புதுமுக இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் காதல் 2 கல்யாணம்.
காதல் என்றால் இருவர் சம்மதம் போதும், அதுவே கல்யாணம் என்றால் குடும்பத்தை சர்ந்த அனைவரது சம்மதம் வேண்டும் என்பதை மைய கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. அத்துடன் மனித வாழ்க்கையில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பிள்ளைகளின் வாழ்க்கையில் பெற்றோர்களின் பங்கையும் வெளிப்படுத்தும் விதமாகவும், தனித்து வாழும் குடும்பங்களில் வாழ்க்கை சூழ்நிலை மற்றும் கூட்டு குடும்ப வாழ்க்கை சூழ்நிலையை பற்றியும் இந்தபடம் எடுத்து காட்டுகின்றது.
படத்தில் ரேடியோ ஜாக்கியாக புதுமுகம் சத்யா அறிமுகமாகிறார். இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி ஆவார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா நடிக்கிறார். இவர்களுடன் அனுஜா ஐயர், பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி, மெளலி, அழகம்பெருமாள், ஜான் விஜய், ஜெயஸ்ரீ, கஸ்தூரி, நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய, மிர்ச்சி மூவிஸ் தயாரிக்க, மிலிந்த், திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்.
படத்தில் சிறப்பு அம்சமாக முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று படமாக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முருகனின் ஆறுபடை வீடுகளும் படமாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.