
பிளாஷ்பேக்: கண்ணாம்பாவிற்கு பிறகு வசனத்தால் புகழ்பெற்ற சுஜாதா
ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு விலகி ஓடிய காதலனை எதிர்த்து ஒரு பெண் சட்டப்போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. இந்த சட்டப்போராட்டதில் வழக்கறிஞர் கேரக்டர்தான் முக்கியமானது. அந்த கேரக்டரில் சுஜாதா நடித்தார், காதலன் கேரக்டரில் மோகனும், காதலி கேரக்டரில் பூர்ணிமாவும் நடித்தார்கள்.
இந்த படத்தில் 40 சதவிகிதம் கோர்ட் காட்சிகள்தான், அதற்கு வசனம் எழுத அப்போது தகுதியான வசனகர்த்தாக்கள் இல்லை. அன்றைய படங்களில் கோர்ட் வசனங்கள் தூய தமிழில் பேசப்பட்டதால் அதை எழுத தகுதியான நபராக ஆரூர்தாஸ் கண்டறியப்பட்டு அழைத்து வரப்பட்டார். 17 வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லாத அவர் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
முதலில் படத்தில் ஆர்வமாக நடிக்க ஆரம்பித்த சுஜாதா கோர்ட் காட்சிகளையும் பக்க பக்கமான வசனங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார், வசனங்களை மனப்பாடம் செய்ய முடியாமல் திணறினார். அதீத பயிற்சி காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த தகவல் ஆரூர்தாசிற்கு தெரிய வந்ததும் சுஜாதாவை சந்தித்த தாஸ் அவரை அருகில் வைத்துக் கொண்டு கடினமான வசனங்களை எளிமையாக்கினார். எப்படி பேச வேண்டும், எப்படி மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு ஆரூர்தாசின் காலை தொட்டு வணங்கி மறுநாளில் இருந்து கோர்ட் காட்சிகளில் பிச்சு உதறினார்.
கடைசிநாள் படப்பிடிப்பில் கதைப்படி சுஜாதா வசனம் பேசியபடியே மயங்கி விழ வேண்டும், ஆனால் பேசி முடித்த பிறகு இயக்குனர் கட் சொன்ன பிறகும் சுஜாதா எழுந்திருக்கவில்லை. பின்னர்தான் அவர் நிஜமாகவே மயங்கி விழுந்தது தெரிந்தது.
அவரது கடின உழைப்புக்கு பெரிய வெற்றி கிடைத்தது. படம் வெள்ளி விழா கொண்டாடியது. படத்தின் திரைக்கதை வசனம் கூட ஒலிப்பதிவு தட்டுகளாக வெளிவந்தது. மீண்டும் ஒரு கண்ணாம்பாள் என்று மீடியாக்கள் பாராட்டியது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!