் மாத வாடகைக்கு பிடித்து தனது படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் என்ற அந்த ஆலமரத்தின் விருட்சத்தை அங்கே தான் முதன் முதலில் விதைத்தார். அங்கே உருவான முதல் திரைப்படம் 1947ல் வெளிவந்த "நாம் இருவர்". இதனைத் தொடர்ந்து 1948ல் வேதாள உலகம் என்ற திரைப்படத்தையும் இங்கேயே தயாரித்து வெளியிட்டார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சினிமா வட்டாரத்தில் பெரும் மதிப்பையும், நற்பெயரையும் ஈட்டித்தந்தது.
மீண்டும் தனது படப்பிடிப்பு தளமான ஏ.வி.எம் ஸ்டூடியோவை சென்னைக்கே கொண்டு வர முற்பட்டு சென்னையில் இடம் தேடலானார் ஏ வி மெய்யப்ப செட்டியார். அதன் விளைவுதான் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் ஏ.வி.எம் என்ற லோகோவை தாங்கிய பூமியின் முகப்பு வரவேற்கும் தற்போதைய ஏ.வி.எம் ஸ்டூடியோ.
தொடர்ந்து "வாழ்க்கை", "ஓர் இரவு", "பராசக்தி", "அந்த நாள்", "பெண்", "களத்தூர் கண்ணம்மா" என ஏ.வி.எம்.மின் வெற்றி பயணம் தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் கோலோச்சியது. "பராசக்தி" திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், "வாழ்க்கை" திரைப்படத்தின் மூலம் நடிகை வைஜெயந்தி மாலாவையும், "களத்தூர் கண்ணம்மா" படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகப் படுத்தியது போல் வெள்ளித்திரையில் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஐந்து முன்னாள் முதல்வர்கள் இவரோடு பணியாற்றி பயணித்திருக்கின்றனர் என்பது வெள்ளித் திரைப்பயணத்தில் மகுடம் சூட்டியது போல் ஆகும். பின்னாளில் எம்.ஜி.ஆரை நாயகனாக வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் ப.நீலகண்டனை தனது "ஓர் இரவு" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவரும் இவரே.
167 திரைப்படங்கள் வரை தயாரித்திருந்த ஏ வி மெய்யப்ப செட்டியார் அவற்றில் சிறவற்றை இயக்கியும் இருக்கின்றார். 1972க்குப் பிறகு தமிழ் திரைப்படங்களை தயாரிக்காமல் இருந்த ஏ.வி.எம் நிறுவனம், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவிற்குப் பின் அவரது புதல்வர்களான எம்.பாலசுப்ரமணியம், எம்.சரவணன் தங்களது தந்தையின் சீறிய பணியை செவ்வனே எடுத்து சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டனர்.
தமிழ் கடவுள் முருகனை இஷ்ட தெய்வமாக வணங்கி வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தனது புதல்வர்கள் அனைவருக்கும் பழனியப்பன், முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன் என்று முருகனின் திருநாமங்களையே பெயர்களாக சூட்டியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "முரட்டுக்காளை". ரஜினிகாந்த் ஏ.வி.எம்மிற்காக நடித்த முதல் படமும் இதுவே. மேலும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நடிக்க வைத்து படம் எடுக்க விருப்பப்பட்டதும் உண்டு. தந்தையின் விருப்பத்தின் படியே எம்.சரவணன் தன் சகோதரர்களுடன் இணைந்து தயாரித்து வெற்றியும் கண்டனர்.
ஏ.வி.எம்மிற்காக இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முதல் படமும் இதுவே. 1982 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ்.பி.முத்துராமன் கூட்டணியோடு ஏ.வி.எம் தயாரித்த திரைப்படம் "சகலகலா வல்லவன்". இத்திரைப்படமும் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.
கதை, நடிகர்கள் தேர்வு, இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை மற்றும் குறித்த நேரத்தில் படத்தை எடுத்து வெளியிடுவது என அனைத்து விஷயங்களிலும் தங்களது தந்தையாரைப் போலவே திட்டமிடல் இருந்ததால் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து ஏ.வி.எம் என்ற அந்த பிரமாண்ட கனவுத் தொழிற்சாலைக்கு மகுடம் சூட்டினர்.
"போக்கிரி ராஜா", "பாயும் புலி", தூங்காதே தம்பி தூங்காதே, "நல்லவனுக்கு நல்லவன்", "உயர்ந்த உள்ளம்", "மிஸ்டர் பாரத்", "பேர் சொல்லும் பிள்ளை", "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா", "எஜமான்", "சிவாஜி" என்று ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருவரையும் வைத்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்ததோடு இடையிடையே கே பாக்கியராஜுடன் "முந்தானை முடிச்சு", இயக்குநர் விசுவுடன் "சம்சாரம் அது மின்சாரம்", ஆர்.சுந்தர்ராஜன், மோகன் கூட்டணியில் மெல்லத் திறந்தது கதவு என்றும், மேலும் இன்றைய இளைய தலைமுறை நாயகர்களான விஜய், அஜீத், சூர்யா ஆகியோரையும் தங்களது தயாரிப்பில் நடிக்க வைத்து "வேட்டைக்காரன்", "திருப்பதி", "அயன்" போன்ற பிரமாண்ட படங்களை தந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒரே தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் என்றால் அது மிகையல்ல.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் தயாரிப்பு நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 300க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்து, தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் சற்று ஓய்வெடுப்பதாகவே ரசிகர்கள் உணர்கின்றனர் என்பதே உண்மை.
Advertisement