பருத்தி வீரனில் ரீ-எண்ட்ரி ஆன சரவணன் பிஞ்சு கேரக்டருடன் (மென்மையான கேரக்டருடன்) நடிக்கும் படம் பிஞ்சு மனசு. கல்லூரியில் ப்யூன் வேலை பார்க்கும் சரவணனை, அதே கல்லூரியில் வேலை பார்க்கும் அமைச்சரின் மகளும் பேராசிரியையுமான தர்ஷாவுக்கு பிடித்து விடுகிறது. அன்புடன் பேசிக் கொள்கிறார்கள். அன்பு காதலாகி, கனிந்து கசிந்துருகி கல்யாணத்தில் போய் முடிகிறது. வசதியான வாழ்க்கை வாழ்ந்த தர்ஷா, ப்யூனுடன் குடும்பம் நடத்த படும் பாடும், அதன் பின்னர் குடும்பத்தில் ஏற்படும் சுக துக்கங்களும், கோப தாபங்களும்தான் பிஞ்சு மனசின் மொத்த கதையும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஜெய்ராம்.
படத்தின் நாயகி தர்ஷா சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் நன்றாக தமிழ் பேசுகிறார். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர் சினிமா ஆர்வத்தின் காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கியிருக்கிறார். அசின், நயன்தாரா போல நிறைய ரசிகர்களை பெற்று நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாம். படத்தில் சரவணன் - தர்ஷா தம்பதிகளின் குழந்தைகயாக மாஸ்டர் வருண் நடிக்கிறார். ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி வளர்க்கக்கூடாது? என்பதை இயக்குனர் ஜெய்ராம் இப்படத்தின் மையக்கருவாக வைத்து படமாக்கி வருகிறாராம். கணேஷ் - ஆர்த்தியின் கூட்டணியில் காமெடி ட்ராக்கும் இருக்கிறதாம். ஸ்ரீ இளங்கோவன் பிலிம்ஸ் சார்பில் எம்.இளங்கோவன் தயாரிக்கும் இப்படம் பெண்களை கவரும் என்று நம்பிக்கை கூறுகிறார் இயக்குனர் ஜெய்ராம்.