மலையாளத்தின் பிரபல இரட்டை இயக்குநர்கள் பிரமோத் - பப்பன் ஆகியோர் தமிழில் இயக்குனர்களாக அறிமுகமாகும் படம் நில் கவனி என்னை காதலி. நாயகனாக அன்பு பாலா நடிக்கிறார். நாயகியாக நமீதா நடிக்கிறார். இவர்கள் தவிர கலாபவன் மணி, பவன், ஆசிஷ்வித்யார்த்தி, பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படம் முதலில் மலையாளத்தில் உருவாக இருந்தது. பிறகு, நமீதாவின் முக்கியத்துவம் கருதி தமிழிலேயே படம் உருவாகி வருகிறது.
திருப்பூரில் குடும்பத்துடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாயகியை ஒரு போலீஸ் அதிகாரி கட்டாயத் திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கு அவள் மறுக்கவே, நாயகியின் தந்தையை சுட்டுக் கொல்கிறார் போலீஸ் அதிகாரி. இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரியை புத்திசாலித் தனமாகத் திட்டமிட்டு, பழிவாங்கும் நாயகியைப் பற்றியதே கதை. இதில் நமீதா ஆக்ஷன் நாயகியாக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். கேரளத்தில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
படத்திற்கு கண்மணி ராஜா வசனம் எழுதியருக்கிறார். திரைக்கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார். அபிஷேக் இசையமைக்க, பாடல்களை ஏக்நாத் எழுதியுள்ளார்.