
பொய் புகார்களால் ஏற்படும் வலி; ஜெயசூர்யா வேதனை
செப் 01, 2024
Advertisement
மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன என்று சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் தாங்கள் யாரால் எப்படி பாதிக்கப்பட்டோம் என்பது குறித்தும் வெளிப்படையான குற்றச்சாட்டாகவும் காவல்துறையில் புகாராகவும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஜெயசூர்யா இந்த நிகழ்வுகள் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஒரு மாத காலமாகவே நான் எனது பர்சனல் வேலைகளுக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறேன். இப்படி என் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது உண்மையிலேயே என்னை மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குகளை நான் சட்ட ரீதியாக சந்திக்க இருக்கிறேன். எனது சட்ட உதவிக்குழு தற்போது இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாகவே ஒருவரை களங்கப்படுத்தும் விதமாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை வீசுவது என்பது யாருக்கும் மிகவும் எளிது. அதேசமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் சந்திக்கும் வலி மற்றும் வேதனைக்கு சற்றும் குறையாதது தான் இதுபோன்று பொய் புகார்கள் சுமத்தப்படும்போது எனக்கு ஏற்பட்டுள்ள வலியும் வேதனையும். பொய் என்பது எப்போதுமே உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் நிச்சயமாக உண்மை தான் வெல்லும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!