தினமலர் விமர்சனம் » சகுனி
தினமலர் விமர்சனம்
ரயில்வே சுரங்கபாதைக்காக அநியாயமாக அரசாங்கத்தால் அபகரிக்கப்படும் தனது பூர்வீக வீட்டை மீட்பதற்காக சென்னை வரும் காரைக்குடி இளைஞன், அந்த அரசாங்கத்தை, ஆளும் கட்சியையே ஆட்டி வைத்து எதிர் கட்சியாக்கும் சர்வ வல்லமை பொருந்தியவனாக மாறுவதுதான்... "சகுனி" படத்தின் மொத்த கதையும்!
காரைக்குடியில் அரண்மனை போன்ற பூர்வீக வீட்டில் அடுப்பெரியாத நேரமே இல்லை... எனும் அளவிற்கு சதா சர்வகாலமும் அன்னதானம் போட்டே அழிவு நிலைக்கு வந்துவிட்ட குடும்பம் ஹீரோ கார்த்தியினுடையது! மிச்சமிருக்கும் அரண்மனை மாதிரியான பெரிய வீட்டையும், அரசாங்கம் ரயில்வே சுரங்கபாதை அமைக்க வேண்டும்... என அநியாயமாக அபகரிக்க பார்க்க, அதை காக்க தன் தாத்தாவின் அட்வைஸ்படி தனியொரு ஆளாக சென்னை வரும் கார்த்தி, அடாவடி முதல்வர் பிரகாஷ்ராஜூக்கு எதிராக தன் ஆட்டோ நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டும், பிரகாஷ்ராஜின் அரசியல் எதிரி கோட்டா சீனிவாஸராவுடன் சேர்ந்து கொண்டும் செய்யும் சகுனி ஆட்டங்களும், அரசியல் மாற்றங்களும் தான் "சகுனி" படத்தின் லாஜிக் பார்க்க முடியாத மேஜிக்கான கதை, களம் எல்லாம்! இந்த சகுனி ஆட்டத்தோடு அத்தை மகள் பிரனீதாவுடனான காதல் சதுராட்டம், சந்தானத்துடனான காமெடி ஆட்டம் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் கலந்துகட்டி கமர்ஷியல் கலர்புல்லாக சகுனியை திரைக்கு எடுத்து வர முயற்சித்து, அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள்.என். ஆனால் மீதி தோல்விதான் சகுனி படத்தின் பின்பாதி என்பது ஏமாற்றம்!
கார்த்தி, லவ், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட், பாலிட்டிக்ஸ் என சகலத்திலும் சரி விகிதத்தில் புகுந்து புறப்பட்டு தன் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார் பலே, பலே!
கதாநாயகி ப்ரனீதாவும் முந்தைய படங்களை காட்டிலும் பிரமாதம் என்றாலும் இரண்டு பாடல்கள், ஒன்றிரண்டு சீன்களே வருவதால் மனதில் ஒட்ட மறுக்கிறார். இதனால் ப்ரனீதா மட்டுமல்ல கார்த்தி - ப்ரனீதா காதலும் கூட எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எக்கி, தொக்கி நிற்பது படத்தின் பெரிய பலவீனம்!
சந்தானம் ரஜினியாகவும், கார்த்தி கமலாகவும் பண்ணும் அலப்பறைகள்... முன்பாதி படத்தை போவதே தெரியாமல் போக வைத்திருக்கிறது. அதே "பெப்", பின்பாதியில் இல்லாமல் ஒரே பில்-டப்பாக இருப்பது மைனஸ்!
முதல் அமைச்சர் பதவிக்காக முறைபடி முதல்வராக வேண்டியவரை தீர்த்து கட்டுவதில் தொடங்கி, தன் ஆசை நாயகி கிரணையும் போட்டு தள்ள முயல்வது வரை பிரகாஷ்ராஜின் சாணக்யதனம், சில இடங்களில் சகுனி கார்த்தியையும் பீட் செய்து விடுகிறது பேஷ், பேஷ்!!
கார்த்தி, பிரனீதா, எதிர்கட்சி தலைவர் கோட்ட சீனிவாஸராவ், இட்லிசுட்டு வட்டிக்கு விட்டு, சகுனி கார்த்தி தயவால் சென்னை மேயராகும் ராதிகா, ப்ரனீதாவின் அம்மாவும், கார்த்தியின் காரியக்கார அத்தையுமான ரோஜா, பிரகாஷின் ஆசை நாயகி கிரண், பிரகாஷின் கைத்தடி மற்றும் கார்த்தியின் விசுவாசி சித்ராலட்சுமணன், தாத்தா வி.எஸ்.ராகவன் என்று எக்கச்சக்க நட்சத்திர பட்டாளம்! ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு பளிச் என்று மின்னியிருக்கின்றனர்!
அதேமாதிரி ஜி.வி.பிரகாஷின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ஏனோ தெரியவில்லை, இயக்குநர் சங்கர் தயாள்.என்.னின் எழுத்து-இயக்கத்தில் "சகுனி" முன்பாதி அளவிற்கு பின்பாதி சரியாக இல்லை!
மொத்தத்தில் சரியாநி...? சாரி! "சகுனி!!
----------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
தர்மகாரியங்களுக்குப் பேர்போன குடும்பத்தின் வாரிசு காரைக்குடி கமலக்கண்ணன் (கார்த்தி). இவர்களின் ஒரே சொத்தான பாரம்பரிய வீட்டை ரயில்வே சுரங்கப் பாதைக்காக இடிக்க அதிகாரிகள் ஸ்கெட்ச் போடுகிறார்கள். வீட்டைக் காப்பாற்ற கார்த்தி, கவுன்சிலரிலிருந்து முதல்வர் வரைக்கும் பார்த்து உதவி கேட்கிறார். அவமானம்தான் பதிலாகக் கிடைக்கிறது. அரசியல்வாதிகளை அரசியல் ரூட்டிலேயே போய் மடக்கி கார்த்தி காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் கதை.
ஆரம்பத்தில் சாது, அப்புரம் அதிரடி சூது என்கிற கேரக்டரை கார்த்தி ரசித்த, ருசித்துச் செய்திருக்கிறார். கார்த்திக்கு சும்மா அறிமுகமாகி, அவராலேயே அவஸ்தைப்படுகிற ஆட்டோ டிரைவராக சந்தானம் அசத்துகிறார்.
கார்த்திக்கும் ப்ரணிதாவுக்குமான ரொமான்ஸ் ஏரியா “எங்களுக்கு இதுலல்லாம் உடன்பாடே இல்லை சார்’ என்று சொல்வதுபோலவே இருக்கிறது.
உள்ளூர் சாமியாராக இருந்து கார்த்தியின் ஐடியாவால் கார்ப்பரேட் சாமியாராகும் நாசர் கேரக்டர் பலே! வட்டித்தொழிலில் தெனாவெட்டு, அரசியலில் கொஞ்சம் அறியாமை என இரு முகம் காட்டும் ரமணியக்காவாக ராதிகாவை ரசிக்கலாம். கார்த்தியின் திடீர் அத்தையாக வரும் ரோஜாவின் வில்லத்தனத்தில் லாஜிக் இல்லை.
பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக வந்து அலப்பரை பண்ணுவதில் இது நூறாவது படமாக இருக்கலாம். “நட்புக்காக’ மட்டுமே ஒரே ஒரு சீனில் அனுஷ்கா இன்ஸ்பெக்டராக வந்துபோகிறார்.
முன்பு வந்து ஹிட்டான மசாலா படங்களின் பாடல்கள் போலவே இருக்க வேண்டும் என்ற கவனத்திலேயே ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
“வழக்கமான சிப்ஸை பாக்கெட்ல போட்டு, கேஸ் அடைச்சு, பளபளன்னு கொடுத்தா நம்மாளுங்க போட்டி போட்டு வாங்குறாங்கல்ல?’ போன்ற வசனங்கள் இன்றைய சமூகத்தைப் போட்டு வாங்குகின்றன. சேகுவேரா டிஷர்ட் போட்டவர்கள், தமிழ் அடையாள அரசியல்வாதிகள் போன்றவர்களையெல்லாம் போகிற போக்கில் கிண்டலடித்திருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே சம கால அரசியலை உரசிப் பார்த்திருப்பதற்காக இயக்குநர் ஷங்கர் தயாளைத் தட்டிக்கொடுக்கலாம். ஆனால், காமெடியில் உள்ள பலம் அடிப்படை கான்செப்ட்டில் இல்லாமல் போனதில்தான் சகுனி சறுக்கிவிட்டான்.
சகுனி - “தூள்’ பார்ட் 2
------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
கார்த்தி படமென்றாலே கலகலப்பு கேரண்டி! சகுனி ஆரம்பத்தில் இருந்து கடைசியில் வணக்கம் போடும்வரை கிண்டல், நையாண்டி, நக்கல் என்று அசத்துகிறார் கார்த்தி. ஒன் லைன் காமெடியன் சந்தானம், படத்தில் பிரேக் விழும் போதெல்லாம் ஆஜராகி, மஜா கிளப்புகிறார். ஹீரோவுக்கு இணையாக சந்தானம் வருவதும், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தத்துவங்கள் உதிர்ப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக போர் அடிக்கிறது. கொஞ்சம் ரூட்டை மாத்துங்க சந்தானம்!
சொந்த ஊரில் இருக்கும் பெரிய பங்களாவைக் காப்பாற்ற சென்னை வரும் கார்த்தி, எப்படி அதை அரசியல் தகிடு தத்தங்கள் செய்து சாதிக்கிறார் என்பதுதான் கதை. ரயில்வே துறை பாலம் கட்ட பங்களாவை எடுத்துக் கொள்ளப் போகிறது என்றால், அதை தடுக்க கோர்ட்டுக்குப் போகலாம். எதற்கு மாநில அரசின் மந்திரி, முதல்வர் வீடுகளில் தவம் கிடக்கவேண்டுமோ? படம் பார்க்க வருபவர்கள் ச்சும்மா சிரித்துவிட்டுப் போக்தானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதற்கு லாஜிக் புடலங்காய் எல்லாம் என்று இயக்குனர் நினைத்திருப்பார் போல! ரொம்ப பிரகாசமான எதிர்காலம் இருக்கு டைரக்டர் சார்!
இவ்வளவு எளிமையாக ஒரு கவுன்சிலர், ஒரு மேயர், ஒரு முதல்வர் ஜெயித்துவிட முடியும் என்று சினிமாவில் பார்க்கும்போது, நமக்கே பதவி ஆசை பிடித்துக் கொள்கிறது. ஏதோ அம்புலிமாமா கதை படிப்பது போல், ஒரே ஃபேண்டசி.
இதில் ரொம்ப மெனக்கெட்டு இருப்பது பிரகாஷ்ராஜ்தான். இவ்வளவு கூத்துகள் நடுவே அவருடைய வீராவேசமும் கொதிப்பும் ரியலிஸ்டிக் காமெடி! கடைசியில் ஜெயிலுக்குப் போகப் போகிறார். எதற்கு இப்படி வீணாக உடம்பை வருத்திக் கொள்கிறாரோ என்று பாவமாக இருக்கிறது. நாசர்தான் கூல் மாஸ்டர்! லோக்கல் சாமியாராக வந்து பின்னர் அகில உலக ரேஞ்சுக்கு உயர்கிறார். எளிமையான நடிப்பில், கலக்குகிறார். ராதிகாவுக்கு அதிக வாய்ப்பில்லை. ரோஜாவும் ஏன் வருகிறார் என்றே புரியவில்லை.
ஹீரோயின் ப்ரணித்தா, கேன்வாஸ் ஓவியம், பாடல்களுக்குச் சமத்தாக ஆடிவிட்டு, இறுதிக் காட்சியில் கார்த்தி தோளில் சாய்ந்து காதல் வசனம் பேசுவதோடு, சேப்டர் ஓவர். பாடல்களும் கேமராவும் நடனமும் கச்சிதம். ஜி.வி.பிரகாஷ், ஹிட்டான பாடல்களில் இருந்து உருவி உருவியே இசை கோர்த்திருப்பார் போல. தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் மறந்துவிடும் அதிசயத்தை என்னவென்று சொல்வது!
சத்யராஜ் நடித்த அரசியல் + காமெடி படங்களை மனத்தில் வைத்து, டைரக்டர் சகுனியைச் செதுக்கியிருக்கிறார். நேர்த்தியாக உருவாக இன்னும் நிறைய மெனக்கெட்டு இருக்க வேண்டும்.
ஒரே திருப்தி, கார்த்தி மட்டும்தான். மொத்த படத்தையும் தம்முடைய தோள்களில் தூக்கிக்கொண்டு ஓடுகிறார். அவருடைய துள்ளல் சிரிப்பும், ஃப்ரெஷ் முகமும், நடனமும், பாடிலேங்குவேஜும் ரசிகர்களைக் கட்டிப்போடுவது உறுதி. டைலாக் டெலிவரி எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி இருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து வலுவற்ற கதைகளையே தோளில் சுமந்து ஓடினால் கார்த்திக்கு முதுகு வலிக்கிறதோ இல்லையோ, ரசிகர்களுக்கு வலிக்கும்.
சகுனி - பைசா வசூல்!
துளசி