ஸ்டண்ட் இயக்குனராக இருந்த தவசிராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் மூலக்கடை முருகன். படத்தின் பெயர் காமெடியாக தெரிந்தாலும் உண்மையிலேயே மூலக்கடை முருகன் படம் அதிரடியான ஆக்ஷன் படமாம். இரண்டு தாதா கோஷ்டிகள் ஈகோவில் யார் பெரியவன் என மோதிக்கொண்டு வீழ்வது கதை என்பதால் வெட்டுக் குத்து ரத்தம் அதிகமாகவே இருக்கப் போகிறது. இத்துடன் இடையிடையே காதல் மலரும் காட்சிகளும் இருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலுள்ள ஒரு பகுதியான மூலக்கடையில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்தான் மூலக்கடை முருகனாக தயாராகிறது. ஊர் பெயர் தெரியாத 5 ஆதரவற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்து எப்படி வாழவேண்டுமென்று தெரியாமல் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் துணிச்சலை கண்ட அதே ஊரை சேர்ந்த ஒரு தாதா, தன்னால் முடியாத வேலையை இவர்களிடம் கொடுக்க, களம் இறங்குகிறார்கள். பின் பாதியில் கொடுத்த வேலையை எப்படி சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செய்கிறார்கள் என்பதே கதை.
இதில் நாயகனாக புதுமுகம் மதனும், நாயகியாக அனீஷிபாவும் நடிக்கிறார்கள். நாயகியின் அப்பாவாக, வில்லனாக நடிகர் டாக்டர் எஸ்.சீனிவாசனும், மற்ற வில்லன்களாக ரவிமரியா, காதல் தண்டபாணி நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சங்கர் குரு ராஜா, சீதா, புவனா, தேவிகா, மலேசியா ஜெனிபர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். பாடல்களை வாலி, சினேகன், யுகபாரதி, நெல்லை பாரதி, பாலபாரதி, கபிலன் ஆகியோர் எழுதியுள்ளனர்.