
தாய்மை அடைந்தாலும் நடனமாடிய சமந்தா
சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த "மா இன்ட்டி பங்காரம்" தெலுங்குப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. உலகளவில் ரூ.80 கோடி வசூலை அந்தப் படம் கடந்துள்ளது. அந்தப் படத்தின் வெற்றி விழாவில் தான் தாய்மை அடைந்திருப்பதாக அறிவித்தார் சமந்தா.
இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பின் போதுதான் சமந்தா தாய்மை அடைந்திருக்கிறார். அது குறித்து படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டியிடம் சொல்லி இருக்கிறார். தாய்மை அடைந்த பின்பு படத்தின் நடனக் காட்சியிலும், சண்டைக் காட்சியிலும் கூட நடித்திருக்கிறார் சமந்தா.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி பேசுகையில், “படத்தின் "தசாடியா.." பாடல் படமாகி வந்த போது சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை. அனைத்து நட்சத்திரங்களும் ரெடியாக இருந்தார்கள். அப்பாடலை நான்கு நாட்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இரண்டு நாட்களில் முடிக்கச் சொன்னார்கள். சமந்தா ஒரு நாள் மட்டுமே அதன் படப்பிடிப்புக்கு வந்தார். அடுத்த நாள் அவர் வந்த போது, அவர் தாய்மை அடைந்திருப்பதைச் சொன்னார், எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
இதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்றார். அதன்பின் நான் நடன இயக்குனரிடம் சமந்தாவிற்கு ரிகர்சல் வேண்டாம். டேக்கின் போதே அவர் நடனமாடினால் போதும் என்றேன். உடல்நலம் சரியில்லை என்றால் உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்றும் சொன்னேன். அதன்பின்பு கார் சேசிங் காட்சிகளைக் கூட படமாக்கினோம். அவருக்காக மாலை வேளைகளில் படப்பிடிப்பை வைத்தேன். அப்போதுதான் வெயில் குறைவாக இருக்கும். படப்பிடிப்பு முடியும் வரை அவருக்கு அதிக சிரமம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!