தினமலர் விமர்சனம்
திலீப் எனும் ஐடி இளைஞர், பார்த்து சலித்த ஆங்கிலப் படங்களையே தமிழ் படங்களாகவும் பார்த்து வெறுத்ததால்., கூட தன் ஐடி சகாக்கள் சிலரையும் கூட்டிக் கொண்டு வந்து திடீரென்று தமிழ் சினிமாவில் குதித்து நண்பர்களுடன் தானும் ஒரு நாயகராக நடித்து பழைய பாணியிலேயே கதை பண்ணி பம்மாத்து செய்பவர்களை பளாரென்று... அறையும்படி இயக்கி,தயாரித்திருக்கும் திரைப்படம் தான் குபீர் !
குபீர் என்ற பெயரை பார்த்ததும் ஏதோ சிரிப்பு படமாக இருக்கும் என ரிலாக்ஸாக சீட்டில் சாய்ந்திருந்த நம்மை., இரண்டாவது ரீலிலேயே..(டிஜிட்டல் ஃபிலிம் தாங்க., சும்மா ஒரு பேச்சுக்கு...) எழுந்து நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது கதையமைப்பும் காட்சியமைப்புகளும். அதற்காக இயக்குநர், நடிகர் குபீர் திலீப்புக்கு ஒரு பளீர்.. சிரிப்பை பரிசாக்கி விட்டு கதைக்குள் போனோமென்றால்....குபீர் படத்துல கதைன்னு ஒண்ணும் பெருசா கிடையாதுங்க...(சமீபத்திய இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை,திரைக்கதை,வசனம், இயக்கம் படம் அளவிற்கு கூடு...) கதைன்னு ஒண்ணும் பெருசா குபீர் படத்துல கிடையாதுங்க. ஆனா, ஒரு வீக் எண்ட் பார்ட்டியில ஒரு இராத்திரி முழுக்க ஒரு வீட்டுக்குள்ள குடியும் கும்மாளமுமா ஐடி நண்பர்கள் ஐந்தாறு பேர் நடத்தும் வெட்டி அரட்டை கச்சேரி தான் குபீர் படத்தின் பகீர், பளீர், பளார்.., உண்மை கர, களம், கதை மொத்தமும் !
யாருங்க சொன்னது? வீக் எண்ட் பார்ட்டியில் எல்லாம் வெட்டி அரட்டை கச்சேரி தான் நடக்குது? என்று..? லோக்கல் சினிமாவில் தொடங்கி இன்டர்நேஷனல் சினிமா வரை...நம்மூர் பாலிடிக்ஸில் தொடங்கி நாஜிக்கள் படையெடுப்பு ஹிட்லர் தரப்பு...வரை...இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் தொடங்கி இரண்டாம் உலகப்போர் வரை...அந்த ஒரு இராத்திரியில் திலீப், தமிழ், ப்ரதாப், வொய்ட், ரவி, பிரபு உள்ளிட்ட குபீர் டீம் நண்பர்கள், நடிகர்கள் பேசாத விஷயங்களே கிடையாது எனலாம் !
தெரிந்த விஷயங்கள், தெரியாத தகவல்கள்...என்பார்களே...அதுமாதிரி இந்தி எதிர்ப்பு எப்போ யார் மூலம் தொடங்கியது என்பதில் தொடங்கி, இந்துஸ்தான் எத்தனையாக பிரிக்கப்பட்டு இங்கிலாந்தால் எப்படி சுதந்திரம் வழங்கப்பட்டது என்பது வரை சகலத்தையும் போகிறபோக்கில் புட்டு புட்டு வைத்திருக்கும் விதம் சூப்பர்ப் !
இயக்குநர் திலீப், தமிழ், ப்ரதாப், வொய்ட், ரவி, பிரபு, செல்லப்பிராணி போவர் உள்ளிட்டோரின் நடிப்பும் துடிப்பும் சூப்பர்ப் ! ஆனாலும் ஆரம்பம் முதல் அடிக்கடி காட்டப்படும் அந்த கேஸ்-ரிலீஸ் சீன்கள், இயற்கை உபாதை காட்சிகள் உள்ளிட்ட ஒரு சில அறுவெறுப்பு காட்சிகளை அறுத்தெரிந்தால் குபீர் இன்னும் பகீர் என பற்றிக் கொள்ளும்...பளீர்என பிரகாசிக்கும் போவர் செல்லநாய்க்கும் பொம்மை நாய்க்கும் ஜோடிபோட விடும் காட்சி, க்ளைமாக்ஸூம் படத்தில் எல்லோரும் பச்சை தண்ணியை குடித்து விட்டு தான் குடித்தது மாதிரி நடித்து உள்ளனர். குடி குடியை கெடுக்கும் அதனால் யாரும் குடிக்காதீங்க...என சிலைடு போடும் சின்சியாரிட்டி எல்லாம் இயக்குநர் புதியவர் திலீப்பை நம்பிக்கை நட்சத்திரமாய் இயக்குநராய் காட்டியுள்ளன என்றால் மிகையல்ல !!
சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, விஷால்-ஆதித்யாவின் இசை, கிரண்கேயனின் படத்தொகுப்பு, கார்த்திகேயனின் பாடல்கள் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள், புதியவர் திலீப்பின் எழுத்து, இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன !
பாட்டு இல்லா படம், ஃபைட்டு இல்லா படம், கதை இல்லா படமுன்னு சும்மா மொக்க படத்தை எல்லாம் பப்ளிசிட்டி மூலம் பலே படமாக்க முயலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு சவுடால் விடும் படியாக சதையில்லா., ஓ...சாரி., கதை நாயகி எனும் அளவில் கூட கதாநாயகியே இல்லா படமாக குபீர் படத்தை நடிகர்கள் இயக்கி தயாரித்து அதை ரசிக்கம் படியாக வெளிக்கொண்டு வந்திருக்கும் ஐடி இளைஞர்களுக்கு வைக்கலாம் ஒரு ராயல் சல்பூட் !
"மொத்தத்தில் குபீர் பழைய தமிழ் சினிமாக்காரர்களுக்கு பகீர் ! புதுமை விரும்பும் ரசிகர்களுக்கு பளீர் !! ஆகவே குபீர் - கிக்"பீர்" !!!