ரஜினி – கமல் தந்த அதிர்ச்சி
Advertisement
ரஜினி, கமல் என்ற இந்த இருபெரும் திரைக்கலைஞர்களின் திரைவாழ்க்கையில் 1979 ஆம் ஆண்டு மிகப் பெரிய மாற்றத்தைத் தந்ததென்றே சொல்ல வேண்டும். இந்த மாற்றத்திற்கு பஞ்சு அருணாசலமும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் வழி வகுத்தது. ரஜினி அப்போதே தனக்கான ஒரு தனிப்பாதையை உருவாக்கி பயணப்பட துவங்கினார். பத்திரிக்கையாளர்களை அழைத்து நாங்கள் இருவரும் இனி சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்ற தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் கமல். அப்போது ரஜினியும் அங்கு ஆஜராயிருந்தார். தமிழ்நாடு பரபரப்பானது.
பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களிடையே இது ஒரு சர்ச்சைப் பொருளாகவும்;, விவாதப் பொருளாகவும் மாறியிருந்தது. இனி ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க மாட்டர்களாமே அவ்வளவு தான் ரஜினியின் சினிமா வாழ்க்கை என்றார்கள் பலர். கமலோடு சேர்ந்து நடித்து வந்ததால் தான் அவர் படங்களும் வெள்ளி விழா கண்டன. இனி ரஜினியால் எவ்வாறு தனித்து நடித்து வெற்றி காண முடியும் என்ற பேச்சும் அடிபட்டது.
இதே 1979 ஆம் ஆண்டு பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, கமல் இருவரும் தனித்தனியாக நடிக்க ஒப்பந்தமானார்கள். "ஆறிலிருந்து அறுபதுவரை", "கல்யாண ராமன்" என்று இரண்டு படங்களை ஒரே சமயத்தில் தயாரித்திருந்தார் பஞ்சு அருணாசலம். ஏ வி எம் ஸ்டூடியோவில் அருகருகே இந்த இருவரின் படங்களின் ஷூட்டிங் நடைபெற்றது. தொழில் ரீதியாக இந்த இருபெரும் கலைஞர்கள் பிரிந்தார்களே தவிர, அவர்களுடைய நட்பில் ஒரு சிறு விரிசல் கூட ஏற்படாமல் இன்றுவரை தொடர்வது அனைவரும் அறிந்த ஒன்று.
Advertisement