ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கிய விஜய் ஆதித்யா, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் படம் ஈசல். ஒரே ஒரு நாள் மட்டும் உயிர் வாழும் உயிரினம் ஈசல். அதையே தலைப்பாக தன் படத்திற்கு வைத்திருக்கும் விஜய் ஆதித்யா, படத்தைப் பற்றி கூறுகையில் "ஆறு மணி நேரத்தில் நிகழும் சம்பவங்களைக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பத்து நண்பர்கள் ஒரே நேரத்தில் இறந்து போகிறார்கள். இறந்த சில நாட்களில் பத்து பேரும் உயிர்த்தெழுகிறார்கள். மந்திரமோ, மாயமோ இல்லாமல் மீண்டும் உயிருடன் வரும் அந்த பத்து பேரும் செய்யும் சாகசங்கள்தான் ஈசல் படத்தின் கதை" என்றார் பத்து நண்பர்களும் ஏன் இறக்கிறார்கள்? இறந்துபோன பத்து பேரும் எப்படி மறுபடியும் உயிருடன் வருகிறார்கள்? அப்படி வரும் அவர்கள் செய்யும் விஷயம் என்ன? இந்த கேள்விகளுக்கு இயக்குநர் விஜய் ஆதித்யா, சுவரஸ்யமான காட்சிகளுடன், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பதிலை தருகிறார்.
முதல் படத்திலேயே ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த விஜய் ஆதித்யா, 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பாடல் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் பாடலாக அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, கொங்கணி உட்பட மொத்தம் 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்பாடலை மாஸ் வெங்கட், ராய் ஆகியோர் எழுதியுள்ளனர். "வந்தேமாதரம்" பாடலைப்போன்று தேசப்பற்றுமிக்க பாடலான இப்பாடலை 24 மொழிகளில் உள்ள பாடகர்கள், பாடகிகளை வைத்து சமீபத்தில் பதிவு செய்தனர். அதுமட்டும் இன்றி இந்த 24 மொழிகளுக்கான காட்சிகளை அந்தந்த ஊரிலேயே படமாக்கியுள்ளார்கள் என்பது ஹைலைட்.