
திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னை வந்தார். மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். பாலுமகேந்திராவுக்குப் பின் வெற்றிமாறனுடம் இணைந்து பணியாற்றி வந்த இவர், பொல்லாதவன், கிடாரி போன்ற படங்களில் நடித்தார். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுத உதவினார்.
நீண்ட போராட்டத்திற்கு பின் கதிர், ஓவியா நடித்த மதயானை கூட்டம் படத்தை இயக்கினார். தென் தமிழகத்தில் இந்தப் படம் ஓரளவுக்கு பேசப்பட்டது. தொடர்ந்து சாந்தனு பாக்யராஜின் இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அடுத்து பேரும் போரும் என்ற படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறிவிட்டு திரும்பும் போது மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது. இவரின் திடீர் மரணம் திரையுலகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ளனர். அவரது உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மே 29ம் தேதி தான் நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த சோகம் மறையும் முன்பே விக்ரம் சுகுமாரனின் மறைவு திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!